என் அப்பாவும் அவரும் ரயில்வேயில் பணிபுரிபவர்கள். காதர்கான் மாமா தவறாமல் ஞாயிற்று கிழமைகளில் எங்கள் வீட்டில் ஆஜராகிவிடுவார். அவருக்கு அப்பொழுது குழந்தைகள் கிடையாது. என் அப்பாவும் அவரும் ஒரே சமயத்தில் வேலையில் சேர்ந்தவர்கள்.
நான் என் அக்கா தம்பி தங்கைகள் என்று மொத்தம் ஆறுபேர். பெரிய குடும்பம். அவருக்கு விடுமுறை நாட்களை எங்களுடன் கழிப்பதில் ஆனந்தம். சில சமயம் எங்களை அவர் வீட்டுக்கு அழைத்து செல்வார். கதீஜா அத்தை எங்களுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவார்கள். நாங்கள் சைவம் என்பதால் அன்று அவர்கள் வீட்டில் சைவ சமையல்தான். நாங்கள் அவர்கள் வீட்டில் ஓடியாடி விளையாடுவதை ரசிப்பார்கள். காதர்கான் மாமா கோவப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை. விளையாட்டில் அவர்கள் வீட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவோம். எதை உடைத்தாலும் கோவம் கொள்ள மாட்டார்கள். எங்கள் விளையாட்டை ரசித்து “மாஷா அல்லா” என்று இருவரும் சொல்லிக்கொள்வார்கள்.
ரம்ஜான் நாட்களில் சில சமயம் வீட்டிற்கு வருவார், ரம்ஜான் நோன்பின் காரணத்தையும் அவர்கள் உபவாசம் இருப்பதையும், சூரிய உதயத்திற்கு சற்று நேரம் முன் தொடரும் நேரத்திலிருந்து பல்லில் தண்ணீர்கூட படாமல் நோன்பு இருப்பதை சொல்லும் பொழுது எங்களுக்கெல்லாம் இப்படியும் இருக்க முடியுமா என்ற ஆச்சர்யம் மேலோங்கும்.
நான் மத்திய கிழக்கு நாடுகளில் வேலையில் சேர்ந்து ஒரு முறை விடுமுறைக்கு சென்னை வந்த பொழுது என்னை பார்க்க வந்தார். அப்பொழுது மனைவியின் நச்சரிப்பால் இரண்டாவது திருமனம் செய்து கொண்டதையும், ஒரு மகன் பிறந்ததையும் சொன்னார். மகன் பிறவியிலேயே பார்வை இல்லாதவன். அவன் ஒரு பிரபல வயலின் வித்தகரிடம் வயலின் கற்றுக் கொள்வதையும், பள்ளியில் படிப்பதையும் சொன்னார்கள்.
பிறகு அப்பாவும் அவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் பென்ஷனர்ஸ் மீட்டிங்கில் சந்தித்துக் கொள்வார்கள். இப்பொழுது இருவருக்கும் வயதாகிவிட்டதால் சந்திப்பு நாள் நாள் பட குறைந்துவிட்டது.
நேற்று நான் நியூ காலேஜ் போக வேண்டிய வேலை இருந்தது. போகும் வழியில் அந்த இடம் அடுத்தநாள் வரப்போகும் ஈத் பெரு நாளுக்கான ஏற்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது. காலேஜில் நுழைந்து நான் கண்ட நபர் பார்வை இல்லாதவர். அவர் அங்கு அவர் ஆசிரியராக இருக்கிறார். அவரை விசாரித்த பொழுது அவர் காதர்கான் மாமாவின் மகன் என்று புரிந்து கொண்டேன். அவரை ஒரு வேலை விஷயமாக நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ள அவர் வீட்டு தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன்.
இன்று காலை அவர்கள் வீட்டிற்கு போன் செய்தேன். காதர்கான் மாமா தான் எடுத்தார். மாமா “ ஈத் முபாரக்” என்றேன். “சங்கர் நீ ஊரில் இருக்கிறாயா அப்பா எப்படி இருக்கிறார், இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதில்லை” என்றார்.
இத்தனை வருடம் கழித்து என் குரலை அடையாளம் கண்டு கொண்டு விசாரித்ததில் எனக்கு மேலும் பேச்சு வரவில்லை
10 comments:
நம் மேல் அன்பு கொண்டவர்கள் நம்மை என்றும் மறப்பதில்லை கும்மாச்சி..
சகோதரி ரொம்ப நாட்களுக்குப்பிறகு வருகை தந்துள்ளீர்கள், வருகைக்கு நன்றி.
ஸலாமலைக்கும் சங்கர்? பாய்.
ஈத் முபாரக்.
சங்கர்லால்
good post
அவர் பேராசிரியர் தஸ்தகீரா? அவரை பற்ரி ஒரு பத்திரிக்கையில் படித்தேன். எவ்வளவு சிறியது உலகம் என்பது போல் இருக்கிறது. தங்களின் மாமாவிற்கு எங்களின் ஸலாம் கூறவும்.
நல்ல பதிவு அண்ணே
nalla pathivu
உங்களுக்கு பேச்சு வரவில்லை.
எங்களின் கண்ணீரை துடைக்க முடியவில்லை.
நல்ல பதிவு. இது போன்ற மனிதர்கள் மற்றும் மனித உறவுகள் குறைந்து விட்டன
தமிழ் பையன் வருகைக்கு நன்றி, எப்பொழுதோ எழுதியதை தேடிப்பிடித்து படித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறீர்கள் நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.