பெரிய பெரிய ராட்சத சிமிண்டு குழாய்கள் லாரிகளில் வந்து தெருவை அடைத்து இறக்கும் பொழுதே எங்களுக்கு விளையாட்டு தடைபடப்போவது உறுதியாயிற்று.
நாங்கள் இருந்தத் தெருவில் பாதாள சாக்கடை தோண்டுவதற்கு பணிகள் தொடங்கின.சுமார் ஒரு பத்து பதினைந்து தொழிலாளிகள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டனர். திங்கள் தொடங்கி வெள்ளி வரை வேலை மும்முரமாக போய்க்கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை வழக்கம் போல் வேலைதொடங்குவதற்கு ஆட்கள் வரதொடங்கியிருன்தனர். எங்கள் வீட்டின் முன் இப்பொழுது பெரிய பள்ளம தோண்டத் தொடங்கியிருந்தனர். இப்பொழுது இரண்டுபேர் என் வீட்டின் முன் வேலை செய்துகொண்டிருன்தனர். ஒருவன் கடப்பாரையால் தோண்ட மற்றொருவன் மண்வெட்டியால் மண்ணை பள்ளத்தின் வெளியே வாரிக் கொட்டிக்கொண்டிருந்தான். இருவரும் பேசிக்கொண்டே வேலை செய்துக் கொண்டிருந்தனர். இவர்களுடன் இவர்களது மனைவிமார்களும் தங்கள் கைக்குழந்தைகளை மரத்தடியில் தூளிகட்டி விட்டுவிட்டு சற்று தள்ளி மணல் சலித்துக்கொண்டிருந்தனர்.
அவர்களதுப் பேச்சு இப்பொழுது வாக்குவாதமாக மாறிக்கொண்டிருந்தது. ஒருவன் முதல் நாள் குப்பத்தில் நடந்த கூழ் ஊத்தும் விழாவை விவரித்துக் கொண்டிருந்தான். அவர்கள் தோண்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி “தம்பி இன்ன பேசுறான் பாரு இவன் பெரிய காளி ......லருந்து வந்தா மாதிரிப் பேசறான் பாரு, பதிலுக்கு மற்றொருவன் பெரிய இவரு மேரி ..............லேருந்து வந்தாரு போடாங்க” என்றான். மற்றொருவன் கோவத்தில் கடப்பாரையை ஓங்கி தரையில் குத்தினான். அது மண்ணில் புதைந்து சரிந்து மற்றொருவன் காலில் விழுந்தது. அவன் காலைப் பிடித்துக் கொண்டு மண்ணில் விழுந்தான். அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து மற்றவன் மேல் எறிந்தான். அது அவன் கெண்டைக் காலில் பட்டு ரத்தம் வரத்தொடங்கியது. இதற்குள் அங்கு மற்ற வேலை ஆட்களும் வரவே விஷயம் பெரிசாக ஆரம்பித்து, கூச்சல் அதிகமாகி, அடிதடி ஆரம்பமாகிவிட்டது. அடிபட்ட இருவரும் கட்டிப் பிடித்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். கைக்குழந்தையுடன் வந்த மனைவிமார்களை பிடித்து மணலில் தள்ளி விட்டு சண்டையைத் தொடர்ந்தனர். பிறகு கங்காணி (சூப்பர்வைசர்) வந்து அவர்கள் சண்டையை நிறுத்தி சனிக்கிழமை கொடுக்க வேண்டிய கூலியையும் கொடுக்காமல் அவர்களை அனுப்பிவிட்டான்.
விஷயம் இத்துடன் முடியவில்லை. அன்று மாலை அவர்கள் இருந்த குப்பம் தீப்பிடித்து ஏறிய ஆரம்பித்தது. அவர்களது குப்பம் ஏரிக்கரையின் பக்கத்தில் எங்களது தெருவிலிருந்து ஒரு இரண்டு மைல் தள்ளியிருந்தது. நானும் நண்பர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தன. முதலுதவி ஊர்தி வந்து கருகிய உடல்களை வண்டியில் எற்றிக்கொண்டிருந்தன.
இரு ஜாதி சங்க கரை வேட்டிகள் சொகுசு வண்டியில் வந்து இறங்கி அந்தக் குப்ப மக்களிடம் விசாரணை என்ற பெயரில் வெறியை விதைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது எரிந்துக் கொண்டிருக்கும் குடிசையிலிருந்து பாதி கருகிய நிலையில் கைக்குழந்தையுடன் ஒருத்தியை தீயணைப்பு படையினர் வெளியே கொண்டு வந்தனர். கைக்குழந்தை கதறிக் கொண்டிருந்தது. பாதிக் கருகியவள் சண்டையிட்ட இருவரில் ஒருத்தனின் மனைவி. அவளை சிகிச்சைக்காக வண்டியில் ஏற்றினர். தீயணைப்பு படையினரிடமிருந்து கதறும் குழந்தையை சண்டையிட்ட இருவரில் இன்னொருத்தனின் மனைவி வாங்கிக்கொண்டாள்.
அடுத்து நாங்கள் கண்டக் காட்சி எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு அவள் ஓரமாக அமர்ந்து குழந்தையின் அழுகையை நிறுத்த தன் மேலாடையை விலக்கி குழந்தையை மார்போடு அனைத்துக் கொண்டாள். குழந்தையின் கதறல் அடங்கியது.
கரை வேட்டிகள் தங்கள் வெறியாட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தனர். “அந்த ஜாதிக்காரந்தான்பா கொளுத்திக்கிறான்”.
7 comments:
இது கதையா? உண்மை சம்பவமா ?
இப்போ பல தளங்களில் போடும்ஜாதி மதச் சண்டைகள் கிட்டத்தட்ட இப்படிதான் இருக்கு.
படிக்காதவன் வாயால் கையால் போடுவதை, இங்கே எழுத்தில்...
சபாஷ்:)
வானம்பாடிகள் வருகைக்கு நன்றி.
கரை வேட்டிகள் தங்கள் வெறியாட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தனர். “அந்த ஜாதிக்காரந்தான்பா கொளுத்திக்கிறான்”.
...... எல்லாம் அரசியல் மயம்!
நெத்தியடி பாஸ்...
me the 6 th aaa
unga blog ithanai paarkaama irunthirukenee?. very nice.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.