“நாங்கள் எல்லாம் கவரிமான் பரம்பரையடா, உன் மாதிரி கைகட்டி சேவகம் செய்யமாட்டோம்”, என்றான் சங்கர்.
நான் பட்டப் படிப்பு முடித்து ஒரு ஐந்தாறு நேர்கானல்களும், பரீட்சைகளும் முடித்து ஒரு வழியாக ஒரு தனியார் கம்பனியில் எனக்கு வேலைக்கிடைத்தது. அதை நான் சங்கரிடம் சொன்ன பொழுதுதான் மேற் சொன்ன வார்த்தைகளைக் கூறினான்.
சங்கர் என்னைவிட ஒரு ஆறு ஏழு வயது பெரியவன், எனக்கு நல்ல நண்பன். அவன் அப்பா நியூஸ் பேப்பர் ஏஜென்ட்டாக இருந்தார். நல்லக் கமிஷன் வந்துக் கொண்டிருந்தது. இவன்தான் வீட்டிற்கு முதல் பையன். மூன்று தங்கைகளும் இரண்டு தம்பிகளும் உண்டு. கிட்டத்தட்ட எங்கள் வீட்டிலும் அதே உறுப்பினர்கள்தான். நான் வேலைக்கு போக வேண்டியக் கட்டாயம். பட்ட மேல் படிப்பு படிக்க ஆசையிருந்தும் வசதியில்லாத காரணத்தினால் படிக்க முடியவில்லை. கிடைத்த வேலையில் சேர்ந்துவிட்டேன்.
சங்கர் அவன் அப்பாவிற்கு உதவியாக அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் ஒரு இரண்டு மூன்று மணிநேரம்தான் வேலை. விடியற்காலையில் எழுந்து செய்தித்தாள்களை எல்லாக் கடைகளிலும் போடுவது வேலை. மாத முடிவில் கலெக்ஷன் என்று ஒரு இரண்டு மூன்று நாட்கள் இரவு பகலாக வசூல் செய்வான். மற்ற நாட்களில் பகல் பொழுது வெட்டிதான். என் வார விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்துக் கொள்வோம்.
பின்பு நான் வெளிநாட்டிற்கு பிழைக்க வந்து கல்யாணமாகி, குழந்தைக் குட்டிகளுடன் அங்கேயே தங்கிவிட்டது சரித்திரம். ஆனால் ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் பொழுதும் சங்கரை போய் பார்க்காமல் இருக்கமாட்டேன். சங்கருக்கு ஒரு பையனும் பெண்ணும் இருந்தனர். அந்த விடுமுறையில் நான் அவன் வீட்டிற்கு போயிருந்த பொழுது சங்கர் வீட்டில் இல்லை. அவன் மனைவி என்னிடம் புலம்பினாள். நியூஸ் பேப்பர் ஏஜன்சி இப்பொழுது இல்லை என்றும், அவர்களிடம் வேலை செய்தவன் இவர்களை ஏமாற்றி அதை எடுத்துக் கொண்டு, இப்பொழுது குடும்பம் சிக்கலில் இருப்பதாகவும் கூறினாள்.
இவருக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்களேன், உங்கள் ஊரில் வாங்கிக் கொடுத்தால் கூட பரவாயில்லை என்றாள். அன்று நான் சங்கரை வெளியே அழைத்துக் கொண்டு வேலை ஏதாவது தேடுகிறாயா என்று வினவினேன். அவன் தன வறட்டு கௌரவத்தை விடவில்லை. "போடா நான் யாரிடமும் வேலைக்குப் போகமாட்டேன், பெண்டாட்டி நகைகளை விற்று "அச்சகம்" வைக்கப் போகிறேன்" என்றான். நான் வயதாகிவிட்டால் வேலைக் கிடைப்பது குதிரைக் கொம்பு என்று சொன்னாலும் கேட்கவில்லை.
அச்சகம் மற்றொரு ஒருவனிடம் சேர்ந்து வைத்ததில் நஷ்டம் ஏற்பட்டு, அச்சகத்தை விற்று அந்தப் பணத்தையும் மற்றவன் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டான். சங்கரின் மனைவி எப்படியோ துணிக் கடையில் வேலை செய்து பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து விட்டாள். பெண்ணிற்கு கல்யாணமாகி அமெரிக்கா சென்றுவிட்டாள்.
நான் இரண்டு மூன்று வருடங்களாக ஊருக்கு செல்ல வில்லை. சமீபத்தில் நான் விடுமுறையில் ஊருக்கு சென்ற பொழுது சங்கரை காண அவன் வீட்டிற்குப் போனேன். மிகவும் சோர்ந்து போய் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். அவன் மகனும் மருமகளும் வேலைக்கு செல்ல தயாரகிக் கொண்டிருந்த்தார்கள். நானும் சங்கரும் வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லாமல் மையமாக சிரிதுக்கொண்டிருந்தான். அவன் நிலை எனக்கு பரிதாபமாக இருந்தது.
அவன் மருமகள் வெளியே வந்து காரை நோக்கிவிட்டு தன் கணவனை விளித்தாள். "எங்க இங்கப் பாருங்க மாமா கார் தொடைச்சிருக்கிற அழகை, டயர் எல்லாம் அழுக்கா இருக்கு. நல்லா கீழே படுத்துக் கொண்டு சுத்தம் செய் என்றால் செய்கிறாரா?, இந்த அழகில் நண்பனுடன் எண்ணப் பேச்சு வேண்டியிருக்கு இந்த ....க்கு அவள் பிரயோகித்த ஒரு சொல் என் காதில் தெளிவாக விழுந்தது, சங்கரை பார்த்தேன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டிக் கொள்ளவில்லை.
அப்பொழுது சங்கரின் மனைவி மீனா வெளியே வந்தாள். அவளின் தோற்றம் மிகவும் என்னை வருந்த வைத்தது. கிட்டத்தட்ட அந்த வீட்டின் வேலைக்காரி போல இருந்தாள். அவர்களது மகன், மருமகள் இருவரும் வேலைக்கு கிளம்பி வீட்டின் வாயிலைக் கடக்கும் பொழுது அவர்கள் வீடு நாய்க் குட்டியிடம் "பை ஜிம்மி" என்று சொல்லிக் கொண்டு காரிலேறி போய் விட்டார்கள். இந்த ஜிம்மியின் பொதுப் பெயரைத் தான் அவள் தன் மாமனாருக்கு அடைமொழியாக்கினாள்.
சங்கரின் மனைவி தன் கணவரின் நிலை பற்றி வருத்தப்பட்டாள். தினமும் இந்த வார்த்தைகள் இவர் காதில் விழுவதில்லை, எனக்கு அடுப்படியில் இருந்தாலும் எல்லாம் தெளிவாக விழும், என்ன செய்வது, நாங்கள் இப்பொழுது அவர்கள் தயவில் இருக்கிறோம், சொத்து எதுவும் இல்லை.
நான் எனக்குத் தெரிந்த ஒருவரின் கல்யாண மண்டபத்தை பார்த்துக் கொள்ளும் வேலை இருக்கிறது, சங்கரை கேட்கலாமா என்று அவளிடம் சொன்னதற்கு, திரும்ப அதே பல்லவியைத்தான் பாடுவார்.
என்ன இப்பொழுது "கவரிமானிற்கு" காது கேட்பதில்லை என்றாள், அந்த விஷயத்தில் அவர் கொடுத்து வைத்தவர் என்றாள்.
Post Comment