இதுவரை 49 போட்டாகிவிட்டது, ஓரளவுக்கு வாக்குகளையும், பின்னூட்டங்களையும் பார்த்திருந்தும் எனக்கு போதித்த என்னுடைய "கமலா” டீச்சரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் மற்ற மொக்கைப் பதிவை இடுவதில் ஒரு குற்ற உணர்வு அரித்துக்கொண்டிருக்கிறது. ஆதலால் இந்தப் பதிவு முழுக்க முழுக்க கற்பனை கலக்காமல் கமலா டீச்சர் பற்றிய பதிவு, இதை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
நான் படித்தது ஒரு நடு நிலைப் பள்ளி, எட்டாவது வரை தான், மேல் நிலைப் பள்ளிக்கு ஊரை விட்டு இன்னும் வெளியே நான்கு மைல் போக வேண்டும். அந்த எட்டாவது வகுப்பின் கிளாஸ் டீச்சர் தான் கமலா டீச்சர். மொத்தம் உள்ள ஆறு பாடத்திற்கு, மூன்று டீச்சர்கள் தான். கமலா டீச்சர் எங்களுக்கு தமிழும், கணக்குப் பாடமும் எடுத்தார்கள். நல்ல இழுத்து பின்னிய தலை முடி, தங்க நிற தேகம், நெற்றியில் வட்டவடிவில் குங்குமப் பொட்டு. நல்ல துவைத்து நேர்த்தியாக கட்டிய பருத்திப் புடவை. மொத்தத்தில் டீச்சரைப் பார்த்தால் ஒரு மரியாதைத் தோன்றும்.
டீச்சர் தமிழ் சொல்லித்தரும் விதம் அலாதி, ஒரு செய்யுளை எடுத்தால், முதலில் செய்யுளை ஒரு முறை சொல்லி, பதவுரை, பின்பு பொழிப்புரை என்று இரண்டு முறை சொல்லுவார்கள். பின்பு வகுப்பில் உள்ள முதல் வரிசைப் பையன்களில் ஒரு இரண்டு பேர் பெண்களில் ஒரு இரண்டு பேரை திரும்ப மேற்படி வரிசையில் திரும்ப சொல்ல, விருப்பமுள்ள மற்ற மாணவர்கள் அதை கவனித்தால் போதும், குறிப்பு எடுக்கத்தேவையில்லை. வேணுமென்றால் கடினமான வார்த்தைகளின் பொருட்களை பென்சிலினால் பாடப்புத்தகத்தில் குறித்துக் கொண்டால் போதும். புரியாத மாணவர்களுக்கு எத்தனை முறை கேட்டலும், கோபப்படாமல் விளக்குவார்கள். டியூஷன் விவகாரமெல்லாம் டீச்சரிடம் கிடையாது. மற்ற டீச்சர்கள் இரண்டாவது முறை கேட்டாலே பெற்றோரை கூப்பிட்டு டுஷனுக்கு அச்சாரம் போட்டு விடுவார்கள். இதற்கு நமக்கு வீட்டில் பூசை கிடைக்கும், வீனா செலவு வைத்ததற்காக, அது தனிக் கதை.
தேடிச்சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
வாடித் துன்பம் மிக உழன்று,
பிறர் வாடப் பல இன்னல்கள் செய்து,
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி,
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்,
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ
இதை கமலா டீச்சர் சொல்லித்தரும் பொழுது, கவியின் வேட்கையை டீச்சரிடம் காணலாம். டீச்சரின் கையெழுத்து ஒரு கை தேர்ந்த "calligraphy". அடுத்த பாட ஆசிரியர் வரும் முன் வகுப்பு லீடரான நான் கரும்பலகையை சுத்தம் செய்ய வேண்டும். கமலா டீச்சர் வகுப்பு முடிந்தவுடன் அதை செய்யும் பொழுது என்னை அறியாமல் வரும் தயக்கத்தை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். டீச்சரின் கணக்குப் பயிற்சி, எந்தப் பரீட்சையிலும் நூறு மார்க் வாங்க வைத்துவிடும். முக்கியமான செய்தி கமலா டீச்சர் மற்ற ஆசிரியர்கள் போல பிரம்பு கொண்டு வரமாட்டார்கள். மற்ற ஆசிரியர்கள் வருமுன், பிரம்பு வகுப்பில் நுழைந்துவிடும். கமலா டீச்சர் யாரையும் கடிந்தோ, அடித்தோ நாங்கள் பார்த்ததில்லை. மாணவர்களிடம் சொந்த வேலை வாங்கமாட்டார்கள். "காட்டாள் வெங்கிடு" வாத்தியார் மதிய இடை வேளைக்கு இருபது நிமிடம் முன்பாகவே ஓட்டலில் தோசை வாங்க இருவரை அனுப்பிவிடுவார்.
