Tuesday, 21 May 2013

நான், நாணா மற்றும் அவள் ...................மீள்பதிவு

நான், நாணா மற்றும் அவள்... என்ற கதையை மீள்பதிவு செய்கிறேன். சமீப காலமாக அரசியல் பதிவுகள் மற்றும் மொக்கை பதிவுகளில் காலத்தை கழித்ததால் இது போன்ற பதிவுகள் அதிகம் எழுதமுடியவில்லை. ஆகவே வெள்ளோட்டமாக இரண்டு வருடம் முன்பு எழுதிய இந்த சிறுகதையை சில திருத்தங்களுடன் மீள்பதிவாக சமர்ப்பிக்கிறேன். படித்து விட்டு குறை நிறைகளை பதிவு செய்யவும்.

நான், நாணா மற்றும் அவள்



இந்தக் கதையில் வரும் “நான் நானல்ல. நாராயணன் என்கிற நாணாவுக்காக 
 “நான் நாணாவாகி இருக்கிறேன். கதையில் “நான் நானாக  வரும்பொழுது நாணா என்ன ஆவான் என்பது தெரியாது. இனி கதை நாணாவின் வார்த்தைகளில்........

விடியற்காலையில் எதிர் வீட்டில் லாரியிலிருந்து சாமான் செட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். “எடோ அதே அவ்விடயானும் இறக்கு” என்று எங்களுக்கு புரியாத மொழியில் லாரிக்காரன் சம்சாரித்துக் கொண்டிருந்தான். நேற்றைய இரவு புல் மப்பில் படுத்து உறங்கி  காலையில் என்ன அவசரம் ஒரு பத்து மணிக்கு எழுந்திருக்கலாம் என்ற எனக்கு இந்த அகால வேலை விழிப்பு எரிச்சலை தந்தது.
என்னுடன் சரக்கடித்த வேலுவும், கோபால், சங்கர் இவர்கள் எல்லாம் அங்கு ஆஜராகி கூலிக்காரனுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடப் பாவிகளா சாவப் போற ஆயாவுக்கு தண்ணி குடுக்காத இந்தப் பசங்க எதிர் வீட்டிற்கு வேலை செய்கிறார்கள் என்றால் ஏதோ புதிய பிகர் அந்த வீட்டிற்கு வருவது சத்தியம் என்று நானும் காலை காபியை துறந்து அங்கு ஆஜரானேன்.

அந்த வீதிக்கு புதியதாக வந்த மனிதரை வார்த்தைக்கு வார்த்தை “சித்தா” இதை எங்கே வைக்க வேண்டும் என்று சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த என் நண்பர்கள் கூட்டம் கண்டு எனக்கு ஆச்சர்யம். இப்பொழுது வீட்டிலிருந்து “கொச்சச்சா” என்று கூவிக்கொண்டு வந்த அந்த பெண்ணைக் கண்டதும் ஆடிப்போய் நம்ம பசங்க விடியலில் வேலை செய்வதின் ஆச்சர்யம் விலகியது.


அவளுக்கு பதினெட்டு வயது இருக்கும், நல்ல மலையாளக் கட்டை, குதிரை வால் பின்னலிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் நடையிலும், கன்றுக் குட்டி கண்களையும் கண்ட நமது பி.ஜே.பிங்க (பயங்கர ஜொள்ளு பார்ட்டிங்க) கடை வாயில் வழியவிட்டுக் கொண்டு வந்த காரியத்தை துறந்தார்கள். கொச்சச்சன் என்று விளித்துக் கொண்டே வந்த அவள் எங்களை நோக்கி ஒரு புன்னகை வீசினாள். அதைக் கண்ட சங்கர் மூத்திரம் குடித்த மாடு போல் ஆகிவிட்டான். சித்தா நீங்க இருங்க, இவங்களோட பேசிக்கிட்டு இருங்க, நான் சாமானை எல்லாம் இறக்குகிறேன் என்று லாரிக்காரனுக்கு கை கொடுக்க சென்று விட்டான். அந்த வீட்டு அம்மாவுடன் உள்ளறையில் மற்றும் ஒரு பெண் குரல் கேட்கும் அவள் யாரென்று தெரியவில்லை.

