Wednesday, 3 June 2009

மீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாமல் வந்த கதை













சென்னையில் ஒரு பொதுத்துறையில் வேலையில் சேர்ந்த நேரம். அப்போது தான் எனக்கு வோட்டுரிமை வந்து நான் ஓட்டுப் போடப் போகும் முதல் தேர்தல். தமிழ் நாட்டின் சட்டமன்றத்துக்கான தேர்தல் அது. ஒரு கட்சி பிளவு பட்டு இரண்டு கட்சிகளாகி தனி தனியாக தேர்தலை சந்திக்கும் நேரம். ஊரெங்கும் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து தேர்தல் நாள். அன்று எனக்கு காலை சிப்ட். வீடு திரும்ப மூன்றரை மணி ஆகி விட்டது. வீட்டுக்கு வந்தவுடன் முகம் கழுவி, காப்பி சாப்பிட்டு விட்டு, வோட்டுச் சாவடிக்கு கிளம்பினேன்.
வாசலைக் கடக்கும் போது, என் வீட்டு பெரிசு "எங்கடாக் கிளம்பிட்டே" என்று ஒரு குரல். "ஹுஉம் ஓட்டுப் போடா நைனா". கம்முன்னு போடா, போய் வூட்டுக்கு கறி வாங்கிக்கினு வா" என்றது. "அப்பாலே வாங்கியாறேன்" என்று நான் சொன்னதற்கு, "த வோட்டுப் போடா போவாதே போய் கறி வாங்கிக்கினு வாடா, சொல்றேன்லே". என்றது. நான் இந்த முறை பதில் ஏதும் சொல்லாமல், ஓட்டுச் சாவடியை நோக்கி நடையைக் கட்டினேன்.


ஓட்டுச் சாவடி முன்னால் உள்ள எதோ ஒருக் கட்சி கொட்டகையில் ஒரு ஐந்து ஆறு ஆட்கள் ஒருக் குறிப்பேட்டைப் பார்த்து, துண்டு சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அடையாள அட்டையெல்லாம் கிடையாது. அவர்களிடம் என் பெயரையும் விலாசத்தையும் சொல்லி சீட்டு வாங்கலாமே என்று அணுகினேன். அவர்கள் என்னுடைய விவரத்தைக் கேட்டவுடன், "உன் வோட்டப் போட்டாச்சுப்பா". இந்தா இந்த சீட எட்துகின்னு எங்க கட்சிக்குப் போடு, ஆபிசெர் கேட்டா உன் பேரு கபாலி, பத்தாம் நெம்பெர் வீடு, எல்லையம்மா கோயில் தெரு, அப்பா பேரு முனுசாமி, அம்மா பேரு பர்வதம்" என்ன தெரிஞ்சுகினியா, என்று சொல்லி ஒருத்தன் வாப்பா என்று ஒரு சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வோட்டு சாவடியில் இறக்கி விட்டு, கண்ணா நல்லா ஞாபகம் வச்சிக்கோ என்று சொல்லி போய் விட்டான். எனக்கு இன்னாடா இவன் நம்ம அட்ரஸ் ஆளையே மாத்திட்டானே என்ற யோசனையுடன் நடந்தேன். ஒரு பள்ளிகூடத்தில் இரண்டு வகுப்புகளை இணைத்து ஓட்டுச் சாவடி ஆக்கியிருந்தார்கள்.

ஒட்டுசாவடியின் முன்பு ஒரு நீண்ட வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் இருந்தவர் கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்து "கிச்னமூர்த்தி, அப்பா பேரு வத்தச்சரி, அம்மா பேரு நாய்ராணி (நாராயணி)" என்று முனுமுத்துக் கொண்டிருந்தார். எனக்கு இப்போது நான் செய்யப் போகும் செயலின் குற்ற உணர்வு தாக்க ஆரம்பித்தது. ஆதலால் நான் மெல்ல வரிசையை விட்டு அகன்று பள்ளியின் வாயிலுக்கு வந்தேன், அங்கு என்னை கொண்டுவிட்டவன் நின்று கொண்டு "இன்னா ஒட்டு போடலை, தா சீட்டைக் கொடு, வந்துட்டானுங்கப்பா" என்று என்னை ஒரு முறைத்து விட்டு சென்றான்.
திரும்பி நான் வீட்டில் உள்ளே போகும் முன்பு பெரிசு "இன்னாடா வோட்டு போட்டியாடா" என்றது.

“இல்லை நைனா எவனோ என் பேர்ல போட்டுட்டான்" என்றேன்.

“அதான் நான் அப்பவே சொன்னேன். உன் பேர்ல காலையிலே பதினோரு மணிக்கு நான் போ சொல்லவே குத்திட்டானுங்க. அவனுகளுக்கு தெரியும் நீ வேலைக்கு போய்கிறேன்னு. தோடா என்னமா கள்ள வோட்டு போடறானுங்க, இனி நாலு மணி ஆச்சின்னா, அல்லாம் கள்ள வோட்டு தான்" என்றார் நைனா.


இந்த வயதிலும் நாட்டு நடப்பு எல்லாம் சரியாக தெரிந்து கொண்ட நைனாவை வியந்தேன்.
அதன் பின்பு நான் பிழைப்புக்கு வேண்டி வெளி நாடு வந்து "NRI" ஆகி ஓட்டுரிமை இல்லாமல் இன்று வரை என்னுடைய ஜனநாயகக் கடமையை செய்ய முடியவில்லை.

நீங்களாவது ஓட்டுப் போடுங்கப்பு.

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

கலையரசன் said...

மச்சி சோக்கா எலுதுறியே நீ..
மயின்டுல வச்சிகிறேன்!

அப்பாலிகா கண்டுகறேன்..
இப்ப பாலோ பண்றேன்..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.