கவிதை என்று எதை சொல்வது?
வார்த்தைகளைக் கோர்த்து வடிவமைத்து
பொருளிலே உட்பொருள் வைத்து
விளங்கச் சொல்வது கவிதையா?, இல்லை
வார்த்தைகளின் தொடர்பறுத்து,
உரை நடையை உடைத்துப் போட்டு
வாசகனின் மூளையை வறுத்தெடுத்து
விளங்காத புதிர் செய்வதையா?, இல்லை
“தளை” பார்த்து “சீர்” அமைத்து
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்
வெண்பா, கலிப்பா என கிண்டி
புரியாத புதிர் செய்வதா? , இல்லை
யாப்பிலக்கணம் பொருந்தாத
வசனக்கவி, புதுக் கவிதை
ஹைக்கூ, லிமரிக் வடிவ
எளிய வார்த்தைக் கோர்வைகளா?, இல்லை
கந்தனைகான கார்த்திகைக்கு வந்தேன்
உன்னைக் கண்டேன் ஊருக்கு செல்லேன் என்ற
நாட்டுப் புறக் கவிஞனின் எளிமையான
புரியும் மண்வாசக் கவிதைகளா? இல்லை,
குனிந்து நிமிர்ந்து கூடம் பெருக்கினாள்,
கூடம் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு
என்ற நகர நையாண்டி வகை
புதுக் கவிதைகளா? இல்லை,
எழுதும் கவிஞனின் அறிவும்
எளிமையான வார்த்தைகளும்
நயம் கொண்டு சேர்த்து
வாசகனின் எண்ண ஓட்டத்தில்
நிலைத்து நிற்கின்ற
சலனத்தை கொடுக்கும்
கவிதைகளா?
கவிதை என்று
எதை சொல்வது?
22 comments:
நீர் புலவர்! உண்மையிலேயே இது மிக அருமையான ஒரு கவிதை! கவிதையென்ன என்று கேட்கிற கவிதை! எல்லாக் கேள்விகளும் பொருத்தமானவை. பாராட்டுக்கள்.
உங்களுக்கு இருக்கிற இதே சந்தேகங்கள் எனக்கும் இருக்கிறது. அதனால் எல்லாத்தையுமே உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்து விடுவதாய் முடிவு செய்து விட்டேன். :-))
மனசுல பட்டத சொல்றேன்னு போட்டுருக்கீங்க. ஆனா நம்ம புது பதிவுல உங்கள கானோமே?
சேட்டை பின்னூட்டம் அசத்தல், வருகைக்கு நன்றி.
அண்ணாமலையான் அவர்களே, கட்டாயம் வருகிறேன்
கவிதை(?) நல்லா இருக்கு..ஹ்ம்ம்..யாருக்காவது பதில் தெரியுமா?
அய்யா கும்மாச்சி .. ..
கவிதை எழுத , எனக்கு எப்போது சொல்லிக்கொடுப்பீர்கள்..
எனது புஜம் துடிக்கிறது..
கவிதைக்கே கேள்வி தொடுத்து கேள்வியையே கவிதையாக்கியது அழகு..
நன்றி தமிழரசி
"எதைச் சொல்வது?"
கவிதை ஆராய்ச்சி நன்றாக இருக்கிறது.
அருமை.
இதுவும் கவிதைதான்.
நீங்கள் சொன்னபடி வார்த்தை அலங்காரங்கள் இலக்கணம் வட்டார வழக்கு இவையெல்லாம் இல்லாமலும் படிக்கும் போது மனதை ஏதோ ஒரு காரணத்துக்குத் தொட்டுச் செல்வதும் கவிதைதான்.
உங்களதும் அப்படியே.காரணம் நீங்க சொல்ல நினைத்த கருப் பொருள்.
எதுதான் கவிதை?
கவிதை குறித்த கேள்வியும் கவிதையாய்............ அசத்தல்.
நைசா எங்களை கிண்டல் பண்ற மாதிரி தெரியுது. இருந்தாலும் ஓகே..
கிண்டல் இல்லை நண்பா, மனதில் நிற்கும் எல்லாமே கவிதைகள் தான்.
பதிவுலகில் கவிதை என்ற தலைப்பில் வரும் எல்லாமே கவிதை தான்.
எது கவிதை?
தண்டவாள இரயில்
நகர்ந்து போனபின்பும்
நகராமல் நின்று
வேடிக்கைப் பார்க்கும்
குழந்தையைப் போல
படித்த வாசகனை
முடித்தபின் நிறுத்துவதுதான்
கவிதை...
‘எது கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கே நடத்த வேண்டும் என்பது என் அவா, அதுவும் இங்கிருக்கும் (என்னைப்போன்ற) இளைய கவிஞர்களுடன்! (சென்னைல இருபவங்க ஆர்வமிருந்தா சொல்லுங்க - vijay10.n@gmail.com)
நல்ல கவிதை “கும்மாச்சி” (எங்கிருந்துப்பா இந்த மாதிரிலாம் பேர் வைக்குறீங்க? எனக்கு சிக்கமாட்டேங்குதே! :) - அத்துமீறி தங்கள் வலையில் என் கவிதையையும் இட்டு, கருத்தரங்கிற்கு அழைப்பும்விட்டு, இத்துனை பெரிய கருத்துரையும் இட்டதற்கு பொறுத்தருள்க!
நான் விஜய்
விஜய் பின்னூட்டத்தில் அருமையான கவிதை போட்டு அசத்தியிருக்கீங்க. வாழ்த்துகள்.
சென்னை வரும்பொழுது சந்திக்கலாம்.
kavithaikal ellaam kavithaikal thaan. purithal avaravar sakthikku . ungkal kavithai puriyum, puriya vaikum puthu kavithai .
"வாசகனின் என்ன ஓட்டத்தில்" என்பதை
"வாசகனின் எண்ண ஓட்டத்தில்" என
மாற்றினால் அழகு என்பேன்!
"புரியும் மன்வாசக் கவிதைகளா?" என்பதை
"புரியும் மண்வாசக் கவிதைகளா?" என
மாற்றினால் அழகு என்பேன்!
கவிதை என்று எதைச் சொல்வது? - படியுங்க...
http://paapunaya.blogspot.com/2014/07/blog-post.html
என்ற தலைப்பில் எனது தளத்தில்
தங்கள் பதிவைப் பகிர்ந்துள்ளேன்!
ஜீவலிங்கம் பிழையை சுட்டிகாட்டியதற்கு நன்றி, தவறு திருத்தப்பட்டுவிட்டது.
எது கவிதை என்ற கேள்வியே கவிதையாய் - அருமை
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.