காதலினால் மாதருக்கு அமில வீச்சுமுண்டாம்
கலவியில்லை எனில் கத்திக் குத்துமுண்டாம்
காதலினால் மாந்தருக்கு அரிவாள் வெட்டுமுண்டாம்
கௌரவக் கொலைகள் உண்டாம் ஆணவக்கொலைகளுமுண்டாம்
கோர்ட்டும் உண்டாம் வழக்குமுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் இவ்வுலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலக நிலைமை
காதலினால் வாழாமல் இருக்கக்கூடும்
கவலை சேரும் பெற்றோர் நிம்மதி குலையும்
ஆதலினால் காதல் செய்வீர் இவ்வுலகத்தீரே.............
சுவாதிகளுக்கும் இளவரசன்களுக்கும் சமர்ப்பணம்...................
6 comments:
விடயம் ரசிக்க முடியவில்லை நண்பரே வேதனைதான் வருகின்றது என்ன செய்வது ?
தமிழ் மணம் 2
வேதனைதான் கில்லர்ஜி...............என்ன செய்ய........
அங்கதச் சுவையில்
அழகாய்ச் சொன்னீர்
ஆதலினால்
காதல் செய்வீரா
நாட்டில் கண்ணீர் வடிப்போர்
எண்ணிக்கையைக் கூட்டுவீரா?
வேதனையை கவிதை ஆக்கியிருக்கிறீர்கள்...
கொலை செய்வதா காதல் ,முட்டாள்களின் காமம் என்று வேண்டுமானால் சொல்லலாம் !
"ஆதலினால் காதல் செய்வீர்"
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதயங்கள் இணையாது வெறும் உடல்கள் மட்டும் இணைந்த உடலுறவு மட்டுமே.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப் பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.
எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?
பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் சம்பிரதாயங்களுக்கும் கடமைக்கும் கணவன் மனைவி எனக் குறுகி, இறுதி வரை தொடர்கின்றன.
கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் "சாப்பாடு தயாரா?", "பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?" என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது.
உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள். நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம்.
கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.
இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள நெருக்கத்தையே காதல் என எண்ணி, ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாக சற்று நெருக்கமாக பழக நேர்ந்தாலே அது கல்யாணம் செய்து கொள்வது வரை சென்று விடுகின்றது.
இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.
காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ளவும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.
– நல்லையா தயாபரன்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.