Thursday, 13 March 2014

தெரு

நகரம் விரிவாதற்கு முன்பு, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்தது அந்த தெரு. கான்க்ரீட்டோ மெட்டலோ (தார் ரோடு) வைக்காத மண் தெருதான்.

தெருவின் மேற்கு கோடிவரைதான் நகர எல்லை. தெருவின் மேற்கு எல்லையில் போகும் குறுக்கு சாலை கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்டது. தெருவிற்கு முழுப்பெயர் உண்டு. நாளடைவில் அரசியல் காரணங்களிலும் ஒழியாத ஜாதி ஒழிப்பிலும் "தெரு"வின் முன் பகுதி காணாமல் போய்விட்டது.ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற மொட்டை தெருக்கள் இப்பொழுது குறைந்தது இரண்டாவது இருக்கும். செட்டி தெரு, முதலி தெரு, அய்யர் தெரு, சாரி தெருவெல்லாம் தார் பூசப்பட்டு வெறும் தெருக்களாக மாறிய காலம். எங்களது இளமை காலம். தெருவில் மொத்தமே பதினைந்து வீடுகள்தான் இருக்கும்.

எதிர் வீட்டில் நண்பன் ஹம்சாத் அலி, அவன் வீட்டு பக்கத்து காலி மனைதாண்டி வடிவேலு முதலியாரின் மகன் ராஜவேலு, எங்கள் பக்கத்து வீட்டில் செபஸ்டியன் மற்றும் ரவி, கிச்சா, ஸ்ரீதர்,  ஸ்ரீநிவாசன் என்கிற சீனா என்று நண்பர்கள் பட்டாளம். இதில் பெரும்பாலானோர் வாடகை வீட்டில்தான் இருந்தோம். பட்டணத்தில் எல்லோரும் அவரவர் வசதிக்கேற்ப வெவ்வேறு பள்ளிகளில் படித்தாலும் மாலை சபேச ஐயர் வீட்டுஅருகில் இருக்கும் காலி மனைதான் எங்களது விளையாட்டு மைதானம். சிலசமயம் எதிர் வீட்டு சுவற்றில் கரிகோட்டால் ஸ்டம்ப் வரைந்து கிரிக்கெட் விளையாடுவோம்.  பள்ளிநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தெருவில் உள்ள அத்தனை சிறுவர் சிறுமியர்களும் நடுத்தெருவில்தான் விளையாடிக் கொண்டிருப்போம்.

விடுமுறையில் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் யார் வீட்டிலாவது கூடி கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள் மாலை வெயில் தணியும்வரை ஓடும் எங்களது அக்கா தங்கைகள் மறுபுறம் அவரகளது விளையாட்டை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். எங்களது நண்பர்கள் எல்லோரது வீட்டிலும் எல்லோருக்கும் முழு சுதந்திரம் உண்டு. தெருவில் நாங்கள் ஏதாவது சில்மிஷம் பண்ணாலும் உடனுக்குடன் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு முதுகில் டின் கட்டப்படும். இருந்தாலும் அது ஒரு கனாக்காலம்.

பின்னர் அவரவர் டில்லி, அமெரிக்கா, துபாய் கொட்டாம்பட்டி என்று சிதறுண்டோம். எங்கள் நண்பர் கூட்டத்தில் இன்னும் ஒரு சிலர் அங்கேயே குழந்தை குட்டி என்று செட்டிலாகிவிட்டார்கள். ரவி கொஞ்சம் அவசரப்பட்டு மிகவும் உயர்ந்த இடத்திற்கு சென்று விட்டான். 

காலசுழற்சியில் அங்கொருவர் இங்கொருவர் என்று சந்தித்துக்கொண்டால் ஒவ்வொருவரின் நலன்களை பரிமாறிக்கொண்டோம். சமீபத்தில் ஹம்சாத் அலி தன மகளின் நிக்காஹ் விழாவிற்கு அழைத்திருந்தான். நான் எனது விடுமுறையை அதற்காக மாற்றி டில்லி வழியாக சென்னை செல்வது என்று முடிவாகி குடும்பத்துடன் டில்லி சென்றோம்.

