தலைவரே உங்க கட்சி போற நிலைமையைப் பார்த்தால் எங்களுக்கு இந்த பாட்டுதான் நியாபகம் வருது
நந்தவனத்தில் ஓராண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி
அறுபத்திரண்டில் அண்ணா தோற்றுவித்த ஒரு இயக்கம் அறுபத்தியேழில் ஆட்சியைப் பிடிக்கும் என்று காங்கிரஸோ இல்லை அப்பொழுதிருந்த நீதிக் கட்சியோ கனவிலும் நினைத்திருக்காது. திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா, பெரியாரின் விமர்சனத்துக்கு ஆளானாலும் அவர் தோற்றுவித்த புதிய இயக்கம் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டது. அப்பொழுதிருந்த அமைச்சர் பரிவாரங்கள் அன்பழகன், ப.வு. ஷண்முகம், மதியழகன், நெடுஞ்செழியன், மற்றும் எம்.ஜி. ஆறும் நீங்களும் பெரியதாகப் பேசப்பட்டீர்கள். ஆனால் அண்ணாவின் மறைவிற்குப் பின் எம்.ஜி. ஆர் ஆதரவில் கழகத்தை உங்கள் கையில் கொண்டு வந்தீர்கள். நெடுஞ்செழியன் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
கிட்டத்தட்ட அப்பொழுதிலிருந்தே உங்கள் குடும்ப ஆதிக்கம் தொடங்கியது. முதலில் முரசொலி மாறன், பின்னர் ஸ்டாலின், என்று ஒவ்வொருவராக கட்சிக்குள் கொண்டுவரப்பட்டனர்.
மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார், தன் மக்கள் நலம் பேணுவார் என்று எதிர்த்த எம்.ஜி.ஆர் கழகத்திலிருந்து கழட்டிவிடப்பட்டார். ஆனால் அவர் புதிய கட்சி ஆரம்பித்து நீங்கள் எதிர்பாராத வெற்றியை சந்தித்து உங்களை பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் அனுப்பினார்.
ஸ்டாலினின் நுழைப்பு கழகத்தின் போர் வாள் என்ற பெயருடன் நாடாளு மன்றத்தில் முழங்கிய வை.கோ வை விரட்டியடித்தது.
பின்னர் உங்களது குடும்ப ஆதிக்கம் எல்லாத்துறைகளிலும் கோலோச்ச தொடங்கியது. தயாநிதி, அழகிரி, கனிமொழி மத்திய அமைச்சரவையில் போராடி சேர்க்கப்பட்டது, இதை எல்லாம் வேடிக்கை பார்த்த அடிமட்ட தொண்டர்கள் வாயடைத்து நின்றனர். கழகத்திற்காக உழைத்து தங்களுக்கும் ஒரு நாள் காலம் வரும் என்று எண்ணியிருந்த அவர்கள் கனவில் இடி விழுந்தது. உங்களுடன் நட்பாக இருந்த ஒரு காரணத்தால் அன்பழகன் வாய் மூடி இருந்தார்.
ஆனால் உங்கள் குடும்ப ஆதிக்கம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தவுடன் மற்றைய உங்களது அமைச்சர்களும் தங்களது வாரிசுகளுக்கு தொகுதி கேட்ட பொழுது உங்களின் மனசாட்சி பதிலளித்தது.
இதை எழுதி உங்களின் நடத்தையை தட்டி கேட்ட பத்திரிகைகளுக்கும் சாதிச் சாயம் பூசி வாயடைத்தீர்கள். நேரு குடும்பம் வரவில்லையா, ராஜ்கபூர் குடும்பம் படம் எடுக்கவில்லையா என்று விமர்சனம் செய்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
கழகம் உங்களால்தான் வளர்க்கப் பட்டதாக நினைத்து இறுமாப்பில் இருந்த உங்களுக்கு காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது மகள் சிறையில், குடும்பத்தில் குழப்பம், அடுத்த தலைவருக்கு போட்டி என்று ஆரம்பித்தவுடன் கழகக் கூட்டத்திலிருந்து கிளம்பி மகாபலிபுரம் போய் சிந்திக்க வைத்திருக்கிறது.
உங்களது எதிரிகள் கழகப் பொதுக் கூட்டம் கோவையிலோ, திருப்பூரிலோ எங்கு இருந்தாலும் அதன் முடிவை எதிர் நோக்கியிருக்கிரார்கள்.
ஆனால் கழகத்தின் உண்மையான தொண்டன், “தோண்டி” உடைக்கப் படுவதை உணர்ந்து சோகத்தில் மிதக்கிறான்.
2 comments:
தி.மு.கழகத்தின் இன்றைய நிலையை ஒரு சுருக்கமான இடுகையில் சொல்லிட்டீங்க!
வாழ்த்துக்கள்..
உங்கள் பதிவுகளுக்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.