அவர்களின் சித்தப்பா ஒரு வெட்டி என்று பேச்சு வாக்கில் புரிந்து கொண்டேன். அவருக்கு அந்த வீட்டில் மரியாதை இல்லை என்பதை அந்த பெரியவளின் நடத்தையிலும் அவர்களின் அம்மாவின் பேச்சிலும் புரிந்து கொண்டோம்.

அந்த குடும்பம் அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வேலைக்கு போய் வந்தவுடன் எல்லோரும் கோபால் வீட்டு மொட்டை மாடியில் அரட்டையை தொடங்குவோம். சித்தாவும் தவறாமல் ஆஜராகிவிடுவார். எங்களுடன் மப்பு பார்ட்டி, நைட் ஷோ என்று எல்லாவற்றிற்கும் ஒட்டிக் கொள்வார். அவரை கழற்றி  விடலாம் என்றால் சங்கர் முரண்டு பிடிப்பான். ஏதோ அவரை அவனின் மாமனார் போல் நடத்திக் கொண்டிருந்தான். சங்கர் இல்லாத பொழுது எங்களுக்கு சிகரட் வாங்குவது, தண்ணி வாங்கி வருவது என்று மற்ற நண்பர்கள் அவரை எடு பிடி ஆக்கிவிட்டார்கள். அவரும் சளைக்காமல் எங்களுக்கு உழைத்துக் கொண்டிருந்தார்.

சங்கர் சித்தாவை வைத்து அவளை எப்படியும் மடக்கிவிடலாம் என்று கற்பனை செய்து கொண்டு அவருக்கு அளவுக்கு அதிகமாகவே மரியாதை செய்து கொண்டிருந்தான். 

கடந்த மூன்று நாட்களாக சித்தாவைக் காணவில்லை. அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அண்ணனுடன் சொத்து தகராறு என்று பக்கத்து வீட்டு பாணலிங்கம் மாமா சொல்லிக் கொண்டிருந்தார். சித்தா இல்லாமல் சங்கருக்கு பசலை வந்து விட்டது.

ஒரு நாள் காலை நான் பேங்கில் பணம் எடுக்கலாம் என்று சென்றேன். அங்கு அந்த எதிர் வீட்டு அம்மாவும், கூட ஒரு பெண்ணும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். அந்தப் பெண் என்னைப் பார்த்து முறுவலித்தாள்.
அவள் நாங்கள் முதலில் பார்த்த பெண் அல்ல. ஆனால் அவள் தங்கை என்று முகஜாடை சொல்லியது. அன்று அங்கு பார்த்த பிறகு எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். அவள் ஊனமுற்றவள்ஆதலால் அவள் வெளியே அடிக்கடி வருவது இல்லை என்று என் அம்மா சொன்னாள்.

அவளின் அழகு என்னைக் கட்டிப்போட்டது. இப்பொழுது அவளுடன் நான் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன், இதை தான் நான் என் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவனும் இதை எழுதிக் கொண்டிருக்கிறான் அவன் அவளைப் பார்த்ததில்லை.
/
/
/
/


எதேச்சையாக நேற்று "நான்" அவளை அவள் வீட்டின் தோட்டத்தில் பார்த்தேன்.  "நானும்" இப்பொழுது சித்தாவை தேடிக்கொண்டிருக்கிறேன்.
டேய் நாணா கதையை மேலே சொல்லுடா, எங்கே போகிறாய்?.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

K said...

நாங்களும் இப்போது சித்தாவைத் தேடிக்கொண்டு இருக்கிறோம்!!

கும்மாச்சி said...

மணி வருகைக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் said...

அட.,

கும்மாச்சி said...

கருண் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு! இன்னுமொரு தரம் படிக்க வேண்டும்! பார்க்கலாம்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.