Friday, 4 May 2012

சிடு மூஞ்சி அகராதி


சுஜாதாவின் புதிய பக்கங்களில் கிடைத்த ஒரு பொக்கிஷம். அவருக்கே உரிய நக்கலுடன் அவரின் நண்பர் ஒருவரின் அகராதியாக எழுதப்பட்ட சில வார்த்தைகள் என்று  அதன் முன்னுரையிலேயே அசத்துகிறார்.

இனி சுஜாதாவின் வரிகள்---------------

அண்மையில் ஏன் நண்பர் எழதி வைத்திருந்த அகராதியை பார்க்க நேர்ந்தது. ரொம்ப தயக்கத்துடன் காட்டினார். அனுமதி கொடுப்பதற்கே மறுத்தார். “எதற்காக இதெல்லாம் நான் பொழுது போக்குக்காக எழுதி வைத்ததை......” என்று முரண்டு பண்ணினார். உங்கள் பெயரை வெளியிட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்ததும்தான் இசைந்தார். அகராதிக்கு பெயர் கேட்ட பொழுது “சிடு மூஞ்சி அகராதி” என்று அவரேதான் கொடுத்தார். சில வார்த்தைகள் மட்டும் இந்த மாதம் தந்திருக்கிறேன். மொத்தம் ஆயிரம் வார்த்தைகளுக்கு அர்த்தம் வைத்திருப்பதாக சொன்னார் நண்பர்; திருமணமாகாதவர். ஆனால் சிடு மூஞ்சி அல்ல. அகராதிதான் கொஞ்சம் நெகடிவ்.
 அச்சம், நாணம் புரியுது அது என்ன மடம், பயிர்ப்பு?

