Pages

Wednesday, 23 June 2010

இந்நாட்டு மன்னர்கள்


நாட்டு நலன் நாமறியோம்
வீட்டு நலன் விட்டொழியோம்
கோட்டை கட்டி குடியிருப்போம்
“ஓசோனில்” ஓட்டை அடிப்போம்


ஏரிகளை வளைத்திடுவோம்
எட்டடுக்கு கட்டிடுவோம்
குடிநீருக்கு குடமெடுத்து
குடும்பத்துடன் அலைந்திடுவோம்.


வயல்வெளி வரப்பு எல்லாம்
வளைத்துப் போட்டு சேர்த்திடுவோம்
அரிசி, பருப்பு, காய்களையும்
அந்நியச் சந்தையில் வாங்கிடுவோம்.


"பார்"ல "பீர்" அடிப்போம்
“கார்””ல சென்றிடுவோம்
சாலை விதி மீறல்களை
காலையிலே விவாதிப்போம்.


தொலைக் காட்சி விட்டொழியோம்
கொலை காட்சி ரசித்திருப்போம்
பல கலைகள் பயில பிள்ளைகளுக்கு
பள்ளிகளை விலைக்கெடுப்போம்.


வரிகொடுக்க அழுதிடுவோம்
வசதிகள் வழங்கா அரசாங்கத்தை
வசைமாரி பொழிந்து
வசதிக்கேற்ப வறுத்தெடுப்போம்.


காசு வாங்கி ஒட்டு போடுவோம்
காலகாலம் புலம்பிடுவோம்
ஓசியிலே சோறு என்றால்
"ஏசி"யிலேத் தின்றிடுவோம்.


அயல் நாட்டுப் பெருமைகளை
அக்கக்காய் அலசிடுவோம்
இந்நாட்டு மன்னரென்று
இறுமாந்து இருந்திடுவோம்.

2 comments:

  1. தொலைக் காட்சி விட்டொழியோம்
    கொலை காட்சி ரசித்திருப்போம்
    பல கலைகள் பயில பிள்ளைகளுக்கு
    பள்ளிகளை விலைக்கெடுப்போம்.

    ..... உண்மை சுடுகிறது..... ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  2. அயல் நாட்டுப் பெருமைகளை
    அக்கக்காய் அலசிடுவோம்
    இந்நாட்டு மன்னரென்று
    இறுமாந்து இருந்திடுவோம்


    ///


    Super sir..

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.