Tuesday, 2 June 2009

அமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப் போடுகிறார்கள்)


அமராவதி எங்கள் வீட்டு வேலைக்காரி. குடுத்த பத்து ருபாய் சம்பளத்திற்கு காலை, மாலை இரண்டு வேளையும் வந்து பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, வீட்டைக் கூட்டி, மெழுகி, வாசலில் அழகாக கோலம் போட்டு விட்டுப் போவாள். அம்மா ஏதாவது சாபிடக்கொடுத்தால் அதை ஒரு பழைய பாத்திரத்தில் வைத்து தன் கணவருக்கும் எடுத்து செல்வாள். அவளுக்கு வீட்டில் முழு சுதந்திரம் உண்டு, சுருக்கமாக அவள் "அமரா".

அமரா நல்ல கரிய நிற அழகி. உண்மையில் பல நடிகைகள் இவளிடம் பிச்சை வாங்க வேண்டும். வரிசையான பற்கள், கன்றுக்குட்டி கண்கள், நல்ல வாளிப்பான தேகம். என்னைப் பார்க்க வரும் நண்பர்கள் எல்லோருக்கும் இவளின் மேல் ஒரு கண் என்றால் அது மிகையாகது. உள்ளத்தில் மிகவும் வெண்மை. நாங்கள் அவளை செய்யும் கிண்டல் கேலி எல்லாவற்றிற்கும் ஒரு புன்சிரிப்புதான். சிரிக்கும் பொழுது அவள் முன் எந்த உலக அழகியும் நிற்க முடியாது என்றால் அது இந்த ஜென்மத்தில் ஒரு "under statement"

ஒரு முறை அவள் வந்த பொழுது அம்மா வீட்டில் இல்லாததால் நான் பாத்திரங்களை உள்ளிலிருந்து எடுத்து வந்து வைத்தேன். அதிலிருந்து அவள் எப்போது வந்தாலும் வீட்டில் யாரிருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எதிரில் இருந்தால் "ராசா சாமான் போடு ராசா, தேய்க்கிறேன் என்பாள்". அவளுக்கு இதனுடைய உள் அர்த்தம் தெரியாது. அமரா “பாத்திரம் போடு என்று சொல்” என்று சொன்னாலும் கேட்பதில்லை. ஒரு முறை நான் எனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கும் போதும் அவ்வாறு சொல்ல நான் அவளைக் கடிந்துக் கொண்டேன். என் கோபம் அவளுக்கு விளையாட்டாகி விட்டது போலும். எப்போது என்னைப் பாத்தாலும் "சாமான் போடு ராசா" என்று சொல்லிவிட்டு இடி இடி என்று சிரிப்பாள். நிற்க எதையோ சொல்லவந்து எதோ சொல்லிகொண்டிருக்கிறேன். இந்தக் கதை அமரா வோட்டு போட்டதைப் பற்றி.

அந்த முறை பாராளுமன்றத்திற்கு தேர்தல் வந்தது. ஊரே அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக திரண்டிருந்த காலம். இப்போது போல நிறையக் கட்சிகள் எல்லாம் கிடையாது. இரண்டு கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி. புதியக் கட்சிதான் எதிர்க் கட்சி. எல்லாப் பெருந்தலைவர்களும் ஒன்று திரண்ட மக்கள் கட்சி. இளைஞர் பட்டாளம் எல்லோரும் "அவசர" நிலைக்குப் பிறகு மக்கள் கட்சிக்கு ஆதரவாக திரண்டிருந்தனர்.
அமராவுககு எந்த கட்சிக்கு வோட்டு போடுவது என்று குழப்பம். ராசா எந்த சின்னத்துல ராசாக் குத்தனும் என்று என்னிடம் கேட்டதால், நான் கட்சியின் சின்னத்தை சொல்லி போடச் சொன்னேன், “ஏன் ராசா மாடு சின்னம் காட்றாங்களே ராசா மாடுதானே நமக்கு பால் தருது” என்றாள். அதில்லை அமரா நமக்கு சோறு போடறது யாரு "உழவர்கள்தானே" அதால "ஏர் உழவனுக்கு போடு’ என்றேன் . தேர்தல் நாள் வரை இதே கேள்விதான். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தேர்தல் நாள் வந்தது, அமரா அன்று மாலை வீட்டுக்கு வந்த பொழுது, என்ன அமரா "ஏர் உழவணில" குத்தினயா என்று கேட்க, இல்ல ராசா "மயில் சின்னத்துல" போட்டுட்டேன் ராசா என்றாள். நான் ஏன் என்று கேட்டதற்கு “மயில் முருவரோட வாகனம் அவர் இல்லாங்காட்டி பசுவும் கிடையாது உழவனுக்கும் கிடையாது” என்று என்னை திக்கு முக்காட வைத்தாள்.

அந்த மயில் சின்னத்துல நின்றது எங்கள் ஊரில் உள்ள தேங்காய் மூடி வக்கீல் ஒருவர். தேர்தல் முடிவு தெரிந்த பொழுது மயில் சின்னத்தில் நின்ற வக்கீலுக்கு மொத்தம் பதிமூன்று வாக்குகள். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் மொத்தம் பண்ணிரெண்டு பேர்.

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

Suresh said...

போட்டோ சூப்பர் ஹீ ஹீ

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.