பரமக்குடி பதட்டம்
பரமக்குடியில் நடந்த கலவரத்தில் காவற்படை துப்பாக்கியினால்
சுட்டதால் இது வரை ஆறு பேர்கள் உயிரிழந்திருக்கின்றனர். பலபேர் படுகாயமுற்று
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். மருத்துவமனை வாயிலில் கூடிய
உறவினர் கூட்டம் இன்னும் நகராமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். 144 தடையுத்தரவு
இருந்தும் அரசு பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இந்தக் கலவரம் ஒன்றும் திடீரென்று உணர்ச்சிப் பெருக்கில்
ஏற்பட்டதாக தோன்றவில்லை. செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவு தினம் அன்று, பரமக்குடியில்
கலவரம் ஏற்படுத்தி, தேய்ந்து வரும் சாதிக் கட்சிகள் தங்கள் இருப்பினை தூக்கி
நிறுத்தவே திட்டமிட்டு செய்திருக்கிறது என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்து.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியை அந்த
செப்டம்பர் 11 ல் யாரும் நினைவு கொள்ளவில்லை.
அரசு உயிர் இழந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து
விசாரணை வைத்தால் முடிந்துவிடும் விஷயம் இல்லை. உளவுத்துறை இதைப் பற்றி முன்
கூட்டியே அரசுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. அரசு இதை அலட்சியமாக
எடுத்துக்கொண்டுவிட்டது போலும். ஜான் பாண்டியனை சில நாட்கள் முன்பே அர்ரஸ்ட்
செய்து, ஏனைய கலவரக்காரர்களையும் முன் கூட்டியே சிறை பிடித்திருந்தால் தேவையில்லாத
உயிர் பலியையும், அரசுக்கு நேர்ந்த அவப்பெயரையும் தடுத்திருக்கலாம்.
இனி எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் “தும்பை விட்டு வாலை
பிடிக்கும் கதைதான்”.
ஆஜராவாரா அம்மா
பெங்களுருவில் நடக்கும் ஊழல் வழக்கில் அக்டோபர் இருபதாம்
தேதி அம்மா நேரில் ஆஜராகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அம்மா ஆஜராவார்களா
இல்லை மேலும் வாய்தாவா, இல்லை புதிய நாடகம் ஏதாவது அரங்கேறுமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.
அரக்கோணம் ரயில் விபத்து
அரக்கோணத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் நிறைய
உயிர் சேதம், பல பேர் காயமுற்றுள்ளனர். வழக்கம்போல் ரயில்வே அமைச்சர்
இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு அடுத்த வேலைகளை பார்க்கப்போய்
விடுகிறார். இன்னும் எத்துனை காலங்கள்தான் இதையே செய்து கொண்டிருப்பார்கள். சின்ன
தொழிற்சாலைகள் கூட இந்தக் காலத்தில் விபத்தை தடுக்க தனி பிரிவு அமைத்து அருமையான
திட்டங்களை செயலாக்கிகொண்டிருக்க, ரயில்வே என்ற பெரிய நிர்வாகம் இதில் ஒரு அடி
எடுத்து வைத்ததாக தெரியவில்லை. ட்ரான்ஸ்போண்டேர்ஸ் (Transponder), பிங்கர் (Pinger), எளிய மின்காந்த
அமைப்புகள் என்று எத்துனையோ உபகரணங்கள் எதிரில் வரும் அபாயத்தை முன் கூட்டியே
தெரிவிக்க வந்துவிட்டன. ஆனால் நமது ரயில்வே நிர்வாகம் இதை எல்லாம் அறிந்து
கொண்டதாக தெரியவில்லை.
நையாண்டி கவிதை
இலவசங்கள் இல்லையாம்
“டாஸ்மாக்”கும் இல்லையாம்
“நத்தமும்” “ஆற்காட்டரும்”
நர்த்தனம் ஆடுகின்ற
நாள் முழுவதும்
பவர் கட்டும் இல்லையாம்
அரசாங்க கஜானாவில்
ஒரு லட்சம் கோடியாம்
நீர் என்ன நரேந்திர மோடியா?
இல்லை மோடி மஸ்தானா??
--------------கவிஞர் கும்மாச்சி
ஜோக் கார்னர்
ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், "இந்த மாதிரி...அதாவது..."
"அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு"
"அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..."
"நல்ல விஷயம்.."
"இல்ல வர ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு
கூப்பிட்டுருக்கா"
"ஓ கலக்கு"
"அதாவது...
அவங்க வீட்ல எல்லாரும் சர்ச்க்கு போய்டுவாங்களாம்"
ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? "
"இல்ல..
எனக்கு இது தான் முதல் தடவ"
"ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்லி தர
வேண்டியத தந்து அட்வைஸ் பண்ணி அனுப்புறார்.
அந்தப் பொண்ணு வீட்டுக்கு போறான், எல்லோர்கிட்டயும் நல்லா பேசறான்.அவங்கம்மா,"சரிப்பா.ம்நாங்க சர்ச்சுக்கு போறோ,நீங்க பேசிட்டு இருங்க, சின்ன வயசுப்பசங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பிடிக்கிறதில்ல"ன்னாங்க.
அவன் அவசரமா “அப்படி எல்லாம் இல்லீங்க நானும் சர்ச்சுக்கு
வரேன்” என்றான்.
அந்தப் பொண்ணு பதட்டமா ஆனா அவன் காதுல
கிசுகிசுப்பா,"யேய் என்ன சொல்ற நீ இவ்ளோ
கடவுள் பக்தி உள்ளவன்னு என்கிட்ட சொல்லவேயில்லயே"
அவன் உடனே சொன்னான்,"உங்கப்பா ஃபார்மஸிஸ்ட்னு நீ மட்டும் சொன்னியா?"
வலைப்பூவில் படித்தது.
ஜொள்ளு