Tuesday, 22 May 2018

தேன்மொழியும் டெக்கீலாவும்.

"கருப்பையா" சார் இன்றைக்கு என்னை அலுவலகத்தில் தொலைபேசியில் அழைத்திருந்தார். இப்பொழுதெல்லாம் அவரை பார்ப்பது  அரிதாகிவிட்டது, காரணம் அவரல்ல அவருடைய மாணவர்கள் நாங்கள் ஓடி ஓடி ஆணிபிடுங்கி கொண்டிருப்பதால் அவரை காண அடிக்கடி செல்ல முடியவில்லை.

ஏன் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் "பட்டா" என்கிற ஆர்யாபட்டாவால் கூட முடிவதில்லை. நான், பட்டா, ராஜசேகர், சூரி மற்றும் ஆறுமுகம்தான் அவருடன் இன்னும் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அரசு மேல்நிலை பள்ளியில் படித்தோம், அரசுப் பள்ளிகளின் அந்தக்கால எழுதப்படாத விதிகளின் படி ஒரே ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளை எடுப்பார். அந்த வகையில் கருப்பையா சார் எங்கள் வகுப்பிற்கு ஆறாம்  வகுப்பு தொடங்கி பள்ளி படிப்பு முடியும் வரை தமிழ், கணக்கு, ஆங்கில பாடங்களை எங்களுக்கு எடுத்தார். அவரது வகுப்புகள் எங்களுக்கு போரடிக்காது. மேலும் அவர் மற்ற ஆசிரியர்கள் போல் ட்யூஷன் எல்லாம் எடுப்பதில்லை. அவரது வகுப்பை ஒழுங்காக கவனித்தாலே போதும் கோனார், மற்ற இதர உபரி உதவிகள் தேவையில்லை. இப்பொழுது நான் சொல்ல வந்தது அவரது ஆசிரியத்திறமை பற்றி அல்ல.

கருப்பையா சாருக்கும் எங்களுக்கும் இருந்த ஆசிரியர் மாணவர் உறவைத்தாண்டி இருந்த நட்புதான். மதிய இடைவேளையில் இவர் மற்ற ஆசிரியர்கள் போல் ஆசிரியர் ஒய்வு அறையில் ஓய்வெடுக்கமாட்டார்.  எப்பொழுதும் ஏழாம் "சி" வகுப்பறையில் தான் அந்த நாற்பது நிமிடம் ஓய்வெடுப்பார். எங்களையும் மதிய உணவை எடுத்துக்கொண்டு அங்கு வரச்சொல்லுவார். ஒன்றாக உணவு உண்போம். பின்பு எங்களுடம் மதிய ஆரம்ப மணி அடிக்கும் வரை பேசிக்கொண்டிருப்பார். அவர் எங்களிடம் எப்பொழுதும் எங்கள் வயதுக்கு மீறிய பேச்சுகளை பேசியதில்லை. கோடை விடுமுறையில் மாலை வேளைகளில் அவர் வீட்டில் நாங்கள் அனைவரும் சந்திப்போம். அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் எங்களுக்கு வெகுநாட்கள் வரை தெரியாது.

எங்களது நட்பு பள்ளிப்படிப்பு முடிந்து, கல்லூரி சென்றாலும், ஏன் வேலை வெட்டி கல்யாணம் என்று நாங்கள் வேறு வேறு ஊரில் சிதறினாலும் அவருடனான எங்களது தொடர்பு சுத்தமாக முறிந்துவிடவில்லை.  உள்ளூரில் இருக்கும் பட்டா, ராஜசேகர், சூரி மற்றும் நான் அடிக்கடி அவரை சிந்திப்போம். முக்கியமாக அவருடைய பிறந்த நாளில் நாங்கள் சந்தித்து அவருடன் கொண்டாடுவது வழக்கம். அப்படி ஒரு முறை சந்திக்கும் பொழுதுதான் அவரது காதல் கதை எங்களுக்கு தெரிய வந்தது.  அது ஏதோ காரணத்தினால் நடக்காத போனதால் அவர் தனி ஆளாக இருந்திருக்கிறார். அனால் அதை பற்றி என்றும் அவர் அலட்டிக்கொண்டதில்லை. எப்பொழுதாவது நாங்கள் அவருடன் சோமபானம் அருந்தும் பொழுதுகூட அதைப்பற்றி எல்லாம் பேசமாட்டார். அவர் ஒன்றும் குடிகாரரும் அல்ல.

வெகு வருடங்களுக்குப் பிறகு ஆறுமுகம் விடுமுறையில் வந்திருந்தான். அவன் கருப்பையா சாருக்கு போன் செய்தது அவரை இன்று மாலை காண வருவதாக சொல்லியிருக்கிறான். அதனால் தான் கருப்பையா சார் இன்று என்னை அலுவலகத்தில் அழைத்தார். ஆறுமுகம் வெளிநாடுகளில்!!! பணிபுரிகிறான். கவனிக்க வெளிநாடுகளில்!! ஒவ்வொரு முறை வரும்பொழுதும் வேறு வேறு இடம் சொல்லுவான். கருப்பையா சார் என்னை போலவே மற்றவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து,  வர சொல்லியிருந்தார். பழைய படி நாங்கள் ஆறுபேரும் ஒன்றாக சேர்ந்த மிகவும் அற்புதமான தருணம். பேச்சு எங்களது பள்ளி நாட்கள் பற்றி போய்க்கொண்டிருந்தது. பேச்சு வாக்கில் ஆறுமுகம் தான் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தான். சார் சாப்பிடலாமா என்றான். அவர் வழக்கம் போல நீங்க சாபிடுங்கப்பா நான் வழக்கம் போல உங்களுடன் கம்பெனி கொடுக்கிறேன் என்றார். அதாவது நாங்கள் முடிக்கும் வரை பேருக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு குடிப்பார்.

