Tuesday, 30 August 2011

சில சரித்திர பிரசித்திபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்கள்

ஊழலுக்கு எதிரான அன்னா ஹஜாரேவின் உண்ணா விரதம், பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரும் உண்ணா விரதங்கள் என்று தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் சரித்திரத்தை சற்று பின் நோக்கி பார்ப்போம்.

மகாத்மா காந்தி

உண்ணாவிரத போராட்டம் என்றால் காந்தியின் நினைவு வருவது தவிர்க்க இயலாது. சரித்திரத்தில் அதிக முறை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டவர் காந்தி. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறையே 1922, 1930,1933,1942 என்று நான்கு முறை சிறையில் அடைக்கப்பட்ட பொழுது காந்தி உண்ணா விரதம் மேற்கொண்டார். இதில் அதிக பட்சம் 21 நாட்கள் மே 08, 1932 முதல் திட உணவை தவிர்த்து சிறையில் உண்ணா விரதம் மேற்கொண்டார். தான் சிறையில் மரணமடைந்தால் அது ஆங்கிலேயர்களுக்கு ஏற்படும் அவமானம், ஆதலால் உலகம் இந்த நிகழ்வை திரும்பிப் பார்க்கும் என்று எண்ணினார். அதற்கு பிறகு 1946 ல் இந்து முஸ்லிம் கலவரத்தை தடுக்க மேற்கொண்டது பின்பு 1947 ல் மேற்கொண்ட உண்ணா விரதங்களும் நாம் அறிந்ததே.

ஜாடிந்திரா தாஸ்

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயரால் சிறை பிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் இந்திய கைதிகளும் ஆகிலேய கைதிகளும் நடத்தப் படும் விதத்தில் இருந்த பெரிய வித்யாசத்தை எதிர்த்து அறுபத்திமூன்று நாட்கள் உண்ணா விரதம் மேற்கொண்டார் இந்த வங்காள வீரர். இந்திய கைதிகளுக்கு பல வாரங்கள் துவைக்கப் படாத சிறை சீருடை, கரப்பான் பூச்சிகளும் எலிகளும் ஓடும் சமையலறை, சிறை கைதிகள் நடத்தப் படும் விதம் என்ற எல்லாவற்றையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். பல முறை ஆங்கிலேய சிறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக உணவை திணிக்க முயன்ற போதிலும், செப்டம்பர் 13, 1929 சிறையில் உண்ணாவிரதத்தை முடிக்காமல் உயிர் துறந்த முதல் சுதந்திர தியாகி.

பகத்சிங்
பஞ்ஜாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் தலைமையில் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பகத்சிங். இவரும்  ஆங்கிலேயரால் சிறை பிடிக்கப் பட்டபொழுது சிறையில் இந்திய கைதிகளும் சுதந்திர போராட்ட வீரர்களும் நடத்தப் பட்ட விதத்தை  எதிர்த்து சிறையிலேயே தொடர்ந்து 41 நாட்கள் உண்ணா விரதம் மேற்கொண்டார்.
லாலா லஜபதி ராயின் மீது லத்தி சார்ஜ் செய்த ஆங்கிலேய போலிசை சுட்டு கொன்ற காரணத்தினால் பகத் சிங் ஆங்கிலேய அரசால் பின்பு தூக்கிலடப்பட்டார்.

பொட்டி ஸ்ரீராமுலு
சுதந்திர இந்தியாவில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த முதல் போராட்ட வீரர் பொட்டி ஸ்ரீராமுலு. மாநிலங்களை மொழி அடிப்படையில் பிரிக்க அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடந்தது. சென்னையையும் ஆந்திராவில் இணைத்து புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது இவரது கோரிக்கை. எண்பத்தி இரண்டு நாட்கள் உண்ணா விரதம் இருந்து 16/12/1952 உயிர் நீத்தார். இவரது உடலை சுமந்து சென்னையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் கண்டு நாடே ஸ்தம்பித்தது. பிறகு இந்தப் போராட்டம் ஆந்திராவில் பரவி கடப்பா, நெல்லூர் என்று கட்டுக்கடங்காமல் போனது. அப்போதைய பிரதமர் நேருவும், கவர்னர் ஜெனரல் ராஜாஜியும் பின்பு சென்னை மாகாணத்திலிருந்த ஆந்திராவை பிரித்து பின்னர் தெலுங்கானாவை இணைத்து ஐதராபாதை தலைநகரமாக கொண்ட ஆந்திராவை  உருவாக்கினார்கள். மேலும் இவர் நடத்திய போராட்டம் கேரளா, குஜராத், கர்நாடகா உருவாக வழி கோலியது. இன்றும் இவர் ஆந்திர மக்களால் “அமர ஜீவி” என்று போற்றப் படுகிறார்.

