ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று கிளம்பிய
கூட்டமும் இப்பொழுது ஊழல் புகாரில் சிக்கிக்கொண்டு உள்ளது. ஊழல் ஒழிப்பு மசோதா
தயாரித்த கூட்டத்தில் இருந்தவர் சொத்து வாங்கியதில் சொத்து மதிப்பை குறைத்துக்
காட்டி பதிவு செய்திருப்பதாக புகார். இது அரசியல்
காழ்ப்புணர்ச்சியின் காரணமாக
வீணாக பழி சுமத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறுகிறார். ஏற்கனவே
இவர் பெயரில் அலகாபாத் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாற்று வழக்குகள் நிலுவையில்
உள்ளன.
மேலும் கடந்து இரண்டு வாரங்களில் ஊழல் ஒழிப்பு
மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு எல்லா கட்சிகளும் ஒருமனதாக அதை
வரவிடாமல் தடுத்ததை நாடே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் லோக்பால்
என்று எவனாவது பேச்சை ஆரம்பித்தாலே “போங்கடா போக்கத்த பயலுவளா” என்று
சொல்லத்தோன்றுகிறது. ஆளும் கட்சியோ எதிர்கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே
ஒரு மசோதாவை தயார் செய்வதும், மற்ற கட்சிகளோ எது கொண்டு வந்தாலும் எதிர்ப்போம்
என்று கங்கணம் கட்டிக்கொண்டு நல்லாவே நாடகம் அரங்கேறியது.
பேசாமல் ஒரு சட்டம் திருத்தம் கொண்டுவந்து ஊழலுக்கு அங்கீகாரம் கொடுக்கலாம். ஊழலில்லாமல்
எதுவும் நடக்காது என்பது சுதந்திர இந்தியா கண்ட நித்திலமான உண்மை. ஊழல் வளர்ப்பு
மசோதா ஒன்றை புதிதாக தாக்கல் செய்தால் கட்டாயம் எல்லா கட்சிகளும் அதை ஒரு மனதாக
ஏற்கும். ஒவ்வொரு திட்டத்திலும் ஒரு நியமிக்கப்பட்ட விழுக்காடை அனுமதித்தால்
நீதிமன்றங்களுக்கு ஆனாவசிய ஊழல் வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா
அமைச்சர்களும் தங்கள் கடமையை விட்டுவிட்டு நீதிமன்றத்திற்கு ஹெலிகாப்டரிலும்
காரிலும் போய் கூண்டில் நிற்கவேண்டிய அவசியமிருக்காது.
அதே விழுக்காடை அரசாங்க அலுவலகங்களிலும் அமல்
படுத்தலாம். பாஸ்போர்ட் வாங்க வேண்டுமா பாஸ்போர்ட் கட்டணம் ஆயிரத்தி ஐநூறு ரூபாய்
என்றால், ஊழல் கட்டணம் நூற்றி ஐம்பது ருபாய் ஒரு பத்து விழுக்காடு வசூலித்து ரசீது
கொடுத்து விடலாம்.
எந்தத் துறையில் வேலை ஆக வேண்டுமென்றாலும்
அதற்குரிய அரசாங்க கட்டணத்துடன் ஒரு பத்து விழுக்காடோ எவ்வளவோ அதை ஊழல் கட்டணம்
என்ற பெயரில் வசூலித்து அதற்கான ரசீது கொடுக்கலாம். புதிய தொழில் தொடங்க வேண்டுமா
தொழில்துறையில் லைசென்ஸ் பெற கட்டணத்துடன் ஊழல் கட்டணமும் வசூலித்துக்
கொள்ளட்டும். அரசாங்க வேலைக்கு டெண்டரா, போடு பத்து விழுக்காடு.
இதற்கு ஒரு இலாகா நியமித்து லோகோவாக பெருச்சாளி
படத்தை வைக்கலாம். இந்த இலாகாவை கவனிக்கும் அமைச்சருக்கு ஊக்கத்தொகையாக ஊழல் கட்டண
வருவாயின் ஒரு பங்கினை ஊக்கத்தொகையாகவோ அல்லது கையூட்டகவோ, இல்லை அன்பளிப்பு என்று
பெற்றுக்கொள்ளலாம்.
பிறகு தேர்தல் நேரத்தில் ஊழல் கட்டண வசூலை
முன்னிலை படுத்தி கட்சிகள் ஒட்டு
கேட்கலாம். இதுதான் நமக்கு நன்றாக வொர்க்
அவுட் ஆகும்.
4 comments:
He... he...
சபாஷ்
ஃஃஃஃ பாஸ்போர்ட் வாங்க வேண்டுமா பாஸ்போர்ட் கட்டணம் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் என்றால், ஊழல் கட்டணம் நூற்றி ஐம்பது ருபாய்ஃஃஃஃ
உண்மையில் இதெல்லாம் படிக்கையில் என் பழைய ஊரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாழ்பட்டுப் போன யாழ் மருத்துவத்துறை (சில நெருடும் உண்மைகள்)
கும்மாச்சி அண்ணே! தலைப்பே டெரரா இருக்கேன்னு உள்ள வந்தேன்! உங்க ஐடியாக்களும் அது உணர்த்தும் செய்தியும் அருமை!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.