Saturday, 31 October 2015

ரசம் சாதமும் ரசகுல்லாவும் (2)

என் தங்கையை கண்டபடி திட்டிக்கொண்டு தேஷ்ணாவை வேண்டா வெறுப்பாக வண்டியில் ஏற்றிக்கொண்டு  அவளது வீடு நோக்கி சென்றேன்.

தேஷ்ணாவின் வீடு நெருங்கும் பொழுது அவளை வழக்கமாக இறக்கிவிடும் கடை அருகில் நிறுத்திய பொழுது "ரவி அண்ணா இங்கு ஆள் நடமாட்டமே இல்லை வீட்டருகிலே இறக்கிவிடேன்". என்றாள். சரி என்று அவளது வீட்டின் வாசலில் இறக்கிவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.

அன்று இரவு நைட் ஷிப்ட், ஆதலால் வீட்டிற்கு வந்து குளித்து முடித்து தொழிற்சாலையை நோக்கி வண்டியை செலுத்தினேன். தொழிற்சாலையின் நுழைந்தவுடன் எனது செக்ஷனுக்கு போனால் எனக்கு முன்பு அங்கு பிரேம்குமார் இருந்தான். 

"உனக்கு என்னடா இங்கு வேலை" என்று என்னை கேட்டான். 

"டேய் இது என் செக்ஷன் உன் செக்ஷனுக்கு போ" என்றால் "டேய் உன்னை பாய்லரில் போட்டிருக்கிறார்கள்" என்றான். 

என்னது போன மாதமும் பாய்லர் இந்த மாதமுமா? இங்கு பாய்லர் வேலையைப் பற்றி சொல்லியாக வேண்டும். இது சரியான லொள்ளு பிடித்த வேலை. அங்குங்கு புகையும்  நீராவியும் லீக்காகி பாடாய் படுத்தும். போதாதா குறைக்கு பர்னரை வேறு கழற்றி அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். சூபர்வைசர் யாரையாவது பழிவாங்க வேண்டுமென்றால் இரண்டு மூன்று மாதங்கள் பாய்லரில் போட்டு தாளிப்பார்கள். முகர்ஜி என்னை எந்த காரணத்திற்காக போட்டான் என்று தெரியவில்லை. சரி அவரிடம் கேட்கலாமென்று அவனது அலுவலகம் போனால் ஆளில்லை. எங்கே என்று கேட்ட பொழுது ரவுண்ட்ஸ் போயிருக்கிறார் என்றார்கள். இருந்தாலும் ஷிப்ட் முடிந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று பாய்லர் செக்ஷனிலேயே ஆணி பிடுங்கினேன்.காலையிலே சந்தித்து கேட்ட பொழுது இன்னா கேக்குது ரொவி, பாய்லர் என்ன பிரச்சினை பண்றார்? என்று கேட்டார். 

சார் பாய்லர் பிரச்சினை இல்லை சார், ஏன் என்னை இந்த மாதமும் பாய்லரில் போட்டீர்கள் என்று கேட்டேன்.

இந்த மாசம் அல்ல அல்லா மாசமும் ரொவி பாய்லர் பண்ணுது, என்று கேனத்தனமாக பதில் சொன்னார். 

இந்தக் கூத்து ஒரு மாதம் தொடர்ந்தது. அடுத்த மாதமும் பாய்லரில் ஆணி பிடுங்கிக்கொண்டிருந்தேன், அப்பரைசல் நேரம் வேறு நெருங்குவதால் இந்த ஆளின் கோவத்திற்கு என்ன காரணம் கேட்கலாம் என்று அவரை ரௌண்ட்ஸ் வரும்போது மடக்கினேன்.

சார் உங்களுக்கு என் மீது என்ன கோவம் சொல்லுங்க சார் என்றேன்.

ரோவி வேலையைப் பாக்குது.........ரசம் சோறு துண்ணுது ரொசகுல்லா கேக்குது.........பாய்லர் ஓடுறாரு ............ரோவி பாக்குது என்று கரண்டில நசுக்கப்பட்ட  ரசகுல்லா போல மூஞ்சிய வைத்துக்கொண்டு போய்விட்டார்.

இந்த ஆளு என்ன சொல்றாரு, ரசம், ரசகுல்லா, பாய்லர் ஒன்றும் புரியவில்லை. 

அன்று வார விடுமுறையில் வீட்டில் இருந்தேன். வழக்கம் போல தங்கையின் நண்பிகள் க்ரூப் ஸ்டடி என்ற பெயரில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அது முடிந்தவுடன் எல்லாம் ஏதோ தியேட்டர் போவதாக பிளான் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

தங்கை வந்து "அண்ணா உனக்கு என்ன இன்னிக்கு பிளான்" என்றாள்.

என் கேக்குற உன் கூட்டத்துக்கு ஆட்டோ ஒட்டணுமா? 

இல்லை நாங்கள் எல்லாம் சினிமாக்கு போறோம், தேஷ்ணா வரலையாம் அவளை கொஞ்சம் அவள் வீட்டில் டிராப் பண்ணிடேன் என்றாள்.

போடி உனக்கு இதே பொழைப்பா போச்சு? எனக்கு வேற வேலை இருக்கு என்றேன்.

