Monday, 18 June 2012

தேவன்


இந்த முறை விடுமுறையில் வாங்கி வந்த புத்தகம் தேவனின் “ஜஸ்டிஸ் ஜெகநாதன்”. அதை முழுமூச்சாக படித்து நேற்றுதான் முடித்தேன். எகனவே இவருடைய துப்பறியும் சாம்பு எனது சின்ன வயதில் படித்ததனால் அவருடைய மற்றைய நாவல்களையும், கட்டுரைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வெகுநாட்களாகவே இருந்து கொண்டிருந்தது.

ஜஸ்டிஸ் ஜெகநாதன்: நீதிமன்ற விசாரணைகளை வைத்தே முழு கதையையும் நகர்த்திக்கொண்டு போயிருப்பது வியக்க வைக்கிறது. அருமையான நடை. சாட்சியங்களின் கூற்று அவரவர் நிலவரப்படி எடுத்துரைப்பது நம்மை நேரில் கோர்ட் நிலவரங்களை பார்ப்பது போல் தோன்ற வைக்கிறது.

தேவனின் உண்மையான பெயர் மகாதேவன். செப்டம்பர் 8, 1913 ம் ஆண்டு திருவிடைமருதூரில் பிறந்தவர். திருவாடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு. இவர் பள்ளியில் சாரணர் படையில் இருந்த பொழுது அதன் தலைவராக இருந்த கோபாலசாமி என்பவர் மாணவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்ல சொல்லி ஊக்குவிப்பாராம். அவர் மூலமாக தேவன் அவர்களுக்கு கதை எழுத்தும் ஆர்வம் வந்திருக்கிறது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார்.

தன்னுடைய இருபத்தியோராவது வயதில் “ஆனந்தவிகடன்” பத்திரிகையில் துணை ஆசிரியராக சேர்ந்து பின்னர் நிர்வாக ஆசிரியராக இருபத்தி மூன்று ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். அப்பொழுது அவர் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக் கணக்கான நகைச்சுவை கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவருடைய “கோமதியின் காதலன்” திரைப்படமாக வந்தது. “ஜஸ்டிஸ் ஜெகநாதன்” ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 1974 ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இவருடைய படைப்புகள்
மைதிலி, மாலதி, கோமதியின் காதலன், துப்பறியும் சாம்பு, கல்யாணி, மிஸ் ஜானகி, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், லட்சுமி கடாட்சம், சி.ஐ.டி சந்துரு.

இவற்றைத் தவிர கட்டுரைகளும், சிறுகதைகளும் நிறைய வந்துள்ளன.

இவரைப்பற்றி கல்கி அவர்கள் “ஒரே ஒரு கட்டுரையினால் ஒரே நாளில் தமிழ் நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும், துக்கங்களையும் மட்டுமல்ல வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுகதுக்கங்களையும்  குதூகலத்துடன் எழுதக்கூடியவர் தேவன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவருடைய கட்டுரைகளின் தொகுப்புகள் ஒரே தளத்தில் காணக் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

பால கணேஷ் said...

இங்கே சென்றால் தேவனின் சில நாவல்கள் உங்களுக்குக் கிடைக்கும் நண்பரே... சிஐடி சந்துருவும் ராஜத்தின் மனோரதமும் முத்துக்கள். படித்துப் பாருங்கள்.
http://thamizhthenee.blogspot.in/2012/05/01.html

கும்மாச்சி said...

கணேஷ் அவர்களே தகவலுக்கு மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கணேஷ் சார் சொன்ன லிங்கில் ஒரு புத்தக அலமாரியே உள்ளது ! நன்றி இருவருக்கும் !

Anonymous said...

தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி...

Pas S. Pasupathy said...

நல்ல பதிவு. என் வலைப்பூவில் தேவனைப் பற்றித் தொடர்ந்து பல செய்திகளையும், அவருடைய பல கதை, கட்டுரைகளையும் அளித்து வருகிறேன். பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

http://s-pasupathy.blogspot.com

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பசுபதி அவர்களே, உங்களது தகவலுக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.