Wednesday, 5 June 2013

ஆல் இந்தியா ரேடியோவில் எனது முதல் பன்ச் டயலாக்

நான் சிறுவனாக இருந்த பொழுது வானொலியின் சிறுவர் நேரம்  நிகழ்ச்சியில் முதலில் பேசிய பன்ச் டயலாக் பற்றி தெரிய வேண்டுமென்றால் உங்களுக்கு நெ. து. சுந்தரவடிவேலு அவர்களையும்,எங்களது ஏரியா சிறுவர் சங்கத்தையும், வானொலி அண்ணாவையும் தெரிந்திருக்க வேண்டும்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் ஒவ்வொரு ஏரியாவிலும் சிறுவர் சங்கங்கள் இருக்கும். அதில் சேர சந்தா எல்லாம் கட்ட வேண்டியதில்லை. பெரும்பாலும் அந்த சங்கங்கள் ஏதாவது ஒரு வீட்டு மொட்டை மாடியில் கூரை வேய்ந்த இடத்தில் இருக்கும். அதை நடத்தும் தலைவர் எல்லோராலும் "அண்ணா" என்று அழைக்கப்படுவார். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் உள்ளூர் "தல"களை வைத்து நடத்தப்படும். வருடத்திற்கு ஒரு முறை ஆல் இந்தியா ரேடியோ (சென்னை வானொலி நிலையம்) நடத்தும் சிறுவர் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒருவாரம் நிகழ்ச்சிகள் நடத்த அழைப்பு அனுப்பப்படும். அதற்கு இந்த சங்கங்கள் சென்னை வானொலி நிலையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இவை தவிர வருடம் இரண்டு முறை அல்லது மூன்று முறை உள்ளூர் பள்ளிக்கூட அரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவோம்.

அந்த வருடம் எங்களுக்கு சென்னை வானொலி நிலையத்தின் ஞாயிறு தோறும் வரும் சிறுவர் நேரத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதில் முக்கியமாக நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி. அப்பொழுது அவர் சென்னை பல்கலை கழகத்தில் துணை வேந்தராக இருந்தார். அவரைப் பற்றிய செய்திகள் என்னிடமும் மற்றுமொரு சிறுவனிடமும் சேகரிக்க சொல்லி பெரிய பொறுப்பை ஒப்படைத்தார் அண்ணா. இன்றைய காலம் போல் கூகிளாண்டவர், விக்கிபீடியா எல்லாம் கிடையாது. எங்கள் தாத்தா கணக்கு ஆசிரியராக ஒரு கல்லூரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவருடைய மாணவர்களில் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களும், மேல்கம் ஆதிசேஷையா அவர்களும் என்று அவர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.  அவரிடம் கேட்டதற்கு "நல்ல மாணவன்" என்று சொன்னார். அந்த விஷயம் எங்களுக்கு போறாது. பிறகு அவரைப் பற்றி தெரிந்துகொள்ள பல்கலை கழகத்திற்கே சென்றோம். அங்கு வரவேற்பில் இருந்த இஸ்லாமியர் ஒருவர் எங்களுக்கு அவரைபற்றிய செய்திகள் கிடைக்க உதவி செய்தார். அவர் எழுதிய நூல்கள் சிலவற்றை எழுதிக்கொண்டோம். பிறகு ஒரு பன்னிரண்டு கேள்விகள் தயார் செய்தோம். மொத்தம் நான்கு பேர் அவரை பேட்டி காண இருந்தோம்.



அதில் நானும் ஒருவன். எனது தம்பிக்கு அன்றைக்கே சிறுவர் நாடகத்தில் ஒரு வேடம்.காலை பத்துமணிக்கே சோற்று மூட்டையைக் கட்டிக்கொண்டு கடற்கரையோரம் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆஜராகிவிட்டோம்.மாலை நான்கு மணிக்குத்தான்  எங்களது நிகழ்ச்சி. காலையில் எங்களது பேட்டியை பதிய அழைத்திருந்தார்கள். ஆனால் துணைவேந்தர் சில காரணங்களால் வர முடியாமல் போய்விட்டது. எங்களுக்கு பெரிய ஏமாற்றம். இருந்தாலும் கடிதம் வாசிக்கும் நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கொடுப்பாதாக சொல்லி அங்கேயே காத்திருக்க சொன்னார்கள். ஒரு வழியாக மாலை நேரடி ஒலிபரப்பு தொடங்கியது. பேட்டிக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஒரு சிறுமியை பாட வைத்துவிட்டார்கள்.

பின்னர் வந்த சிறுவர் நாடகத்தில் நடிக்க வேண்டிய ஒரு சிறுவன் வராத காரணத்தால் எனக்கு அந்த வாய்ப்பை அளித்தார்கள். வானொலி என்பதால் எழுதிய வசனங்களை படிக்க வேண்டும், மனப்பாடம் செய்யவேண்டிய அவசியமில்லை.

மேலும் எனக்குக் கொடுத்த பன்ச் டயலாகிற்கு மனப்பாடம் எல்லாம் தேவையில்லை. நாடகத்தில் உள்ள ஐந்து கதாபாத்திரங்களும் எது சொன்னாலும் அவர்கள் பேசிய பிறகு நான் உடனே பேசவேண்டும்.

அந்த பன்ச் இதுதான்................


"அப்பவே சொன்னேனே"




Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரே வார்த்தை தான் என்றாலும் சந்தோசம் எழுத்தில் புரிகிறது... வாழ்த்துக்கள்...

Jayadev Das said...

:)) You are lucky!!

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.