அன்னை--------------தியாகத்தின் மறுபெயர், அன்பின் வடிவம் மாமியார் ஆகும் வரை.
அச்சம்------------------மடம் நாணம் பயிர்ப்பு போன்றவற்றுடன் சேர்ந்த குணம் பெண்களிடம் இல்லாதது, பெண்களிடம் நமக்கு இருக்க வேண்டியது.
அன்பு-------------------தாய்க்கும் பிள்ளைக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், நண்பருக்கும் நண்பருக்கும் இடையே சில சமயம் இருப்பது.
இன்பம்----------------அனுபவிக்க முடியாத வயதில் கிடைக்கும் சந்தோசம்.
ஆறுதல்---------------சொல்வதற்கு எளிது, பெறுவதற்கு அரிது.
அலுவலகம்--------சில சமயம் வேலை செய்ய ஏற்பட்ட இடம்.
அக்ரகாரம்-----------சினிமா பிராமணர்கள் வாழும் பகுதி.
கடுப்பு------------பிறர் நம்மைப் பற்றி சொல்லும் பொழுது ஏற்படுவது.
அம்மி------------மலையாளிகள் அம்மாவை அழைப்பது, கல்யாணத்தில் மிதிப்பது, கல்யானத்துக்கு அப்புறம் அரைப்பது.
அப்பளம்-------அப்பாவின் சம்பளம்.
ஆர்வம்--------சொந்தக் காரியத்தில் காட்டும் தீவிரம்.
அம்புலி மாமா---ஒரு இலக்கியப் பத்திரிகை.
அம்பேத்கர்------ஹிந்துவாக தாழ்த்தப்பட்டு, பௌத்தராக உயர்த்தப்பட்டவர்.
நேரு-----------------அனைக்கட்டுகளுக்கும், கோயில்களுக்கும் வித்யாசம் தெரியாதவர்.
ஆத்மா------------நமக்குள் இருக்கும் கடவுளின் ஒரு பகுதி என்று சொல்கிறார்கள். வீட்டில் அரைத்த தோசை மாவு என்றும் சிலர் சொல்வர்.
ஆரோக்யம்----------இழந்தவுடன் மிகவும் விரும்பப்படும் நிலை.
ஆபிச்சுவரி |(இரங்கற்பா)------தாமதப் புகழ்ச்சி.
அறிவுரை-------பிறர் மேல் பரிசோதனை.
மரணம்-----------எனக்கு மட்டும் இல்லாதது.
ஆறறிவு----------மனிதனுக்கு மட்டும் உள்ள முட்டாள்தனம்.
மகாத்மா காந்தி----ஊருக்கு ஒரு தெருவுக்கு பெயர் வைக்க இறந்தவர்.
பகுத்தறிவு-----------நல்லதையும் கெட்டதையும் அலசிப் பார்த்து கெட்டதை செய்வது.
அற்பம்-------------(அல்பம் அல்ப்பம் என்னும் பாடம்) மற்றவன் தானத்தின் அளவு, அதே நீங்கள் கொடுத்தால் சிக்கனம்.
தாராளம்---------தமிழ் சினிமா நடனப்பெண்ணின் மார்பு.
அறிவு-------------நிச்சயம் உமக்கு இருப்பது, இல்லையேல் இந்த அகராதியை ஏன் படிக்கிறீர்.
அறிவியல்------------பரிசோதனை ரீதியான மூட நம்பிக்கை.
அறங்காவலர்----------இரும்புக் கடைக்காரர்.
கற்பு------------------கண்டு பிடிக்காத வரை உள்ள நற்பண்பு, பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய குணம், ஆண்களுக்கு இருந்தால் அதன் பெயர் இயலாமை.
இனிப்பு பண்டம்------டயபடிஸ்காரர்கள் ரகசியமாக சாப்பிடுவது.
ஐஸ்கிரீம்----------நுனிநாக்கின் காதலி.
பிராந்தி------------ஜலதோஷத்துக்கு மருந்து, சினிமா போகுமுன் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவது.
பட்டை சாராயம்----------கெட்ட மில்லி.
சாராயக் கடை----------குடி குடியைக் கெடுக்கும் என்ற போர்ட் தொங்கும் இடம்.
சிக்கனம்-----------டூத் பேஸ்ட் பிதுக்குவது, பிளேடில் தேதி குறிப்பது, செய்தித்தாளை எண்ணி சேகரித்து சைக்கிளில் எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு சொந்தப் படிக்கல்லுடன் போய் விற்பது.
பாப்பா----------அழுகை, பால், அழுகை.
பிஸ்கட்-----------பாப்பாவுக்கு கொடுக்க என்று வாங்கி நாம் சாப்பிடுவது.
குரங்கு-------------கடவுளின் முதல் முயற்சி, அடுத்தது அரசியல்வாதி.
காதல்-------------1)தூரத்து வயலின் இசை, கிட்டத்து கட்டில் முனகல், --------------------------------------2)இருபத்தைந்து வருஷங்களாக மணவாழ்க்கையில் இல்லாதது
-----------------------3)ஜுரம்
-----------------------4)காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலர்ந்து இரவில் குழந்தை அழும் சப்தம் கேட்டவுடன் அடங்கும் நோய்.
காமம்-----------நிசமான காதல்.
காதலன்--------தேவைக்கு அதிகமாக அசடு வழியும் இளைஞன்.
காதலி-----------தேவைக்கு அதிகமாக அசடு வழிய வைக்கும் பெண்.
காதலர் வாழ்க்கை---------இரண்டு மாதம்.
ஆசை-----------தும்மலின் போது போடும் சப்தம்.
தானதருமம்-----------தனக்குப் பின்தான், அதற்குப் பிறகு ஏதாவது மிச்சம் இருந்தால்.
அதிகாரி------------அதிகாரத்தின் மனைவி.
நல்ல அதிகாரி--------லஞ்சத்தை சரிசமமாக பங்கு கொடுப்பவர்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

சீனு said...

ஹா ஹா ஹா அருமையான அகராதி

கும்மாச்சி said...

சீனு வருகைக்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

புக்மார்க் செய்துவைக்க வேண்டிய பதிவு...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.