நான் எட்டாம் வகுப்பு முடிந்து, மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, வேலை என்று கால ஓட்டத்தில் கரைந்த பின்னர், ஒரு பதினைந்து வருடம் கழித்து ஒரு நண்பனுடன் வெளியே சென்று கொண்டிருக்கும் பொழுது கமலா டீச்சர் தெருவில் நடந்து வருவதைப் பார்த்தேன். என்னைப் போல கமலா டீச்சரை கொண்டாடியவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். அவர்களின் முன்பு சென்று வணக்கம் சொல்லி பேசியிருக்க வேண்டும். நான் அவ்வாறு செய்யவில்லை காரணம், என் கையிலிருந்த பாழாய்ப்போன "சிகரெட்". அவர்களின் பார்வையைத் தவிர்த்து வேறுபுறம் திரும்பிக் கொண்டேன்.
பிறகு நான் வெளிநாடு வேலை என்று டொலர்களையும், பௌண்ட்சையும் துரத்தி ஒரு முறை விடுமுறையில் ஊருக்கு வந்த பொழுது எதேச்சையாக நண்பனிடம் கமலா டீச்சரைப் பற்றி பேச்சு வந்த பொழுது, கமலா டீச்சர் இப்பொழுது, கணவரை இழந்து, தன் ஒரே பிள்ளையாலும் கை விடப்பட்டு கஷ்டப் பட்டுக்கொண்டிருப்பதாக சொன்னான், இவ்வளவு சொன்னவனுக்கு டீச்சரின் தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை.
அன்று நான் வீடு வந்து என் மனைவியிடம் கமலா டீச்சரை ஸ்லாகித்து, மேலும் டீச்சரின் இன்றைய நிலைமையை சொன்ன பொழுது "அவள் நீயெல்லாம் ஒரு மனுஷனா" என்ற பார்வைப் பார்த்தாள். மேலும் ஒரு விஷயத்தை அவளிடம் சொன்னால் நான் மறந்தாலும் அவள் விட மாட்டாள். திரும்ப திரும்ப கமலா டீச்சரின் இருப்பிடத்தைக் கேட்டு நச்சரித்துக்கொண்டே இருப்பாள். மேலும் “அந்தப் பாழாய்ப்போன சிகரெட் பழக்கம் இல்லாமல் இருந்தால் டீச்சரைப் பார்த்து இருப்பீர்கள் இல்லையா, விட்டுத்தொலைங்களேன்” என்று உபதேசம் வேறு. ஆதலால் இருபது வருடப் புகைப் பழக்கத்தை அப்போது விட்டேன்.
ஆனால் கமலா டீச்சரைப் பற்றி ஒவ்வொருமுறை ஊருக்கு போகும் போதும் வகுப்புத் தோழர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இருப்பிடம் தெரியவில்லை. மனைவியோ எப்போதாவது டீச்சரைப் பற்றி ஆரம்பித்து, “எவ்வளவோ பேருக்கு ஏதேதோ உதவி செய்கிறீர்கள், டீச்சரைக் கண்டுபிடித்து ஏதாவது செய்ய முடியவில்லையே” என்று ஆதங்கப் படுவாள்.
அவளுக்குத் தெரியாது கமலா டீச்சரின் "தன்மானமும், கொள்கைப்பிடிப்பும்"
Post Comment