Pages

Sunday, 14 April 2013

பி.பி.ஸ்ரீநிவாஸ்

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ், 1930 ம் வருடம் செப்டம்பர் 22ம் தேதி காக்கிநாடாவில் பிறந்தார். தந்தையார் பெயர் பாநிந்திரா சாமி, தாயார் பெயர் சேஷகிரியம்மாள். இவர் ஒரு பி.காம் பட்டதாரி.

இவர் முதன் முதலில் ஜெமினி பிக்சர்ஸ் ஹிந்தியில் எடுத்த மிஸ்டர் சம்பத் (1955) படத்தில் தன் முதல் பாடலை பாடினார்.

பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, ஹிந்தி என எல்லா மொழி படங்களிலும் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். தமிழ் படங்களில் இவர் ஜெமினிக்காக பாடிய பாடல்கள் மிக அதிகம். நல்ல வசீகரமான குரல். இவரை பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன் இவர் பாடும் ஸ்டைலை "பேசுவது மாதிரியே பாடுவார், பாடுவது மாதிரியே பேசுவார்" என்றார். அதன் அர்த்தம் அவரது பாடலை நன்று ரசித்தவர்களுக்கு புரியும்.

நான் கல்லூரி படிக்கும் நாட்களில் பழைய படங்களை தேடிப்பிடித்து பார்ப்போம்.அதுவும் பரங்கிமலை ஜோதி, பல்லாவரம் லக்ஷ்மி, பட்ரோடு ஜெயந்தி,  ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி போன்ற திரையரங்குகளில் ஒரு டிக்கட்டில் இரண்டு படம் காண்பிப்பார்கள். சில இடங்களில் ஒரு புது படம் ஒரு பழைய படம் அல்லது இரண்டு பழைய படங்களாக இருக்கும். நாங்கள் பெரும்பாலும் பழைய படங்களுக்கே செல்வோம். ஜெமினி படம் என்றால் அவரது பாடல்கள் நிறைய இருக்கும். அப்படி பார்த்தவை தான் சுமைதாங்கி, காத்திருந்த கண்கள், பாதகாணிக்கை போன்ற படங்கள். நானும் என் நண்பனும் பி.பி. ஸ்ரீனிவாசின் தீவிர ரசிகர்கள். அவரை எப்படியும் பார்க்கவேண்டும் என்றெல்லாம் பேசிக்கொள்வோம். கல்லூரி செல்லும் பொழுது முதல் நாள் இரவு வைத்த அவர் பாடல்களை கேட்டோம் என்று பெருமையடித்துக் கொள்வோம்.

அவரை வூட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் சந்திக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் கல்லூரி நாட்களில் எனக்கு கிடைக்கவே இல்லை. பின்னர் திருமணம் முடிந்த பின்பு மனைவியுடன் அங்கு ஒரு முறை சென்ற பொழுது அவரை சந்தித்தேன். எங்களுக்கு அருகாமை மேஜையில் அமர்ந்திருந்தார். சட்டை பையில் விதவிதமான கலரில் பேனாக்கள் சொருகியிருந்தார். மேஜையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஒரே ஒரு முறை எங்களை நிமிர்ந்து பார்க்கும் பொழுது வணக்கம் செய்தேன், அதற்கு பதில் வணக்கம் செய்தார்.  அவருடன் நாங்கள் பேசவில்லை.

இருந்தால் என்ன? அவர் பாடல்கள் மூலம் என்னிடம் எத்தனை முறை பேசியிருக்கிறார்.


இன்று அவரது பாடல்கள் என்னுடைய MP3 ப்ளேயரில் ஏகப்பட்டது இருக்கிறது.

அவரது பாடல்களில் நான் விரும்பி திரும்ப திரும்ப கேட்பது

  • நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு)
  • காற்று வெளியிடை கண்ணம்மா (கப்பலோட்டிய தமிழன்)
  • காலங்களில் அவள் வசந்தம் (பாவ மன்னிப்பு)
  • நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (போலீஸ்காரன் மகள்)
  • பொன் என்பேன் சிறு பூ என்பேன் (போலீஸ்காரன் மகள்)
  • நாளாம் நாளாம் திருநாளாம் (காதலிக்க நேரமில்லை)
  • பூஜைக்கு வந்த மலரே வா (பாதகாணிக்கை)
  • நேற்று வரை நீ யாரோ நான் யாரோ 
  • யார் யார் இவள் யாரோ (பாசமலர்)
  • பூவரையும் பூங்கொடியே 
  • சின்ன சின்ன கண்ணனுக்கு 
  • இன்பம் பொங்கு வெண்ணிலா வீசுதே 
  • தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றல் ஆடிடும்
  • எந்த ஊர் என்றவனே 
  • பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

இதில் உள்ள ஒவ்வொரு பாட்டையும் அவ்வளவு ரசித்திருக்கிறேன். இன்னும் இது போன்ற நிறைய பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று அவர் உயிர் நீத்த செய்தி கேட்டு மனது மிகவும் கனக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.



7 comments:

  1. இவர் பாடல்களுக்கும் நான் ரசிகனே!
    "இளமைக் கொலுவிருக்கும்". மயக்கமா தயக்கமா?, "பொன்னென்பேன்"... எப்போதும் கேட்கப்பிடிக்கும்.
    செய்தி அறிந்ததும் அவர் பாடல் தொகுப்பே ஒலிக்கவிட்டுள்ளேன்.
    மறக்க முடியாத குரலால் மென்மையாக எல்லோர் செவியையும் தழுவியவர்.
    அவர் ஆத்மா அமைதியுறும்.

    ReplyDelete
  2. அவருடைய பெயரில் உள்ள PBயின் விரிவாக்கம் இன்றுதான் தெரிந்துக்கொண்டேன்... அந்தப் பெயர் எப்படி வந்தது ?

    நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில் சிலவற்றை மட்டுமே நான் கேட்டிருக்கிறேன்...

    ReplyDelete
  3. பல பாடல்களின் மூலம் நம்மிடம் பாடிக் கொண்டுத் தான் இருக்கிறார்...

    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  4. வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிஎசின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

    ReplyDelete
  5. பிரதிவாதி பயங்கரம் \\ இப்படியெல்லாம் கூடவா surname வச்சிப்பாங்க!!!

    ReplyDelete
  6. அருமையான பாடகர்! அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்!

    ReplyDelete
  7. இவர் வாழ்ந்த காலங்களில்
    நாமும் வாழ்ந்தோம் என்று சொல்லிப்
    பெருமை பட்டுக் கொள்வோம்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.