Thursday, 5 January 2012

நாயர் சாம்ராஜ்யம்-(1)


கரம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. ஏரிகளும், நீர் தேக்கங்களும் வறட்சி கண்டு, பிளாட் போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருகின்றன. இன்று சென்னையின் குறுக்கே ஓடும், மின்சார இருப்புப்பாதையின், மேற்குப்புறம் ஒரு இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்த இடங்களெல்லாம் ஒரு இருபது முப்பது வருடங்கள் முன்பு
நீர்தேக்கங்கள் ஆகவும், வறண்ட காலத்தில் பிள்ளைகள் விளையாடும் மைதானமாகவும் இருந்தன என்றால் அது மிகையாகாது.

"நாயரின் சாம்ராஜ்யம்" இந்த ஆரம்ப கட்டத்தில்தான் தொடங்கப் போகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் மின்சாரம் இன்னும் வராமல் முனிசிபாலிட்டி சிப்பந்தி தினமும் இரவு வேளையில் கல்தூண் மீது இருக்கும் சிம்னி விளக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி தெரு விளக்கு எரியவைக்கும் காலம். தெருக்களுக்கு இன்னும் மெட்டல் வைக்கவில்லை. மண் ரோடுதான். 

இருப்புப் பாதையின் மேற்கே நகரத்தின் விளிம்பில் குறுக்கே ஓடும் தெருவில், இரவின் ஒற்றை விளக்கின் கீழே ஒரு தகரக் கொட்டகைதான் நாயரின் டீ கடை. அதில் எப்போதும் நாயர் ஒரு கட்டம் போட்ட கைலியுடன், ஒரு முண்டா பனியனும் அணிந்து முன்னால் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பார். அதை பெஞ்ச் என்று சொன்னால் உண்மையான பெஞ்ச் எல்லாம் கூட்டம் கூட்டி, நோட்டீஸ் விட்டு, போராட்டம் நடத்திவிடும். பெஞ்ச் மாதிரியான ஒரு சமாச்சாரம்.

வழிப் போக்கர்களுக்கு சூடான டீயும், மசால் வடையும், பட்டர் பிஸ்கட்டும் எப்பொழுதும் கிடைக்கும். காலை வேளைகளில் சூடான இட்லியும், வடைகறி என்ற ஒன்றும் கிடைக்கும். இதை அடிக்க இன்னும் சரியான காலை உணவு கண்டு பிடிக்கப் படவில்லை என்றே  சொல்லுவேன். இதை காலை உணவாக உண்டு, நாயர் கடைய டீயும் குடித்து விட்டு கட்டிட வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு இரண்டு மணி வரை மதிய உணவு தேவையிருக்காது. நமக்கு மாலை வரை பசி எடுக்காது.

நாயரின் கடை தொடங்கி ஒரு இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, அதனருகே ஒரு பொட்டிக்கடை முளைத்தது. இதில் வண்ண வண்ண முட்டாய்களும், கடலை உருண்டை, சிகரட், பீடி, புகையிலை போன்றவை கிடைக்கும். இந்தக் கடையை தொடங்கியவன் நாயரின் மைத்துனன். பெயர் நாராயணன், இவன் வந்தவுடன் தான் நாயரின் பெயர் “கோவிந்தன் நாயர் என்று வெளியே தெரிய ஆரம்பித்தது. பிறகு மெதுவாக இந்த இடம் படிப் படியாக வளரத் தொடங்கியது. குறுக்குத் தெருவின் மேற்கே மேலும் புதிய வீடுகள் முளைக்க ஆரம்பித்தன. நிறைய கட்டிட வேலைகளும் போய்க் கொண்டிருந்தன. நாயரின் கடையில் கூட்டம் அதிகம் தென்பட ஆரம்பித்தது. இப்போது நாயர் கடையில் மதிய சாப்பாடும் கிடைக்க ஆரம்பித்தது. நாராயணன் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியது.

பிறகு நாயரின் டீ கடை பின்புறம் ஒரு கொட்டகையும் அதில் ஒரு பெண்மணி குழந்தைகளுடன் காணப்பட்டாள். நாயரின் மனைவி அவள், கடைப் பக்கம் எப்பொழுதாவதுதான் வருவாள்., அவள் சில சமயம் கொட்டகையின் வெளியே அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருப்பாள். நாளடைவில் கொட்டகையின் அருகிலே ஒரு மாட்டுதொழுவமும் முளைத்தது. நாயர் கடைக்கு இப்பொழுது அவருடைய தொழுவத்திலிருந்தே பால் சப்ளை ஆகிக்கொண்டு இருந்தது.

இது நாள் வரை நாயரே, வாடிக்கையாளர்களுக்கு, டீயும், வடையும், காலை உணவும் சப்ளை செய்தும், கல்லாவையும் கவனித்துக் கொண்டிருந்தார்.  நாளடைவில் அவருக்கு ஒரு டீ மாஸ்டர் உதவியாளராக கிடைத்து விட்டான். ன் பெரிய மீசை வைத்துக் கொண்டிருப்பான். நடுத்தர வயதினன். வன் பெயர் எங்கள் எல்லோருக்கும் "மீசை" . நாங்கள் நண்பர்களுடன் நாயர் டீ கடைக்கு வந்தால், மீசை ஒரு டீ போடு, "ஒரு சிரிப்பு" எதைச் சொன்னாலும், மீசையிடமிருந்து ஒரு சிரிப்புதான் பதில் வரும். மீசையின் தோற்றத்திலிருந்து அவன் எந்த ஊர்க்காரன் என்று சொல்லமுடியாது. பேரைக் கேட்டாலும்  சிரிப்பான். நாங்கள் அவன் ஊமையாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் பொழுதுதான் அவனின் வாய் முத்து நாயரின் மனைவியைக் கண்டு உதிர்ந்தது.   
................தொடரும்

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நாயர் சாம்ராஜ்யம் இப்போ அரசியலாயிருச்சப்பா......

அக்கப்போரு said...

good start....மேற்கொண்டு தொடருங்க படிச்சுருவோம்.

கும்மாச்சி said...

சி.பி. வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அக்கப்பொரு "good start....மேற்கொண்டு தொடருங்க படிச்சுருவோம்"


நன்றி பாஸ்.

Unknown said...

ஆரம்பமே அமக்களமா இருக்கே..அசத்துங்க மாப்ள!

கும்மாச்சி said...

விக்கி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.