Friday, 12 October 2012

கால ஓட்டத்தில் காணாமல் போனவை-பாட்டுப்புத்தகம்

நாங்கள் சென்னை நகரின் விளிம்பில் வசித்ததால் எங்கள் இருப்பிடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் போனால் ஏதோ சென்னையை விட்டு வெளியே போனதாகிவிடும். அசோக் நகருக்கு மேற்கே போனால் ஜாபர்கான் பேட்டை, தற்பொழுது இவையெல்லாம் சென்னை மாநகராட்சியின் கீழ் வந்து விட்டது.

ஜாபர்கான்  பேட்டை விஜயா, சாந்தி என்று இரண்டு கொட்டகைகள். எங்களது பட்ஜெட்டில் அடங்கும் கொட்டகைகள். பொதுவாகவே புதுப்படம் வந்து ஒரு இரண்டு வாரங்களில் இந்த கொட்டகையை வந்து சேரும். டிக்கட் விலை முப்பத்தைந்து காசுகள் தான். (தக்காளி இதை வைத்து எங்களது வயதை அனுமானிக்காதீர்கள், நாங்கள் எல்லாம் இன்றைக்கும் அதே மாதிரி தான் இருக்கிறோம்). இதயக்கனி, இன்றுபோல் என்றும் வாழ்க, கௌரவம், உலகம் சுற்றும் வாலிபன், மற்றும் ஜம்பு, அன்பே ஆருயிரே போன்ற சரித்திர புகழ் பெற்ற படங்களை இங்குதான் பார்த்தோம். மேலும் இரவுக்காட்சியில் கில்மா காட்சிகளை போடுவார்கள்.

இந்த ஏரியாவில் படம் பார்க்க எங்களுக்கு வீட்டில் அனுமதி கிடைக்காது. கிருஷ்ணவேணி, ராஜகுமாரி பக்கம் தான் போக அனுமதிப்பார்கள். இருந்தாலும் எங்களுக்கு இது வசதியானது தான். ஏனென்றால் அங்கு பெஞ்ச் டிக்கட்டே எழுபைத்தைந்து காசுகள். வீட்டில் அதை மன்றாடி பெற்று விட்டால் இரண்டு படங்களுக்கான காசு ஆகிவிட்டது.

இந்தக் கொட்டகைகளில் இடைவேளையில் தவிட்டு பிஸ்கட்டுடன், படத்தின் பாட்டு புத்தகங்களும் விற்பார்கள். விலை பத்து பைசா தான். பெரும்பாலும் பார்க்கும் எல்லா படங்களின் பாட்டுப்புத்தகங்களையும் எங்கள் கூட்டத்திலேயே சற்று வசதியான பையன் வாங்கி விடுவான். இதயக்கனி படம் பார்த்து விட்டு வரும் பொழுது "இதழே இதழே தேன் வேண்டும்" பாட்டில்  அவன் மயங்கி அன்று பாட்டுப்புத்தகம் வாங்க மறந்து விட்டான். இருந்தாலும் விடாமல் அடுத்த நாளே படம் மற்றும் ஒரு முறை படத்தை பார்த்துவிட்டு புத்தகத்தை வாங்கி வந்து விட்டான். அதில் இருக்கும் "மெல்ல மெல்ல தொடுங்கள்" என்று ராதா சலூஜா கொஞ்சுவதை  மிகவும் கிறக்கத்துடன் பாடிக்கொண்டிருப்பான்.

அவனுடைய வீட்டில் மாடியில் அவனுக்கென்று கொட்டகை போட்ட தனி அறை அவனுக்கு உண்டு. அவனுடைய அலமாரியில் கிட்டத்தட்ட எல்லா பட்டுப்புத்தகங்களும் இருக்கும். முக்கியமாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் எல்லா பாட்டுப் புத்தகங்களையும் வைத்திருப்பான். சற்றே கீழுள்ள டிராயரை திறந்து பார்த்தால் அவன் அண்ணனின் தொகுப்புகளான "கொக்கோக" ஐட்டங்களை பார்க்கலாம்.

 கால ஓட்டத்தில் இந்த சினிமா பாட்டுப்புத்தகங்கள் வழக்கொழிந்து பொய் விட்டன,  மேலும் தற்பொழுது கரோக்கே போன்ற சமாச்சாரங்கள் இணைய தளத்தில்  வந்து விட்டதால் அவைகளை பார்க்க முடியவில்லை. அந்த தொழில் செய்தவர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

முத்து குமரன் said...

இந்த தலைமுறை அப்படி ஒரு புத்தகத்தை கண்டிருக்குமா என்பது சந்தேகமே! இப்போது, கதை தெரிந்து கொள்ள விமர்சனம் படிப்பது போல், பாட்டு புத்தகத்தின் கடைசி அல்லது முதல் பக்கத்தில் இருக்கும் கதை சுருக்கம் படித்தது இனிமையான நினைவு.

settaikkaran said...

பாட்டுப்புத்தகங்கள் இன்னும் நடைபாதைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. திரையரங்குகளில் தான் விற்பனை செய்யப்படுவதில்லை. இதயக்கனி....ராதா சலூஜா...ஹும்ம்ம்ம்ம்!

கும்மாச்சி said...

முத்துகுமரன், சேட்டை வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கு இன்னும் 'சில' கடைகளில் உண்டு...

NKS.ஹாஜா மைதீன் said...

ஆம்.....உண்மை..காலத்தின் போக்கில் கரைந்து போய்விட்டன...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஹாஜா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.