டேய் ப்ளீஸ்டா இன்னிக்கு ஒரு நாள் மட்டும், நான் அவர்கள் வீட்டுக்கு போனால் அவள் அண்ணன்  என்னை டிராப் செய்வதில்லையா? கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.

சரி என்று தேஷ்ணாவை கூட்டிக்கொண்டு கிளம்பினேன்.

அவர்கள் வீடு நெருங்கும் போது அண்ணா வீட்டுக்கு வாங்களேன் காபி சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றாள். இல்லை எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லியும் மிகவும் வற்புறுத்தவே வண்டியை அவள் வீட்டின் முன் நிறுத்திவிட்டு அவளுடன் சென்றேன்.

தேஷ்ணா வீட்டில் அவள் அம்மா இருந்தார்கள். எனக்கு காபி, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள். 

அவர்களிடம் ஆண்ட்டி இது என்ன உங்கள் பெண்ணின் பெயர் மிக விநோதமாக இருக்கிறதே என்று நான் கேட்க "தேஷ்ணா" என்றால் கடவுளின் பரிசு என்று பெங்காலியில் அர்த்தம் என்றார்கள்.

நான் என்ன செய்கிறேன் என்று கேட்கவே நான் எனது கம்பெனி பெயர் சொல்லி  அங்கு வேலை செய்கிறேன் என்றேன்.

அப்படியா உனக்கு பிரதீப்பை தெரியுமா? என்றார்கள்.

பிரதீப்பா தெரியவில்லையே? நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள் என்றேன். பிரதீப் முகர்ஜி அவர் அங்குதான் வேலை செய்கிறார் என்றார். இரு தேஷ்ணா "call daddy" என்றாள்.

தேஷ்ணாவின் அப்பா வந்தார். வந்தார் என்றா சொன்னேன் இல்லை அந்த கிராதகன் வந்தான்.

ரசம் இப்போ வீட்டுக்குள்ளேயே வருது............என்றான். அப்புறம் அவன் ஒன்றும் பேசவில்லை. ஒரு இரண்டு நிமிடம் அங்கு இருந்துவிட்டு, விறுவிறுவென்று உள்ளே சென்று விட்டான்.

எனக்கு இப்பொழுது அவனது லூசுத்தனமான கோவத்தின் காரணம் புரிந்தது. நான் வண்டியில் தேஷ்ணாவை கொண்டுவிடும் பொழுது எப்பொழுதோ பார்த்திருக்க்றான் போலும். இந்த ஆள் ஏதோ நம்மை தப்பாக நினைத்துகொண்டு தாளிக்கிறான் என்று தெரிந்து கொண்டேன்.

கம்பெனியில் என்னை தவிர்த்தான், மேலும் அந்த வருடம் அப்ரைசலில் என்னை பழிவாங்கிவிட்டான். இந்த ஆளுக்கு உண்மையை விளங்க வைக்கலாம் என்றால் என்னை முற்றிலுமாக தவிர்க்கிறான். அவனது பெண்ணிடமாவது கேட்கமாட்டானா? கிராதகன் 

ஒரு முறை தேஷ்ணா வீட்டிற்கு வந்த பொழுது அவள் அப்பா ஏதாவது அவளிடம் விசாரித்தாரா? என்று கேட்டதற்கு எதைப் பற்றி கேக்குறே எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றாள்.

இவ்வளவு  நடந்தும் என் தங்கை எனது "ஆட்டோ" வேலையை தொடர சொன்னாள். அவள் ஒரு லூசு அவளுக்கு இதெல்லாம் புரியாது. சொல்லியும் பயனில்லை.

இனி வருடம் முழுவதுமாக பாய்லரில் குப்பை கொட்டமுடியாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் குஜராத்தில் உள்ள வேறு கம்பெனிக்கு மாறினேன். அதற்கு பிறகு நான் முகர்ஜியையும் பார்க்கவில்ல தேஷ்ணாவையும் பார்க்கவில்லை.

சமீபத்தில் வேலை விஷயமாக ஜெர்மனி போய் திரும்புகையில்  ஃபிராங்க்ஃபர்ட் ஏர்போர்ட்டில் முகர்ஜியை சந்தித்தேன்.

இன்னா "ரொசம்" எப்படி இருக்குது? எங்கே இருக்குது? என்று கேட்டார். நான் விவரம் சொன்னேன். 

மிக மிக தயங்கி அவரிடம் சார் "ரசகுல்லா" இப்போ எங்கே? சார் என்றேன்.

சிகாகோவில் இருக்குது? ரண்டு குட்டி ரசகுல்லா கூட இருக்குது என்று சிரித்தார்..

பின்னர் எனது குடும்பம் பற்றி விசாரித்தார்.

சரி வா நாம கிளம்புது.............பிளேனு கெளம்புறார் என்றார்.

முற்றும் 


Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹாஹா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இரசிக்க வைக்கும் சிந்தனை... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

ஹ்ஹஹஹ் இரண்டையும் வாசித்துவிட்டுத்தான் கருத்து....

ரொசகுல்லா ரசம் இரண்டுமே நல்ல சுவை...ரசித்தோம்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.