மேதா பட்கர்.
1991, 1993,  1994 வருடங்களில் மூன்று முறை இவர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இதில் அவர் 1991 ல் மேற்கொண்ட 22 நாட்கள் உண்ணாவிரதத்தில் உயிர் இழக்கும் நிலைமை சென்று மீண்டார். நர்மதா நதியில் கட்டப் போவதாக இருந்த அணைகளை தடுத்த நிறுத்தி விவசாய நலன்களை பாதுகாக்கவே இவர் உண்ணாவிரதங்களை மேற்கொண்டார். பின்பு மும்பையில் “கோலிபர்” குடிசை வாசிகளுக்கு ஆதரவாக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு பணிந்த மகாராஷ்டிர அரசாங்கம் அந்த நிலங்களை தனியாருக்கு விற்கும் யோசனையை கை விட்டது.

திலீபன்
ஈழத்தில் திலீபன் மேற்கொண்ட உண்ணா விரதம் ஒரு சோகக் கதை. 15/09/1987 தொடங்கி பதினொரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உணவு தண்ணீர் இரண்டையும் தவிர்த்து 26/09/1987 ல் உயிர் நீத்த தமிழ் ஈழப் போராட்ட வீரர். திலீபனின் உண்ணாவிரதம் ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத சோகம்.
மேற்கூறிய உண்ணாவிரதங்கள் யாவும் சரித்திரத்தில் புகழ் பெற்றவை. இதைத்தவிர இன்னும் உலகளவில் நிறைய இருக்கின்றன.

இவையும் உண்ணா விரதங்களே
இவை தவிர அவ்வப்பொழுது சில மாநில முதல்வர்களாலும், இல்லை டி ஆர்.பி ரேட்டிங் ஏற்ற சினிமா கலைஞர்களாலும் வெவ்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவை நாடு அறியும். நடிகர்கள் தங்களது இருப்பை பறை சாற்றிக் கொள்ளவே நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. இதில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. எல்லோரும் விதவிதமாக ஆடையணிந்து, கருப்பு கண்ணாடி அணிந்து காலையில் இரண்டு நாட்களுக்கு வேண்டிய உணவை உண்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு பாட்டில் திறக்க போய் விடுவார்கள். இதில் எங்களது போராட்டம் வெற்றி ஏராளமானவர் பங்கு கொண்டனர். ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் போராததால் இன்னும் ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் சொல்லியிருக்கிறோம் என்று மைக் பிடித்து கூவியவர்களும் உண்டு.
இதற்கெல்லாம் சிகரமாக தமிழ் ஈழத்திற்கு போராட மனைவி, துணைவி, குளிர்சாதனம் என செட் அமைத்து காலையில் இட்லியும் மீன் குழம்பும் உண்டு, பின்பு பொரிச்ச பொட்டை கோழியும், அவிச்ச ஆமை குஞ்சும் அழைக்க போர் முடிந்தது, போராட்டம் நின்று விட்டது என்று அறிவித்து மதிய உணவிற்கு மூட்டை கட்டி ஓடி பின்பு வெற்றி என்று போஸ்டர் ஒட்டிய நிகழ்வும் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Anonymous said...

//பொரிச்ச பொட்டை கோழியும், அவிச்ச ஆமை குஞ்சும் அழைக்க போர் முடிந்தது//
hhahahaa

settaikkaran said...

நல்ல பகிர்வு, இப்போதெல்லாம் உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் போதாது; ஊடகங்கள் கண்டுகொள்ளணும் என்பதுதான் தங்கவிதி! :-)

நல்ல வேளை, மயிலாப்பூர், திர்லக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை இருக்கிற விரதங்களை யாரும் உண்ணாவிரதம் என்று விளம்பரப்படுத்துவதில்லை. கந்தர் சஷ்டி விரதம் என்று ஆறுநாட்கள் முருகபக்தர்கள் இருக்கிற விரதமும் அப்படியே!

நிகழ்வுகள் said...

பலரை புதிதாக அறிந்து கொண்டேன் நன்றிகள் ,,,,

மன்மதக்குஞ்சு said...

சூப்பர். பல விஷயங்கள் புதிது. அதுவும் பொட்டி ஸ்ரீராமுலு போன்ற உண்மைகள்.

அடுத்ததாக உண்ணும் விரத கொடுமை நடந்ததையும் எதிர்பார்க்கிறேன்.

rajamelaiyur said...

Final touch super

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அனைவரையும் தெரிந்து கொண்டேன்.

PRABHU RAJADURAI said...

திலீபனுக்கு முன்னோடியான பாபி சாண்ட்ஸை விட்டு விட்டீர்களே......அப்புறம் ஷர்மிளா?

Anonymous said...

நல்ல பகிர்வு...

உடம்பு மெலிய உண்ணாவிரதம் இருக்கிற இளம் கன்னியரை விட்டுடீங்களே....

கும்மாச்சி said...

வருகை தந்த அணைவருக்கும் நன்றி.

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

புனிதமான ஜனநாகப் போராட்டமாகிய உண்ணாவிரதம் கடந்தகாலத்தில் எப்படி இருந்திச்சுன்னும், இப்போ எப்புடி இருக்குன்னும் தெரிஞ்சுக்கிட்டேன்!

தேங்க்ஸ் சார்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.