நாங்கள் அந்த வீட்டில் எதிரில் உள்ள காலி மனையில் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்போம். அந்தவீட்டு வாசற்படிதான் எங்கள் பவிலியன். அந்த வீடு வெகு நாட்களாகப் பூட்டியிருந்தது.
பின்பு அந்த வீட்டிற்கு ஒரு விதவை தாயும், இரண்டு இளைஞரும் குடிவந்தார்கள். மூத்தவனுக்கு ஒரு இருபத்தெட்டு வயதிருக்கும். இளையவன் அவனைவிடன் ஒரு இரண்டு மூன்று வயது சிறியவனாக இருப்பான்.
மூத்தவன் காலையில் வேலைக்கு கிளம்பி இரவில் தாமதமாக வருவான். இரண்டாமவன் தான் “கோவிந்து”. கொஞ்சம் மனவளர்ச்சிக் குன்றியவன். வேலைக்கு ஏதும் செல்லவில்லை. அவனுக்கு அதற்குரிய உந்துதலோ தகுதியோ இருப்பதாகத் தெரியவில்லை. சம்பந்தமில்லாமல் பேசுவான். அவனின் வாயைக் கிண்டுவதுதான் எங்கள் கூட்டத்தில் உள்ள சில விடலைகளின் பொழுது போக்கு.
பிறகு அவன் அண்ணனுக்கு கல்யாணமாகி அவர்கள் வீட்டில் ஒரு புதிய பெண்மணி அவள் அண்ணியும் வந்தாள். நல்ல அழகாக இருப்பாள். அந்த மன்னிய சைட் அடிக்கவே எங்கள் டீமில் உள்ள சில விடலைகள் முதல் பாலில் அவுட் ஆகி பவிலயொனுக்கு திரும்பி விடுவார்கள், போதாதற்கு நான் பேட் செய்யப் போகும் பொழுது “டேய் நிதானமா ஆடிட்டு வா, சீக்கிரம் அவுட் ஆனேன்னா நீ அடுத்த மாட்சில் கிடையாது என்பார்கள்”.
அந்த கோவிந்துவின் வாயை அநியாயத்திற்கு கிண்டுவார்கள், அவனும் உளறிக் கொண்டிருப்பான். எனக்குப் பாவமாக இருக்கும்.
வெங்குட்டு எல்லை மீறி அவனிடம் கேள்விகள் கேட்பான்.
கோவிந்து உங்க அண்ணா ஆபீசில் வந்தவுடன் என்ன செய்வான்?
கோவிந்து இதில் உள்ள விஷமம் புரியாமல் பேப்பர் படிப்பான் சாப்பிடுவான் என்றெல்லாம் சொல்லிகொண்டிருப்பான். வெங்குட்டு மேலும் விடாமல் அப்புறம் அப்புறம் என்று படுக்கையறை விஷயத்திற்கு வருவான்.
கோவிந்து “எனக்கு என்னடா தெரியும் அவர்கள் தான் கதவை மூடி விடுகிரார்களே” என்பான்,
கோவிந்து தினமும் எங்கள் விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பதை நிறுத்துவதில்லை. எந்தக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால் முக்கிய ஏடா கூடக் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்லுவான்.
வெங்குட்டு என்னை முன் நிறுத்தி கோவிந்துவிடம் பேர் வை என்பான்,
கோவிந்து “ஏழுமன்டையன்” (தலை ஏழு போல் உள்ளதாம்), சந்துருவிற்கு “வட்டம்” (தொப்பையும் தொந்தியுமாக உள்ளதால்) குருவிற்கு “கஞ்சிமிட்டி” (கண்களை அவன் அடிக்கடி சிமிட்டிகொண்டிருப்பதால்) இப்படி எல்லோருக்கு சடுதியில் பேர் சொல்லுவான்.
எங்கள் வயதை ஒத்த பெண்கள் போனால், கோவிந்துவை விட்டு கூப்பிட சொல்லுவார்கள், அவனும் ஒன்றும் புரியாமல் “ரேவதி இங்க வாடி இவன் உன்னைக் கூபிடுறான்” என்று சொல்ல அவளோ எங்களைப் பார்த்து இரு “உங்கள் எல்லோரையும் வச்சிக்கிறேன் ஒரு நாளைக்கு” என்று கோபத்தில் கத்த, நம்மக் கூட்டம் “அதுக்குதாண்டி கூப்பிட்டோம்” என்பார்கள். கோவிந்து விஷயம் புரியாமல் எப்பொழுதும் போல் சிரித்துக் கொண்டு தானிருப்பான்.
ஒரு நாளைக்கு கோவிந்துவின் முகம் வாடியிருக்கவே அவனை என்ன கோவிந்து என்று நம்ம கூட்டம் புது விஷயத்திற்கு அலையை ஆரம்பிக்க.
கோவிந்து “இந்த அண்ணி பிசாசு, மூதேவி, எனக்கும் அம்மாவிற்கும் காலையிலிருந்து சோறு தண்ணி கொடுக்கலடா, அம்மா அழுதுண்டிருக்கா, இன்னிக்கு இரவு அண்ணா வந்தவுடன் எங்களை வீட்ட விட்டு விரட்டப் போறாளாம்”. என்றான்.
“டே மணி உங்க வீட்டில எனக்கும் அம்மாவுக்கும் சோறு கொடுடா, என்ன கெட்டி தயிரா போடணும் என்ன” என்று என்னைப் பார்த்து கேட்ட பொழுது எனக்கு அவனை வைத்து சிரித்த என் மேலும் நண்பர்களின் மேலும், அவன் அண்ணன் அண்ணி ஏனோ தெரியாமல் எல்லோர் மேலும் ஒரு வெறுப்பு வந்தது.
7 comments:
//“டே மணி உங்க வீட்டில எனக்கும் அம்மாவுக்கும் சோறு கொடுடா, என்ன கெட்டி தயிரா போடணும் என்ன”//
டச்சிங் டையலாக் சார்
எல்லா ஊர்லேயும் , இது போல
ஒரு கேரக்டர் இருக்கு போல சார்..
பாவம் கோவிந்து!
....
நிஜமாவே வருத்தப் பட வைத்து விட்டீங்க கும்மாச்சி
எல்லோர் வாழ்க்கையிலும் மறக்கப்படாத இது போன்றோர்..
நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்
//“உங்கள் எல்லோரையும் வச்சிக்கிறேன் ஒரு நாளைக்கு” என்று கோபத்தில் கத்த, நம்மக் கூட்டம் “அதுக்குதாண்டி கூப்பிட்டோம்” என்பார்கள்//
:)
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.