Monday, 16 November 2009

விபத்து


ரமணன் அன்று காலையில் எழுந்தவுடன், அந்த பல்லாவரம் பெண்ணின் நியாபகம் வந்தது. இன்று அவளிடம் நிச்சயம் பெயர் கேட்டுப் பேசிவிடவேண்டும். மாம்பலத்தில் ஏறும் பெண்ணை சிறிது நாட்களாகக் காணவில்லை, படிப்பை முடித்து விட்டாளா இல்லை நிறுத்தி விட்டாளா தெரியவில்லை.

ரமணன் தாம்பரத்தில் உள்ளவன். தொடர் வண்டி நிலையத்திற்கு காலை எட்டுமணிக்கே வந்து விடுவான். எட்டு மணி இருபது நிமிடத்திற்கு புறப்படும் வண்டியில் தான் பிரயாணம் செய்வான். வண்டி எவ்வளவு காலியாக இருந்தாலும் மகளிர் பெட்டிக்கு அடுத்தப் பெட்டியின் கதவருகில் நின்று கொண்டு தலைமுடி காற்றில் பறக்க வருவான். ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி வண்டி கிளம்பியவுடன் ஓடிசென்றுதான் ஏறுவான்.

அவன் அவ்வாறு சாகசம் செய்வதை மகளிர்ப் பெட்டியில் உள்ளப் பெண்கள் வேடிக்கைப் பார்ப்பதால் அவன் சாகசங்களின் எல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. அன்றும் வழக்கம்போல் பல்லாவரம் நிலையம் வரும் முன்பே அவன் தினமும் பார்க்கும் அந்த பெண் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். வண்டி நின்றவுடன் மகளிர் பெட்டியில் ஏறி கதவின் சன்னல் ஓரமான இருக்கையில் அமர்ந்தாள். அங்கிருந்து ரமணனை கடைக்கண்ணால் பார்த்தாள்.

வண்டி மீனம்பாக்கம், பழவந்தாங்கல், மவுண்ட் தாண்டி கிண்டியில் நுழைந்தது. ஒரு வயது முதிர்ந்தவர் ரமணன் ஏறும் பெட்டியில் கதவருகே உள்ள சன்னலின் ஓரமாக இருக்கையில் அமர்ந்தார். கிண்டியில் வண்டி கிளம்பியவுடன் ரமணன் வண்டியுடன் ஓடி வந்து ஏறுவதை கவனித்தார். வண்டி சைதாபெட் வரும்வரை ரமணன் கதவுப் பிடியை பிடித்துக் கொண்டு தன் உடல் முழுவதும் வண்டிக்கு வெளியே வைத்துக் கொண்டு அபாயகரமாக பயணிப்பது அவருக்கு உள்ளே ஒரு அச்சத்தை உண்டாக்கியது.

வண்டி கோடம்பாக்கம் தாண்டியதும் வழக்கம் போல் ரமணன் வண்டி கிளம்பியவுடன் ஓடி வந்து ஏறி, மகளிர் பெட்டியை எட்டி ஒருப் பார்வை பார்த்து தலையைக் கோதிக் கொண்டான். வயது முதிர்ந்தவர் ரமணன் தன் பக்கம் பார்வை பார்த்தபொழுது உள்ளே வர சொல்லி சைகை செய்தார். ரமணன் அதை மதிக்கவில்லை. மற்றும் ஒரு முறை அதே போல் செய்தார், அவன் அவரை ஒரு ஏளனப் பார்வை பார்த்து முகத்தை திருப்பி மகளிர்ப் பக்கம் பார்வை வைத்தான்.

வண்டி நுங்கம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன், அவன் கை தன் சன்னலின் அருகே உள்ளதை கவனித்து, அவன் கையை தட்டி உள்ளே வர சைகை செய்தார். இப்பொழுது ரமணணின் பார்வையில் ஒரு எரிச்சல், அவரை முறைத்து விட்டு தன் பார்வையை மகளிர் பெட்டியின் பக்கம் திருப்பிக் கொண்டான்.

வண்டி சேத்துப்பட்டு நிலையத்தை வளைவில் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் ரமணன் மின்சாரக் கம்பத்தில் அடிபட்டு விழுவதை முதிர்ந்தவர் கவனித்தார். ஒரு கலவரத்துடன் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில்வே சிப்பந்திகள் சிலரை கூட்டிக்கொண்டு ரமணன் விழுந்த இடத்திற்கு விரைந்தார்.

இந்தச் சம்பவம் நடந்து, ஒரு மூன்று வாரம் கழித்து, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த ரமணன் கோமாவில் இருந்து மீண்டான். அருகிலிருந்த அவன் அம்மாவை நியாபகத்தில் கொண்டு வர மிகக் கடினப்பட்டான்.

அவனை கொண்டு மருத்துவமனையில் சேர்த்து, தக்க தருணத்தில் அவனை பிழைக்க வைத்த முதியவர், அன்று இரவு மாரடைப்பால் இறந்தது அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

VISA said...

Last line super touch.

கலகலப்ரியா said...

தேவையான இடுகை..! நல்ல புனைவு..!

ஹேமா said...

கும்மாச்சி,மனதைத் தொட்ட கதை ஒன்று வாசித்த நிறைவு.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.