நண்பர்கள் கூட்டத்தில் எஞ்சியவர்களில் ஓரிருவர் தவிர பெரும்பாலானோர் வந்திருந்தனர். அன்று எங்களது சிறுவயது நினைவுகளை அசை போட்டோம். நிக்காஹ் முடிந்தவுடன் ஹம்சாத் சென்னை வருவதாக சொன்னான். இன்னும் சிலரும் சென்னை வருவதாக முடிவாகியது.

நான் சென்னை வந்தவுடன் இரண்டு நாட்கள் கழித்து எல்லோரும் எனது வீட்டில் கூடினோம். ஹம்சாத் நாளை நாம் நம்ம "தெரு" விற்கு போய் எப்படி இருக்கிறது என்று பார்த்து வரலாமா?, இன்னும் அங்கு யார் யார் இருக்கிறார்கள்? என்று பார்ப்போம் என்றான்.  ஸ்ரீதர் இன்னும் அங்குதான் இருப்பதால் அவன் வீட்டிற்கு செல்வோம் என்று முடிவாகியது.

அடுத்த நாள் மாலை ஒரு நான்கு மணி அளவில் அங்கு சென்றோம், தெருவே அடையாளம் காண முடியவில்லை. இடைவிடாத பேருந்துகள், லாரிகள் போக்குவரத்தும் அதிகமாகி எங்களது தெருஅதம் இளமையை  இழந்திருந்தது. செபாஸ்டியன் குடியிருந்த வீடு இப்பொழுது பெரிய கல்யாணமண்டபமாக மாறியிருந்தது. அருகில் இருந்த காலி மனை இரண்டு மூன்று கடைகள் இருந்தன.தெருமுனையில் கார்பரேஷன் கிரௌண்டில் இருந்த உடற்பயிற்சி செய்யும் புஷ் அப், புல் அப் பார்கள் ஏணி எல்லாம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் கார்பரேஷன் அலுவலகம் இருந்தது.

எங்களது பழைய தெரு இப்பொழுது சாலையாக மாறியிருந்தது. இருந்தாலும் அடுக்குமாடி குடிருப்புகளுக்கு பஞ்சமில்லை. ஸ்ரீதர் வீட்டை அடையாளம் காண சற்று நேரமெடுத்தது. அவன் வீடு இடித்து கட்டப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்பாக மாறியிருந்தது. அதில் ஒரு பிளாட்டில் ஸ்ரீதரை கண்டு பிடித்தோம். அவன் வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் இறங்கி தெருவில் காலாற நடந்தோம்.

ஸ்ரீதர்தான் பழைய வீடுகளின் முகப்புகள் மாறியதை சொல்லிக்கொண்டு வந்தான்.

இந்த மாறுதல் ஒன்றும் எங்களை வியப்பில் ஆழ்த்தவில்லை. இதெல்லாம் காலப்போக்கில் மாறுவது இயற்கை எனபதில் எங்களுக்கு எந்த  மாற்றுக் கருத்தில்லை.

நாங்கள் அந்தத் தெருவில் கிட்டத்தட்ட நான்குமணிநேரம் இருந்தோம். தெருவில் சிறுவர், சிறுமியர்கள் கூட்டமோ விளையாட்டோ தென்படவில்லை.






Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

ராஜி said...

தெருவில் சிறுவர், சிறுமியர்கள் கூட்டமோ விளையாட்டோ தென்படவில்லை.
>>
இதான் சோகமே!

நம்பள்கி said...

பெஸ்ட்!
+1
இப்படி அசை போடுவதை விட சுகம் ஏதுமில்லை!
எந்த தெருவாக இருந்தாலும்...படத்தில் உள்ள தெரு உண்மையில் அழகாகவே இருக்கிறது

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்... அது ஒரு அழகிய கனாக் காலம்...

குழந்தைகளும் இயந்திரம் ஆன (ஆக்கிய) பின்... எங்கே பார்ப்பது...?

கும்மாச்சி said...

நம்பள்கி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

பழைய நினைவுகளை அசைபோடுவதில் உள்ள சுகம் அலாதியானது! பகிர்வுக்கு நன்றி!

மாதேவி said...

அது ஒரு கனாக் காலம்... .உங்கள் பகிர்வு. எங்களையும் பின்னோக்கி செல்லவைத்தது.

கும்மாச்சி said...

மாதேவி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.