எப்பொழுது மாயா அக்காவைப் பார்த்தாலும் என்னிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். விஷயம் இதுதான்.
மாயா அக்காளின் கணவர் புறநகரில் உள்ள தொழிற்சாலையில் என்னுடன் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஷிப்ட் வேலை. காலை, மாலை, இரவு என்று ஷிப்ட் மாறிக்கொண்டிருக்கும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்களுக்கு ஒரு பிரச்சினை வரும். சம்பள நாள் மாலை ஷிப்டில் வரும்பொழுது அதை வாங்கிக் கொண்டு வீட்டில் சேர்பதற்குள் இதயம் தொண்டைக்கு வந்து விடும், ஏனென்றால் நாங்கள் வடசென்னையைக் கடந்து வரும் வழியில் வழிப்பறி அதிகம். முக்கியமாக சம்பள நாட்களில் கொள்ளையர்கள் கரெக்டாக ஆஜராகி விடுவார்கள். இந்தப் பிரச்சினை சமாளிப்பதற்காக வேறு வழி எடுத்துப் பார்த்தோம், கொள்ளையர்கள் எல்லா வழியிலும் தொழில் நடத்திக் கொண்டிருந்தார்கள். சம்பளக் கவரை எங்கும் மறைக்க முடியாது, “கோமணத்தில் வைத்தாலும் குடைந்து விடுவார்கள்”.
மாயாக்கா குடும்பம் எங்கள் தெருவுக்கு முன்பு உள்ள குறுக்கு சந்தில் இருந்தது. அக்கா தன் ஒரே தம்பியை மதுரையில் நடந்த ஒரு கோர சாலை விபத்தில் இழந்தவர்கள். அவர்களுக்கு என்னிடம் மிகுந்த அன்பு உண்டு. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் என் அம்மாவிடம் உதவிக்கு வருவார்கள்.
அன்று அக்காவின் கணவருக்கு ஓவர் டைம், மாலை, இரவு ஷிப்ட் என்று வேலை எதிர்பாராமல் வந்து விட்டது. அப்பொழுதெல்லாம் போன் வசதி கிடையாது. ஆதலால் நான் மாலை ஷிப்ட் முடித்து வீட்டுக்குப் போகுமுன் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர் காலையில்தான் வருவார் என்று சொல்ல கதவைத் தட்டினேன். அக்கா “யாரு?” என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தார்கள். குழந்தை தாரா மார்பில் ஒட்டிகொண்டிருந்தது. “ஏன் அவர் வரவில்லையா?”, என்று கேட்டுக்கொண்டே குழந்தையை படுக்கை அறையில் விட்டுவிட்டு வந்து என் எதிரே அமர்ந்தார்கள். அவர் காலையில் தான் வருவார் என்று சொல்லிக் கிளம்புமுன் “நாளை சம்பள தினம், எனக்கு கவலையாக இருக்கிறது” என்று பழைய பல்லவியை ஆரம்பித்தார்கள்.
நான் அவரிடம் எத்தனை முறை சொல்லிப் பார்த்தாலும் கேட்கமாட்டார். என்னை மாதிரி காலை ஷிப்ட் உள்ளவர்களிடம் லெட்டர் கொடுத்து சம்பளத்தை வாங்கி வீட்டில் சேர்க்கலாம் என்று சொன்னால், “ஏலே போடா தயிர் சாதம், நாங்களெல்லாம் திருநெல்வேலி ஆளுலே ஒரு ..........மவனும் என் மேலே கை வைக்க முடியாது”, என்று நக்கல் பண்ணுவார். நான் தொழிற்சாலையில் அவருக்கு மிகவும் ஜூனியர். ஆனால் அன்று மாயாக்கா கவலை என்னை மிகவும் பாதித்தது.
மறு நாள் சம்பள தினத்தன்று நான் லீவ் போட்டு விட்டு என் சம்பளத்தை வாங்கி வர வேறு ஒரு நண்பனிடம் லெட்டர் கொடுத்து விட்டேன். திருவொற்றியூரில் இருந்த என் கல்லூரித்தோழர்கள் “சிவகுமார், தவக்குமார்” பார்க்க சென்றேன். இருவரும் இரட்டையர்கள் அடிதடிக்கு அஞ்சாதவர்கள். அவர்களிடம் விஷயத்தை சொன்னேன். “சரிடா, அவரை தொழிற்சாலை வெளியே வந்தவுடன் மடக்கிடலாம்”, என்றார்கள்.
அடுத்த நாள் மாயாக்காவிடம் சம்பளத்தை ஒப்படைத்துவிட்டு விஷயத்தை சொல்லி “அக்கா இனி கவலை வேண்டாம்” என்று சொன்னேன்.
இரண்டு வாரம் கழித்து மாயாக்காவை கடைத்தெருவில் சந்தித்த பொழுது, “அவருக்கு நீ பணம் அடித்த விஷயம் தெரியும்” என்றார்கள். “எப்படிக்கா என்றேன்”.
“நான் சொல்லிவிட்டேன்” என்றார்கள்.
இப்பொழுதெல்லாம் மாயாக்கா கணவர் என்னிடம் பேசுவதில்லை.
4 comments:
புரியுது... ஆனா புரியல,,,,,
டேய் மன்மதக்குஞ்சு புரிய வைக்க இது ஒன்னும் குஷ்பு மேட்டர் இல்லை.
சரியா போச்சு...... ஊஹும்......
விடுண்ணே லைப்ல இதெல்லாம் ரொம்ப ஜகஜம்....
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.