Pages

Tuesday, 26 January 2010

நேத்ரா


நேத்ரா என் பள்ளித் தோழி. நான்காம் வகுப்பில் நாங்கள் இருக்கும் பொழுது திருச்சியிலிருந்து சென்னை வந்து புதியதாக சேர்ந்தாள். அவள் வீடு என் வீட்டிலிருந்து ஒரு நான்கு வீடு தள்ளி இருந்தது. மிகவும் சூட்டிகையானப் பெண். நானும் அவளும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம்.

அவளுக்கு தெருவில் தோழிகள் கிடையாது. அவள் வயது பெண்கள் எங்கள் தெருவில் அவ்வளவாக இல்லை. ஆதலால் நாங்கள் விளையாடும் பொழுது தன்னையும் சேர்த்துக் கொள்ளச் சொல்வாள். நாங்கள் ஆண்பிள்ளைகள் விளையாட்டு என்பதால் அவளை சேர்த்துக் கொள்ளமாட்டோம். ஆனால் எங்கள் விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பாள்.

எங்கள் வகுப்பில் நேத்ராதான் முதல் ரேங்க். இரண்டாம் ரேங்க் எடுக்கும் எனக்கும் அவளுக்கும் நிறைய மார்க்குகள் வித்யாசம் இருக்கும். ஆதலால் எனக்கு அவள் மேல் ஒரு இனம் தெரியாத பொறாமை உண்டு. அதை நினைத்து இப்பொழுது வருந்தாத நாட்கள் இல்லை. அதற்கு காரணம் உண்டு, சொல்கிறேன்.

நேத்ராவுக்கு அப்பா கிடையாது. அவள் வீட்டில் அவள் அம்மாவும் அவள் பாட்டியும் தான். அவள் அப்பா திருச்சியில் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். ஆதலால் தான் அவளும் அவள் அம்மாவும் சென்னைக்கு தன் பாட்டி வீட்டுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். அவள் வீட்டில் எனக்கு தனி மரியாதை உண்டு. ஒன்பதாம் வகுப்பு வரை வந்தும் அவளை என்னால் ஒரு தடவை கூட மிஞ்சி முதல் ரேங்க் வாங்க முடியவில்லை. அதை நான் சொல்லி வருத்தப் பட்டால் கூட ஒரு வித முதிர்ச்சியுடன் என்னை தேற்றுவாள்.

போடா நீ ரொம்ப புத்தி சாலி, என்னோட மார்க் எல்லாம் ஒரு பொருள் இல்லை என்பாள். டேய் எனக்கு உன்னைத் தவிர யாரும் நண்பர்கள் கிடையாது. அதால இந்த ரேங்க் விஷயத்தை வைத்துக் கொண்டு என்னை வெறுக்காதே என்பாள். என் வயதுப் பையன்கள் நான் நேத்ராவுடம் பழகுவதை வைத்து கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். இருந்தாலும் நான் நேத்ராவுடன் பள்ளிக்கு செல்வதை விடவில்லை.

ஒன்பதாம் வகுப்பில் அரை பரீட்சை வந்தது. இந்த முறை எப்படியும் நேத்ராவை முந்தி முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பரீட்சை முடிந்து விடுமுறைக் கழிந்த பின் முதல் தினம் பள்ளிக்கு செல்லத் தயாரானேன். அன்றுதான் ப்ரோக்ரேஸ் ரிப்போர்ட் கொடுப்பார்கள். நேத்ராவை கூட்டிக் கொண்டு செல்லலாம் என்று அவள் வீடு நெருங்கும் பொழுது அவள் வீட்டில் ஒரே கூட்டம். எல்லோரும் சோகமாக இருந்தார்கள். அங்கு இருந்தவர்கள் என்னை போ தம்பி பள்ளிக்கூடம் போகிற வழியில் இங்கு என்ன வேடிக்கை என்று விரட்டி விட்டார்கள்.

ஆசிரியர் ரிப்போர்ட் கொடுத்தார். இந்த முறை நான்தான் முதல் ரேங்க். நேத்ரா இரண்டாவது ரேங்க். எங்கள் இருவருக்கும் வித்யாசம் ஒரு மதிப்பெண் தான். நேத்ரா இன்று பள்ளிக்கு வராததால் அவள் ரிபோர்டையும் நான் வாங்கிக் கொண்டேன்.

பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்லுமுன் அவள் வீட்டுக்கு போனேன். என்னை பார்த்தவுடன் அவள் பாட்டியும் அவள் அம்மாவும்,

“கோபி நேத்ரா இல்லேடா, சாமிகிட்டே போயிட்டா” என்று அழுதார்கள்.

நான் உணர்ந்த முதல் மரணம் அது. இன்றும் என்னை நடுத்தூகத்தில் வியர்க்க வைக்கிறது.

10 comments:

  1. சே மனசை ரொம்ப உருக்கிவிட்டது .
    ரொம்ப வருத்தமாக உள்ளது .
    என்ன காரணத்தினாலே நேத்ரா இறந்தாள் , சொல்லவில்லையே

    ReplyDelete
  2. இளமை கால நினைவுகள் சில..
    காலங்கள் கடந்தாலும்..
    நம்மைக் கடந்து செல்வதில்லை..

    ReplyDelete
  3. இது உண்மையா? கதையா?
    கதையாகவே இருக்கட்டும் என்று நினைக்க வைக்கிறது. இந்த மாதிரி இள வயது மரணங்கள் ஜீரணிக்க இயலாத தாய் இருக்கிறது.
    உங்கள் எழுது எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. என்னாயிற்று நேத்ராவிற்கு.

    ReplyDelete
  5. நேத்ரா இந்தப் பெயர் மனதை விட்டு அகல சில நாட்கள் ஆகும்...

    ReplyDelete
  6. தாங்க முடியல கும்மாச்சி. தூக்கிவாரிப் போட்ட முடிவு.

    ReplyDelete
  7. நேத்ராவைப் பற்றிய இந்தப் பதிவு இத்துணை மனங்களைப் பாதித்திருக்கிறது.
    நேத்ரா உன் தனிமை இன்னும் என்னை துரத்திக்கொண்டிருக்கிறது. இந்தப் பதிவு நான் முடிந்தவரை கற்பனை கலக்காமல் எழுதினேன். என் மனதில் இருந்த பாரம் ஓரளவுக்கு இறக்கி வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. இளமை நினைவுகள் இறப்பதில்லை என்றுமே.
    அதுவும் பதிந்த சில விஷயங்கள் அப்படியே படமாக ஓடிக்கொண்டிருக்கும்.நாங்களும் வாழ்வோடு !

    ReplyDelete
  9. கலங்கவைத்துவிட்டது நேத்ராவின் முடிவு.
    நானும் என்னுடைய தோழியொருத்தியை எட்டாவதுபடிக்கையில் இழந்தேன். இன்றும் நினைத்தால் கண்ணீர் வந்துவிடும்.

    ReplyDelete
  10. just now i found ur site from tamilish.com. keep rocking man

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.