அன்று நாங்கள் வெளியே விளையாடிவிட்டு வந்தவுடன்
வீட்டில் அவ்வளவு பெரிய பிரளயம் நடக்குமென்று நினைக்கவில்லை. அப்பா அலுவலகத்திலிருந்து
வந்திருக்கும் நேரம், வீட்டில் ஒரே சத்தம். அவர் சத்தம் போடுவதென்றால் அதற்கு ஒரே
காரணம்தான் இருக்க வேண்டும். ஏதோ ஒரு புண்ணியவான் எங்களைப் பற்றி கொளுத்திப்
போட்டிருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்தோம் என்று தெரியவில்லை.
நாங்கள் என்றால் நானும் என் தம்பியும் பம்மிக்கொண்டு
பின் பக்கமாக வீட்டுக்கும் நுழைந்து அறையினுள் பதுங்கிக்கொண்டோம். அவருடைய சத்தம்
அறையினுள் தெளிவாக விழுந்தது. “இந்த பசங்களை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.
எல்லோரிடமும் வம்பு வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். கண்டவனிடமெல்லாம் பேச்சுக்
கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று வரட்டும் அவனுங்க சோற்றை கண்ணில்
காண்பிக்காதே” என்று அம்மாவிடம் கத்திகொண்டிருந்தார். அப்பொழுது அக்கா அறையினுள்
நுழைந்து “அடப்பவிகளா இங்கேதான் இருக்கீங்களா, அப்பா கண்ணில் படாதீர்கள், பட்டா
சட்னிதான்” என்று அவள் பங்கிற்கு பயமூட்டினாள்.
விஷயம் வேறொன்றுமில்லை. முதலியார் வீட்டில்
மாமரத்தை குத்தகைக்கு எடுத்தவன் வந்திருக்கிறான். பேசிய காசைவிட கம்மியாக கொடுத்துவிட்டு
மாங்காய்களை பறித்துக்கொண்டு சென்று விட்டான். அவருக்கு பேசிய காசு கிடைக்காததற்கு
நாங்கள் தான் காரணம். அவருடன் எங்கள் வீட்டு ஓனரும் சேர்ந்து அப்பாவிடம் “யோவ்
உம்ம பசங்களை என்னையா வளர்த்திருக்கீர், அவனுகள் ரகளை தாங்க முடியவில்லை. கோடை
விடுமுறை வந்தால் உங்கள் பையன்களுடன் சேர்ந்து மற்ற பையன்கள் செய்யும் லூட்டி
எங்களுக்கு வருடா வருடம் நஷ்டம் வருகிறது. இதற்கெல்லாம் தலைவன் உம்ம மூத்தவன்தான்”
என்று அப்பாவிடம் சத்தம் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள். வீட்டு ஓனர்க்கு
தெரியாது அவர் பையன் சந்துருதான் மூலகாரணம் என்று.
உண்மையில் அவன்தான் எங்களை ஏவிவிடுவான். அவர்கள் வீட்டு மாமரத்திலேயே எங்களை பறிக்க
சொல்லுவான். “ஏன்டா உங்க வீடுதான் நீயே பறியேன் என்றால், போடா எங்கப்பா எல்லா காய்களையும்
காலையில் எண்ணிவிட்டு போயிருக்கிறார், மேலும் எங்க வீட்டில் நானே திருடக்கூடாதுடா,
நீங்க பறிச்சிட்டு வாங்க நான் யாரிடமும் சொல்லமாட்டேன் என்று முதலியார் வீட்டில்
இருந்துகொண்டு சொல்லுவான். பறித்த காய்களில் ஒன்றே ஒன்றை எங்களிடம் கொடுத்துவிட்டு
மீதியை நாடார் கடைக்கு சென்று நாடார் “அம்மா கொடுத்துவிட்டாங்க ஒரு காய்க்கு
எட்டணா மேனிக்கு வாங்கி வரசொன்னாக” என்பான்.
முதலியார் வீட்டில் பறிக்க அவனும் கூட வருவான். ஆனால்
அவர்கள் வீட்டு ஜன்னல் அருகிலே நின்றுவிடுவான், நான் யாரும் வராம பார்த்துக்கிறேன்
நீங்க பறியுங்க என்பான். “டே பார்த்துடா திலகா கண்ணில் படக்கூடாது” என்பான். திலகா
முதலியாரின் பெண். ரேஸ் குதிரை மாதிரி ஒரு மாதிரி திமிறிக்கொண்டு நடக்கும். எங்கள்
கூட்டத்தில் இரண்டு மூன்றுபேர் அவளிடம் வழிவார்கள்.
நாங்கள் பறித்த காய்களை எல்லாம் வாங்கிக்கொண்டு,
இரண்டு காய்களை ரகசியமாக முதலியார் வீட்டில் ஜன்னலில் வைத்துவிட்டு நாடார் கடைக்கு
போவான்.அவர் “தம்பி இது என்ன உங்க வீட்டு காய் போல இல்லையே என்றால், நாடார் இது எங்க
கிராமத்து வீட்டிலிருந்து வந்தது, காலையில் போட் மெயிலில் மாமா கொண்டுவந்தார்”
என்பான். .
அன்று வீட்டில் அப்பாவிடம் வாங்கிக்கட்டிகொண்ட
பிறகு கொஞ்சம் அமைதியாக இருந்தோம். ஒருமாதம் கழித்து தெருவில் விளையாடிவிட்டு
வரும் பொழுது மறுபடியும் வீட்டில் ஒரே சத்தம். ஆனால் இந்தமுறை சத்தம் போட்டுக்கொண்டிருந்தவர்
முதலியார். வாங்கிகட்டிக் கொண்டிருந்தவர் எங்கள் வீட்டு ஓனர்.
நாங்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அக்கா இன்று
சந்துரு உங்களுடன் விளையாட வந்தானா என்று கேட்டாள். இல்லையே அவன் ரெண்டு நாளாக
விளையாட வரவில்லை என்றோம். ஏன் என்றதற்கு “சந்துருவும், முதலியார் பெண்
திலகாவையும் இரண்டு நாளாக காணவில்லையாம்” என்றாள்
2 comments:
யார் அந்த ஃபிகர்?
நல்லது...
தொடருமா...?
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.