Saturday, 25 May 2013

டி.எம்.எஸ் - -கண்ணீர் அஞ்சலி

பின்னணிப்பாடகர் டி.எம்.எஸ் இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. ஐம்பதுகளில் பாடத்தொடங்கிய டி.எ.எஸ் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் தமிழ் திரையுலக பின்னணி இசையில் கொடிகட்டிப் பறந்தவர்.

மார்ச் 24, 1922ம் ஆண்டு மதுரையில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் மீனாட்சி ஐயங்காருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பிரபல வித்வான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக சங்கீதம் பயின்றார்.பல ஆண்டுகளாக இசைக்கச்சேரி செய்துவந்த டி.எம். எஸ் அவர்களை சுந்தர்ராவ் நட்கர்னி தன்னுடைய கிருஷ்ணா விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி" என்ற பாடலை பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரிகுமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களை அவருக்கு பாடுவதற்கு வாய்ப்புக்கிடைத்தது. மந்திரிகுமாரியில் அவர் பாடிய "அன்னம் இட்ட வீட்டிலே" பாடல்தான் முதலில் வெளிவந்தது.

நடிகர்திலகத்திற்கு முதலில் சிதம்பரம் எஸ் ஜெயராமன் அவர்கள்தான் பின்னணி பாடி வந்தார். பின்னர் நடிகர் திலகத்தின் விருப்பத்தை ஏற்று ஜி. ராமானாதன் அவர்கள் "தூக்குத்தூக்கி" படத்தில் அவரை எல்லாப் பாடல்களையும் பாட வைத்தார். "பெண்களை நம்பாதே", "ஏறாத மலைதனிலே", "சுந்தரி சௌந்தரி" போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. பின்னர் எம்.ஜி. ஆர், எஸ்.எஸ்.ஆர், ஜெய்ஷங்கர் போன்ற நடிகர்களுக்கும் நிறைய பாடல்களை பாடியுள்ளார்.

கண்ணதாசனின் வரிகள், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை, டி. எம். எஸ்ஸின் குரலில் வந்த தனிப்பாடல்கள் தனித்துவம் பெற்றன.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு கத்தார் தமிழ் சங்கம் சார்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு ஒரு நட்சத்திர ஓட்டலில் கலைஞர்களுடன் விருந்தில் கலந்து கொள்ள தமிழ் சங்கம் சார்பில் எனக்கு அழைப்பு வரவே குடும்பத்துடன் கலந்து கொண்டேன். அன்று டி.எம்.எஸ், பி. சுசீலா அவர்களுடன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தது மறக்க முடியாதது. அடுத்த நாள் இசை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நாற்பது பாடல்களை பாடினார்கள். அதில் டி.எம். எஸ் பாடிய "எங்கே நிம்மதி" இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நான் முதல்நாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது என்னுடைய விருப்பமாக சொல்லிய "சிந்தனை செய் மனமே" என்ற அம்பிகாபதி பாடலை பாடி எங்களை இசைவெள்ளத்தில் மூழ்கடித்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை சந்தித்து இந்த வயதிலும் இவ்வளவு சக்தியுடன் பாடுகிறீர்கள் ஐயா மிக்க நன்றி என்றேன். எல்லாம் "முருகன் செயல்" என்றார்.

அவருடைய பாடல்கள் ஏறக்குறைய எல்லாமே பிடிக்கும் அதுவும் குறிப்பாக அவர் பாடிய பழைய பாடல்கள். நான் பெற்ற செல்வம், மாசிலா நிலவே நம், வசந்தமுல்லை, எர்க்கரையின் மேலே, சித்திரம் பேசுதடி, தூங்காதே தம்பி தூங்காதே, யார் அந்த நிலவு  என்று சொல்லிக்கொண்டே போகலாம். சாரதா என்ற திரைப்படத்தில் அவர் பாடிய "மெல்ல மெல்ல அருகில்வந்து" என்ற பாடலில் அவர் குரலில் காட்டிய பாவம் வியக்கவைத்திருக்கிறது.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

Unknown said...

தமிழ் உச்சரிப்பை உலகிற்கு சொன்ன தமிழ்த் தாயின் தலைமகன் TMS !

கும்மாச்சி said...

பகவான்ஜி உண்மைதான், அவரது தமிழ் உச்சரிப்பு மிகவும் சுத்தம்.

Amudhavan said...

நல்ல அஞ்சலி. அவருடைய ஆண்மைக்குரலுக்கு மாற்று இன்னமும் தமிழ்த்திரையுலகில் வரவில்லை. அந்த அளவுக்கு பாவமும் உணர்ச்சியும் வெளிப்படுத்தும் பாடகர்களும் யாரும் தமிழில் இதுவரை வரமுடியவில்லை. சமயங்களில் தம்மைப் பற்றி மிக உயர்வாக அவரே பேசிக்கொள்வார் என்பது மட்டும்தான் அவரிடம் இருந்த ஒரே குறை. ஆனாலும் நாம் நேரில் பாராட்டும்போது அவர் சொல்லும் ஒரே வார்த்தை "எல்லாம் முருகன் செயல். அவன்தானேப்பா இந்தத் தொண்டையைக் கொடுத்தான். இந்தப் பெருமை எல்லாம் அவனுக்குத்தானேப்பா சேரணும்" என்பார். சென்ற வருடத்தில் ஒரு திருமண வரவேற்பில் அவரை மூன்றாவது முறையாக சந்திக்க நேர்ந்தது. கைகுலுக்கியபோது அவரது நடுங்கிய கரங்கள் அப்போதேயே மனதை என்னவோ செய்தது.

கும்மாச்சி said...

அமுதவன் உண்மை. அவருடைய குரலுக்கு இன்னும் மாற்று வரவில்லை.

வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அவரின் சிறப்பிற்கு நன்றி...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

அம்பாளடியாள் said...

காலத்தால் அழியாத கணீர் என்ற குரல் என் அபிமான பாடகர் இன்பத் தமிழ்காத்து நின்ற கோமகன் டி .எம் .எஸ் ஆன்மா சாந்தி பெற எனது அஞ்சலிகளும் இணையட்டும் இங்கே !

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.