Sunday, 8 January 2012

நாயர் சாம்ராஜ்யம்-(2)


மீசை கேரளத்திலிருந்து வந்த நாயரின் உறவினன் என்பது அன்று எதேச்சையாக வந்த நாயரின் மனைவியுடன் ஏதோ சிரித்து பேசும் பொழுதுதான் எங்களுக்கு தெரியவந்தது.  எங்கள் நண்பர் பட்டாளம் எட்டுபேர் கொண்டது. எல்லோருக்கும் அடைமொழியுடந்தான் பேர். நான், இஸ்திரி நடராஜ், ப்ளூட் ரகு, அம்மண.......... சுருக்கமாக அ.கு.நடேசன், ஐயரு, பட்டா, டுபாக்கூரு மோகன், குட்டை. நாங்கள் மாலை சந்திக்குமிடம் நாயர் டீ கடை பெஞ்ச். நாயருக்கு அங்கு நாங்கள் எப்பொழுதும் இருப்பது பிடிக்காது.

நாயர் டீ கடையின் வியாபாரம் நல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. தினமும் இரவு ஒன்பது மணிக்கு கடை அடைத்து விட்டு பின்புறமுள்ள வீட்டிற்கு போய்க்கொண்டிருந்த நாயர் இப்போதெல்லாம், நடு இரவு பன்னிரண்டு மணிவரை கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். கடையின் உள்ளே இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மேசைகளும், நாற்காலிகளும் போடத் தொடங்கிவிட்டார். ஒரு டீ கடை மெல்ல ஒரு உணவு விடுதியாக மாறும் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. இவ்வளவு நடந்தாலும் நாயரின் மனைவியையோ, குழந்தைகளையோ அடிக்கடி டீ கடையிடம் பார்க்க முடியாது. மீசை இரவு வேளைகளில், விடுதியிலேயே உறங்கிக் கொள்வான். நாராயணன் நாயர் வீட்டிற்கும் மாட்டுதொழுவத்திற்கும் இடையிலே புதியதாக முளைத்த ஒரு சிறிய குடிசையிலே தங்க ஆரம்பித்தான்.

வளர்ச்சியுறாத இந்த இடத்தில் இப்போது மனித நடமாட்டம் அதிகமாகிக்கொண்டு இருந்தது. கடை இருப்பது ஒரு பிரதான வீதி என்பதால் வழிப்போக்கர்களும் அதிகம். நாயரின் டீ கடையின் எதிர் புறத்தில் சாலைக்கு அப்பால் இப்போது ஒரு கட்டிடம் உருவாகிக் கொண்டு இருந்தது. அங்கே வேலை செய்யும் சித்தாள்களும்,   சித்தாளிகளும், அருகிலேயே குடிசை போட்டுக்கொண்டு, அங்கங்கே தூளிகளும் தொங்கவிட்டுக் கொண்டிருக்க ஏறக் குறைய நகரில் காணும் நாடோடிக் குடியிருப்புகளாக காட்சியளித்தது. அவர்களால் இப்போது நாயர் கடையின் வியாபாரமும் பெருகிக்கொண்டு இருந்தது. நாராயணன் கடையிலும்  மேலும் அதிகமானப் பொருட்கள் காணப்பட்டன. நாராயன் கடை உண்மையிலேயே கோவிந்தன் நாயருடயதுதான்.

சில நாட்களில் கட்டிடம் உருவாகிக் கொண்டிருந்த இடத்தின் அருகே மேலும் இரண்டு சிறிய கடைகள் முளைத்தன, ஒன்று வேலாயுதத்தின் "பேக்கரிக் கடை". மற்றொன்று ஒரு தையல் கடை. தையற்கடையில் முதலில் வந்தவன் ஒருவன் நாயரின் சொந்தக்காரன் அச்சுதன். இவர்கள் எல்லாம் நாயரால் இறக்குமதி செய்யப்பட்டவர்கள். நாயரின் விசுவாசிகள். இவர்களுக்கு நாயர் கடையில் தான் டீ சாப்பாடு எல்லாம். இப்போது இந்த இடம் ஒரு குடியிருப்பு வரும் ஆரம்ப கட்ட நிலையில் இருந்தது.
கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டவுடன், இந்த இடத்தில் யார் வரப் போகிறார்கள் என்று நாங்கள் எதிர் பார்த்திருந்தோம். கட்டிடத்தில் கீழ்ப் பகுதியில் இரண்டு கடைக்கு உண்டான இடங்களும், பிற்பகுதியிலும், பக்கவாட்டிலும், ஒரு நான்கு குடியிருப்புகள், ஒற்றை அரை, ஒரு சமையல் அறையும், புறத்தே ஒரு நான்கு கழிப்பறைகளும், குளிக்குமிடங்களும் உருவாகியிருந்தன. மேலே முழுவதும் ஒன்றும் கட்டப்படாமல் மொட்டையாக இருந்தது.

முதலில் ஒரு மளிகைக் கடை திறக்கப் பட்டது. அதன் சொந்தக்காரர் திருநெல்வேலி நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பம் அவர் கடையில் பின்புறம் உள்ள புதியதாய் கட்டப்பட்ட குடியிருப்பில் இருந்தனர். இப்போது நாயர் கடையின் மேற்கே உள்ள இடங்களிலும் சிறியதும் பெரியதுமாக குடியிருப்பு தோன்றியதால், நாயர் கடையிலும் நாடார் கடையிலும் வியாபாரம் எகிறியிருந்தது. நாடார் வியாபாரத்தில் உதவ எடுபிடியாக இரண்டு பையன்களும், கணக்கெழுத ஒரு ஐயரும் வைத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது நாயருக்கு போட்டியாக நாடார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நாளடைவில் நாடார் கடையின் வடக்குப் புறத்தில் ஒரு விறகு தொட்டி திறக்கப்பட்டது. இந்த விறகு தொட்டியும் முதலில் நாடாருடையது என்றும், பின்னர் இல்லை நாடாரின் தம்பியுடையது என்றும் எங்களுக்கு செய்திகள் வந்துகொண்டிருந்தன.

அன்று காலையில் வழக்கம் போல் நாயரின் டீ கடை விடியற்காலை திறக்காதது கண்டு அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். நாயர் தனியாக இடிந்துபோய் வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருந்தார். அ.கு. நடேசந்தான் இருங்கடா என்ன என்று விசாரித்துவிட்டு வருகிறேன் என்று நாயர் வீட்டருகில் போனான்.

நாயரின் மனைவியையும் குழந்தைகளையும் காணவில்லை.
................தொடரும்

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.