விஷயம் இது தான். முழுப் பரீட்சை முடிந்து நாங்கள் “பிட்டு” படம் பார்க்கப் போனோம். இப்போதிருக்கும் காசி தியேட்டர் எதிரில் தான் பழைய ஜாபர்கான்பேட் “விஜயா”. அப்படியே நேரே அந்தத் தெருவில் உள்ளே போனால் ஜாபர்கான்பேட் “சாந்தி”. இங்குதான் கோடை விடுமுறையில் நாங்கள் படம் பார்க்க எங்கள் நிதிநிலமைக்கு ஏற்ற கொட்டகைகள். நாற்பத்தைந்து பைசா தான் டிக்கெட். தரையில் தான் அமரவேண்டும். ஏதோ சிமென்ட் போட்ட தரை என்று நீங்கள் நினைத்தால் அப்படியே இதை படிக்காமல் அம்பேல் ஆகிவிடுங்கள். மணல் தரை. நீங்கள் “குள்ளமனி”யாய் இருந்தால் மணலைக் குமித்து மேடை அமைத்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
அன்றுதான் எங்கள் கடைசிப் பரீட்சை, வீட்டுக்கு வந்தவுடன் எல்லா நோட் புத்தகங்களில் உள்ள எழுதியப் பக்கங்களைக் கிழித்து எடைக்குப் போட்டு காசு சேர்த்தோம். பாடப் புத்தகங்களை ஏதாவது டுபுக்குவின் தலையில் பாதி விலைக்கு மேல் விற்று காசு அடிக்க பரீட்சை முடிவு வரக் காத்திருக்க வேண்டும்.
அன்று ஏதாவது படம் பார்க்கவில்லை என்றால் எங்கள் ஒருவருக்கும் நிம்மதியிருக்காது. மேலும் அன்று பெற்றோர்கள் எங்களை தடுக்கமுடியாது, பிள்ளைகள் பாவம் கஷ்டப்பட்டு விடிய விடிய படித்திருப்பர்களோ என்ற சந்தேகத்தில் கெடுபிடி இளகியிருக்கும் நேரம். பெரும்பாலும் நைட் ஷோ தான் போவோம். இதன் காரணம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை.
அன்று நாங்கள் கொட்டகையை அடைந்த பொழுது, டிக்கெட் கொடுத்து மூடிவிட்டார்கள். எங்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதில் அந்தப் படத்தை ஏற்கனவே பார்த்த ஒருவன், இந்தப் படத்தில் அந்தக் கன்னட நடிகை காட்டில், ஹீரோவுடன் அடிக்கும் கொட்டங்களும், மேலும் ஆற்றில் உள்ளாடை அணியாமல் குளிக்கும் ஏகப்பட்ட காட்சிகள் பத்து நிமிடத்திற்கு வரும் என்று எங்கள் ரத்தத்தை சூடாக்கிவிட்டான். அப்பொழுது வந்த அந்தப் பேட்டை ஆள் ஒருவன் அவனுக்கு சாராயத்திற்கு ஏற்பாடு செய்தால் டிக்கெட் வாங்கித் தருவதாக சத்தியம் செய்ததால் அங்கேயே ஒரு அவசர பட்ஜெட் கூட்டம் போட்டு, உடனடியாக மசோதா நிறைவேற்றி டிக்கெட்டை பெற்றுக்கொண்டு அவசரமாக நுழைந்தோம். கிடைத்த மணலிடத்தில் அவரவர் அமர்ந்தோம். திரையில் “பீகாரில் வெள்ளம் முடியும் தருவாயில் உணவுப்பொட்டலம் ஹெலிகாப்டரில் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள், எல்லாப் பொட்டலங்களும் பெரும்பாலும் ஆற்றிலேயே விழுந்தன”.
செய்திகள் முடிந்து படம் தொடங்கியது, ஆனால் படம் “பக்திப் படம்”, கூட வந்தவனில் ஒருவன் டேய் அப்படித்தாணடா டைட்டிலில் போடுவார்கள். பொறுத்திருங்கள் என்றான். நாங்கள் பொறுத்திருந்து அந்தப் படம் முழுவதுமாக முடிந்தது, மேலும் வெள்ளி முளைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. நண்பன் உசுப்பேத்தியக் காட்சி ஏதும் வரவில்லை. கொட்டகையில் எல்லா ஜனங்களும் ஒரே கூச்சல், இதற்குள் ப்ரொஜெக்டர் ரூமில் ஒரே சத்தம். படம் முடிந்து மணி அடித்தும் யாரும் கொட்டகையை விட்டு நகரவில்லை. மேனேஜரை தேடினார்கள் அவர் அம்பேல் ஆகிவிட்டார், நாற்காலிகளை உடைக்க முடியாத ஒரு கொட்டகை.
அடுத்த நாள் என் நண்பனின் அம்மா என் அம்மாவிடம், “என் பையன் ரொம்ப நல்லப் பையன், பரீட்சை முடிந்தவுடன் சாமி படத்திற்குத் தான் போவான், வேறெந்தப் படமும் பார்க்கமாட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு என் அம்மா “என் பையன் சாமிபடம் கூட பார்க்கமாட்டான்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
8 comments:
அடுத்த நாள் என் நண்பனின் அம்மா என் அம்மாவிடம், “என் பையன் ரொம்ப நல்லப் பையன், பரீட்சை முடிந்தவுடன் சாமி படத்திற்குத் தான் போவான், வேறெந்தப் படமும் பார்க்கமாட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு என் அம்மா “என் பையன் சாமிபடம் கூட பார்க்கமாட்டான்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
.......பாவம் அம்மாக்கள்! :-)
சமர்த்து:)
நீங்க போனது ஃபைட்டர் பகவான் படமோன்னு நினைச்சேன்! :-)
ரெம்பா நல்ல நகைசுவையாக இருந்தது அண்ணா...
antha theater ippavum irukka anna?
ok sar
ம்..ம்... நடத்து ,,,, நடத்து
oh oh
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.