Wednesday, 25 January 2012

காவியாவின் குழந்தை


காவியாவிற்கு இன்று அலுவலகம் வந்தது முதல் ஏனோ வேலை ஓடவில்லை.

அவளது குழந்தையின் முகம் மீண்டும் மீண்டும் நியாபகம் வந்து பெற்ற வயிற்றை பிசைந்து எடுத்தது. இரண்டு நாட்களாக இரவில் தூக்கத்தில் “ஓவியா” கேவுவது ஒரே கவலையாக இருந்தது. கார்த்திக்கிடம் சொன்னால் குழந்தை கனவில் பயந்து இருக்கும் என்கிறார். எட்டு மாத குழந்தைக்கு கனவு வருமா? தெரியவில்லை.

காலையில் குழந்தையை வேலைக்காரியிடம் கொடுத்து விட்டு வருமுன் மனதில் ஏதோ ஒரு கலக்கம். இன்று அரை நாள் லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விடலாமா என்று தோன்றியது, ஆனால் மேனேஜரிடம் கேட்க தயக்கமாக இருந்தது, இன்னும் இரண்டு நாட்களுக்குள் ப்ராஜெக்டை முடிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இன்னும் பாதி வேலை கூட முடிந்த பாடில்லை. போதாத குறைக்கு இன்று காலை அலுவலகம் வந்தது முதல் ஒற்றை தலைவலி வேறு படுத்திக்கொண்டிருந்தது.

முதல் ஆறு மாதம் வரை மாமியார் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் ஒரு மாதம் முன்பு மாமனார் தனியாக எவ்வளவு நாள் இருப்பார் என்று அம்பாசமுத்திரம் சென்று விட்டார்கள்.

மதிய இடைவேளையில் ப்ராஜெக்டை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சிடுமூஞ்சி மேனேஜரிடம் “ஸார் தலைவலி, ஜுரம் வரும்போல் உள்ளது” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.  ஆபிஸ் விட்டு வெளியே வந்தவுடன் ஆட்டோ எளிதாகக் கிடைத்தது. அரை மணியில் வீடு வந்து, அழைப்பு மணியை அழுத்தினாள். வேலைக்காரி கதவைத் திறந்தாள், காவியாவை கண்டதும் அவள் முகம் மாறியது.

காவியா குழந்தையை காண நேராக பெட் ரூம் நோக்கி சென்றாள். குழந்தை கட்டிலில்லை. குழந்தை எங்கே? என்று வேலைக்காரியிடம் கேட்டுக் கொண்டே மற்றொரு அறைக்கு சென்று பார்த்தாள், குழந்தை அங்கும் இல்லை எனவே வேலைக்கரியிடம் மறுபடியும் குழந்தை எங்கே? என்று கேட்டாள்.  வேலைக்காரி பேந்த பேந்த விழித்தாள்.

காவியாவிற்கு பதட்டம் அதிகமானது. பக்கத்து வீட்டு மாமியிடம் கேட்கலாம் என்று போனால் அவர்கள் வீடு பூட்டியிருந்தது. திரும்ப வீடு வந்து வேலைக்காரியை அதட்டினாள். ஒன்றும் அவளிடமிருந்து பதிலில்லை. உடனே தன் கணவனுக்கு போன் செய்தாள். அவன் குழந்தை தவழ்ந்து வெளியே எங்கேயாவது போயிருக்கிறதா தேடு என்று போனை வைத்துவிட்டான். குழந்தையை வீடு முழுவதும் சுற்றி தேடினாள் காணவில்லை. வேலைக்காரி தேடுவதற்கு கூட வராததை அவள் பதட்டத்தில் கவனிக்கவில்லை.

அக்கம்பக்க வீடுகளில் விசாரித்தாள் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடியிருக்கும், திரும்ப வீடு வந்து சேர்ந்து வேலைக்காரியிடம் விசாரிக்க ஆரம்பித்தாள். வேலைக்காரி இப்பொழுது என்னை மன்னிச்சிருங்கம்மா என்று அழ ஆரம்பித்தாள். அப்பொழுது அழைப்பு மணி அழைக்கவே கதவை திறந்தவுடன் கார்த்திக் என்ன குழந்தை கிடைத்ததா இல்லையா? என்றான்.

இருவரும் சேர்ந்து வேலைக்காரியை மிரட்டவே அவள் உண்மையை ஒப்புக்கொண்டாள்.

இருவரும் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு அந்த நகரத்தின் கோடியில் உள்ள ஹைவேஸ் சிக்னலை நெருங்கும் பொழுது அங்கிருந்த ஒரு பிச்சைக்கரியிடம் குழந்தையைப் பார்த்தனர். காவியா ஓடோடி சென்று அவளிடமிருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டாள்.

வீடு வந்து சேர்ந்ததும் வேலைக்காரியை போலீசிடம் சொல்லிவிடுவோம் என்று விசாரித்ததில் அவள் குழந்தையை பிச்சைக்காரிகளுக்கு காலை பதினொரு மணி முதல் மூன்று மணி வரை வாடகைக்கு விடுவதாக ஒப்புக்கொண்டாள்.

காவியா இதை போலிசுக்கு சொல்லலாம் என்றதும், கார்த்திக் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

காவியா வேலைக்காரியை துரத்திவிட்டு வேலையையும் விட்டுவிட்டாள்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

banty said...

-Nice blog sharing information

கும்மாச்சி said...

Thanks for visiting my blog.

Chitra said...

ஒரு உண்மையான சம்பவத்தை மனதில் கொண்டு, இந்த கதையை எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றாக வந்து இருக்கிறது.

கும்மாச்சி said...

ஆம் உண்மை, என் மனைவி என்னிடம் சொன்ன செய்தியைத்தான் கதை ஆக்கியிருக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைக் கதை. கு்ழந்தைகள் விசயத்தில் விழிப்புடனிருக்கவேண்டும்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சி.பி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.