Monday, 7 November 2011

மழைக்கால நினைவில் “அவள்”


“யூ ஆர் ரியல் பெய்ன் இன் த நெக் பா”
“ஒய் டூ யு பாதர் மீ”
“ப்ளீஸ் டோன்ட் கீப் காலிங் மீ, லீவ் மீ அலோன்”.
இவ்வளவும் அலை பேசியில் என் பெண் எனக்கு செய்த அர்ச்சனைகள். இது ஒன்றும் புதியதல்ல. ஒவ்வொரு மழைக் காலத்திலும் நடக்கும் திருவிழாதான். போதாக்குறைக்கு என் மனைவியும் சேர்ந்து கொள்ளுவாள்.
“அப்படி என்ன தான் பாசமோ தெரியலை, நான்கூடத்தான் இங்கு மழையில் அல்லாடிக்கொண்டிருக்கிறேன் என்னை ஒன்றும் விசாரிக்கவில்லை” என்று ஒரு ரிவர்ஸ் ஸ்விங் போடுவாள்.
மகள் கல்லூரியிலிருந்து வீடு வந்து சேரும் வரை எனக்கு வேலை எதுவும் ஓடுவதில்லை. நான் எத்தனை மைல்கள் தள்ளியிருந்தாலும் மழை என்று தெரிந்தால் அவள் வீடு வரும்வரை விடாமல் நச்சரித்துக் கொண்டிருப்பேன். அதற்கு உண்டான பிரத்தியேக காரணம் “அவள்”.

நான் அப்பொழுது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து தொடர்வண்டி பிடித்து அந்த நிறுத்தத்தில் இறங்கி பிறகு அங்கிருந்து பேருந்து பிடித்து கல்லூரி வாசலின் நிறுத்தம் இல்லாததால் அந்த குளிர்பான தொழிற்சாலை நிறுத்தத்தில் இறங்கி ஒரு இருநூறு மீட்டர் நடந்தால் எங்கள் கல்லூரி, அதற்கு முன் சரேல் என்று இடது புறம் திரும்பும் சாலையில் இறங்கி சென்றால் அந்த கான்வென்ட் பள்ளி.

நான் ஏறும் பேருந்தில் தான் அவளும் ஏறுவாள். சற்றே மாநிறம், பளிங்கு  போன்ற முகம், கன்று குட்டி கண்கள். பேருந்தில் முன்பே வந்து இருக்கையில் இடம் பிடித்து அவள் வருகைக்கு காத்திருக்கும் மாணவர்களில் நானும் ஒருவன். பேருந்தில் கூட்டம் இருந்தால் அவள் பையை வாங்கி வைத்துக் கொள்வதில் எங்களுக்குள் ஒரு பெரிய போட்டி நடக்கும். பின்பு தொழிற்சாலை நிறுத்தத்தில் இறங்கி அவள் பள்ளிக்கு இடதுபுறம் திரும்பும் வரை பின்தொடர்வோம். 

அன்று காலை கல்லூரிக்கு கிளம்பும் பொழுதே வானம் இருண்டு காணப்பட்டது. மழை இப்பவோ அப்பவோ என்று கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது.  வழக்கம் போல் அவளை பள்ளிக்கூடம் வரை வழி அனுப்பிவிட்டு கல்லூரிக்குள் சென்றோம். முதல் வகுப்பு தொடக்கத்தில் மழை சோவென தொடங்கியது. மதிய இடைவேளை வரை மழை விடவில்லை. இடைவேளைக்குப் பின் முதல் வகுப்பு தொடக்கத்திலேயே பாதியில் நிறுத்தி புயல் அபாய எச்சரிக்கை வந்ததால் கல்லூரி விட்டு விட்டார்கள். 

பேருந்து நிறுத்தத்தில் அரை மணி காத்திருந்தோம் பேருந்து வரவில்லை. சற்று நேரத்தில் அந்த பள்ளியும் விட்டு விட்டார்கள். அவளும் அவளுடன் கூட இரு மாணவிகளும் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அந்த மதிய வேளையிலும் சாலையில் இருள் கவிழ்ந்திருந்தது. பேருந்து வெகு நேரம் வரை வராததால் அவர்கள் தங்கள் வழி நோக்கி நடக்க ஆரம்பித்தனர். நாங்களும் அவர்களை பின் தொடர்ந்து ரயில் நிறுத்தம் நோக்கி நடக்கலானோம். எங்களுக்கு ஒரு இருபது அடி முன்பு அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். 