ஆறுமுகம்  "டெக்கிலா " எடுத்தவுடன் ராஜசேகர் வழக்கம் போல அவர் வீட்டில் இருந்த கிளாஸ்களை கழுவிக்கொண்டு வைத்தான். பட்டா ஏன்டா உனக்கு இந்த கிளாஸ் தான் கெடைச்சுதா?   டெக்கில்லாவிற்கு ஒரு மரியாதை வேண்டாம்? அதற்கெல்லாம் ஷாட் கிளாஸ் வேண்டுமடா? பட்டாவிற்கு எல்லாம் அந்த நியமப்படி செய்யவேண்டும்.

பீர் மோர் போல குடிக்கணும்,
விஸ்கிய விட்டு விட்டு குடிக்கணும்
பிராந்திய பயந்துதான் குடிக்கணும்
ஜின்ன வண்ணமயமா குடிக்கனுமுன்னு

பாட ஆரம்பிச்சிடுவான்.

 சரி உனக்கு என்ன வேணும் பட்டா? இது நான்.

டேய் குமாரு வண்டில போயி கடகடன்னு ஷாட் கிளாஸ் வாங்கிண்டு வா? அப்படியே ஒரு ஆறு எலுமிச்சைப் பழமும்  வாங்கிண்டு வா என்று என்ன விரட்டிவிட்டான்.

எல்லாம் ஆகிருதிகளும் தயாரனாவுடன் எல்லோரயும் வலதுகையை நீட்ட சொல்லி புறங்கையில் எலுமிச்சை சாறினால் கோடுபோட்டு உப்பை தடவிவிட்டான். பின்னர் சரக்கை கிளாசில் ஊற்றி "சியர்ஸ்" என்று தொடங்கி வைத்தான்.  நாங்கள் கல்ப்ப...கருப்பையா சார் வழக்கம் போல சப்பிக்கொண்டு இருந்தார்.

பட்டா அவரிடம் சார் இதெல்லாம் இப்படி அடிக்கக்கூடாது என்று அவர தலையைப் படித்து ஏறக்குறைய முழு கிளாசையும் அவர் வாயில் போட்டி விட்டான். பின்னர் அவரது புறங்கையை அவர் வாயில் ஈஷி விட்டான்.

இனி அடுத்த ரவுண்டு, என்று அவருக்கு பழக்கமில்லாத காரியத்தை அளவுக்கு அதிகமாக செய்துவிட்டான். அவர் வேறு ஒரு உலகத்தில் சஞ்சாரிக்க ஆரம்பித்து விட்டார். வழக்கமாக எங்களுடன் நிதானத்துடன் பேசும் அவர் இன்று வாயை மூடிக்கொண்டு விட்டார். எங்கள் எல்லோருக்கும் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்த பட்டாவின் மேல் செம கடுப்பு , அவனை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தோம்.

சரிடா எவனாவது போயி சாப்பாடு வாங்கி வாங்க என்றான் ஆறுமுகம்.

விடுங்கப்பா....................தேன்மொழி.........................தேன்மொழி என்று சொல்லிவிட்டு மட்டையாகிவிட்டார் கருப்பையா சார்.

ராஜசேகரிடம் யாருடா தேன்மொழி என்று கேட்டதற்கு யாருக்கு தெரியும் ஒரு வேளை அவரது எக்ஸ் ஆக இருக்குமோ? என்று ஆளாளுக்கு புலம்பிக்கொண்டு இருந்தனர். அதற்குள் பட்டா டேய் தேன்மொழி நம்ம மூன்றாம் வகுப்பு கிளாஸ் டீச்சர்டா என்றான்.

அதற்கு ராஜசேகர் சும்மா பேத்தாத.........அந்த டீச்சருக்கு அப்பவே கல்யாணமாகி இரண்டு குழந்தை இருந்தது, என்று காதல் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டனர்.

அப்பொழுது கதவ தட்டப்படும் சத்தம்............யாரது இந்த நேரத்தில் என்று கதவருகில் சென்று கேட்டதற்கு "தேன்மொழி சார் கதவ திறங்க" என்றது கதவுக்கு அந்தப்புரம்.

கதவை திறந்தவுடன் சார் இருக்காரா? என்றாள்.

இருக்காரு என்னா விஷயம், ஆறுபேருக்கு சாப்பாடு சொல்லியிருந்தார் அதை கொடுக்கலாமுன்னு வந்தேன் சார் இல்லையா? என்றாள்.

இருக்காரு எங்ககிட்ட கொடு என்றதற்கு நான் சாரண்டதான் கொடுப்பேன் என்று விடு விடு வென்று வீட்டுக்குள் நுழைந்து........ஐயோ சாருக்கு என்ன ஆச்சு?

பின்பு நிலைமை உணர்ந்த அவள்...........இன்ன மனுஷன் அவரு அவருக்கு போயி இந்த மாதிரி நண்பர்களா? என்று கதவை மூடிவிட்டு சென்றாள் தேன்மொழி...............










Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.