தெருவெங்கும் ஒரே வெள்ளம், மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சாலையின் குறுக்கே உள்ள பாலத்திலும் மழை நீர் முழங்காலுக்கு மேலே ஓடிக்கொண்டிருந்தது. அந்த பெண்கள் மூவரும் அந்த பாலத்தை கடந்து கொண்டிருந்தார்கள். திடீரேனே அவர்கள் தத்தளிக்கவே நாங்கள் அங்கு ஓடி சென்றோம். பாலத்தின் ஓரத்தில் உள்ள “மேன்ஹோல்” இரும்பு மூடி இல்லாததால் அந்த இடத்தில்  “அவள்” கால் இடறி மழை நீர் வெள்ளத்தில் கால்வாயில் விழுந்ததை பார்த்து நாங்கள் கத்தவே சாலையில் இருந்து மற்றவர்களும் எங்களுடன் ஓடி வந்தனர். கால்வாயில் இருபுறம் இருந்த குடிசைவாசிகள் வெள்ள அபாயத்தினால் மேட்டில் இருந்தவர்களும் கால்வாயில் அவள் அடித்து செல்லப்படுவதை பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் கால்வாயில் குதித்து அவளை நோக்கி நீந்த ஆரம்பித்தான்.

அந்த கால்வாய் சிறிது தூரம் சென்று வலது புறம் திரும்பி பெரிய கழிவு நீர் ஆற்றில் கலக்கும். நாங்கள் அந்த ஆற்றின் அடுத்த மதகை நோக்கி ஓடினோம். எங்களுடன் குடிசைவாசிகளும் சேர்ந்து கொண்டனர். அவள் பை மதகில் துருத்தியிருந்த இரும்புக் கம்பியில் சிக்கியிருந்தது. அவளை காணவில்லை. பிறகு இரண்டு மணி நேரம் அங்கும் இங்கும் அவளை அலைந்து மழையில் தேடி வீடு திரும்பினோம்.

இரண்டு நாட்கள் கழித்து புயல் அபாயம் நீங்கி கல்லூரிக்கு செல்லும் பொழுது பேருந்தில் ஒரு மரண அமைதி. கல்லூரி சென்று  முதல் வகுப்பில் அன்று நடந்ததை நினைத்துக் கொண்டிருக்கையில் எங்களுக்கு அந்த செய்தி கிடைத்தது. அவர்கள் பள்ளி அன்று அவளின் மரணத்திற்காக  இரங்கல் தெரிவித்து விடுமுறை விட்டுவிட்டார்கள். அவளுடைய சடலம் ரயில் பாலத்தில் அடியில் உள்ள கழிவு நீர் ஆற்றில் கண்டு பிடித்ததாக பேசிக்கொண்டார்கள். 

நாங்கள் அன்று கல்லூரி விட்டு அந்த டீக்கடையில் ஒதுங்கிய பொழுது ரேடியோவில் நடிகவேள் “ப்ளேடி நாஸ்டி முனிசிபாலிட்டி” என்று திட்டிக்கொண்டிருந்தார்.

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனுபவம் பேசுகிறது..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சௌந்தர்.

சி.பி.செந்தில்குமார் said...

>படித்த நூல்களும் படித்துக்கொண்டிருப்பவையும்

இதில் இருந்து நீங்க சுஜாதா ரசிகர் என்பதை அறிந்தேன், நம்ம ஆள்

கும்மாச்சி said...

ஆம் தற்பொழுது "கணையாழி கடைசி பக்கங்கள்" படித்துக் கொண்டிருக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலில் அவள் க்கு ஏன் கொட்டேஷன்? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில்ல அவள்-க்கு ஏன் கொட்டேஷன்?

ஈரோடு வந்தா வாங்க, சுஜாதா புக்ஸ் அள்ளீட்டு போங்க

கும்மாச்சி said...

செந்தில் அழைப்பிற்கு நன்றி, என் பள்ளி விடுமுறை நாட்களை ஈரோடில் கழித்திருக்கிறேன், பன்னீர்செல்வம் பூங்காவும், அதை ஒட்டியிருந்த நூலகமும் என்னால் மறக்க முடியாதவை.

rajamelaiyur said...

//“ப்ளேடி நாஸ்டி முனிசிபாலிட்டி” என்று திட்டிக்கொண்டிருந்தார்.
//
இதுதான் timing

rajamelaiyur said...

இன்று என் வலையில் ..

தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்

SURYAJEEVA said...

கதையா அனுபவமா என்று அனுமானிக்க முடியாதபடி ஒரு நடை...

M.R said...

அழகான நடை நண்பரே ,பகிர்வுக்கு நன்றி

M.R said...

tamil manam 2

கும்மாச்சி said...

வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி எம்.ஆர்.

Philosophy Prabhakaran said...

ப்ளேடி நாஸ்டி முனிசிபாலிட்டி...

நம்பிக்கைபாண்டியன் said...

நல்லா எழுதியிருக்கீங்க!

'பரிவை' சே.குமார் said...

மனதை வாட்டும் நினைவு...
அருமை...

ezhil said...

உண்மைக் கதை போல்தான் தோன்றுகிறது மனதில் வலிக்கிறது....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.