Friday, 19 July 2019

அண்ணாச்சி

சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி வாழ்க்கை "பிறன்மனை நோக்கா பேராண்மை" கருத்தில் கொள்ளாததன்  விளைவு.

சாதாரண மளிகைக்கடை வைத்து தொழிலை தொடங்கி, பின்னர் சின்னதாக கே.கே நகரில் ஒரு  சிற்றுண்டி விடுதியை தொடங்கி பின்னர் அதை விஸ்தரிக்க செய்வதற்கு எத்தனை உழைப்பும், சிந்தனையும் வேண்டும்.

70 களில் கே.கே. நகரில் தொடங்கிய மளிகைக்கடையை அடுத்தே தனது முதல் ஓட்டலை திறக்கிறார். சென்னையில் பணிபுரிந்துகொண்டிருந்த பொழுது வளசரவாக்கத்தில்  கிரிக்கட் விளையாட விடுமுறை தினங்களில் மோட்டர்பைக் சகிதமாக ஒரு புல் டீம் கிளம்புவோம். அப்பொழுதுதான் கே.கே நகர் பணிமனையை அடுத்த அந்த சாலை போடப்பட்ட புதிது, காலை  ஏழு மணிக்கு கிளம்பி கே.கே நகர் சரவணபவனில் காலை சிற்றுண்டியை முடித்து வளசரவாக்கம் மாந்தோப்பை நோக்கி கிளம்புவோம். அந்த ஓட்டலில்  ஒரே ஒரு சின்ன ஏசி ஹால்தான் இருக்கும், மொத்தம் நான்கு மேஜைகள். அப்படி ஒரு வாரம் போகும்போதுதான் எங்களது பக்கத்து மேஜையில் (ஒரே காலியான மேஜையில்) டைரக்டர் எ.ஜெகநாதனும், நடிகரும் செந்தாமரையும் அமர்ந்து ஏதோ சீரியசாக "இந்த ஏகாம்பரம் பேரை சொன்னா" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பிறகு அது போல அந்த சரவணா பவனில் நிறைய கதை விவாதங்களை பார்த்திருக்கிறோம். அப்போழுதே அந்த ஓட்டல் சிற்றுண்டிகள் சுவையாக இருக்கும். பின்னர் எங்களது கிரிக்கட் டீம் சமீபத்தில் உலககோப்பையை இழந்த இந்திய அணியைப்போல சிதறி, வேலை நிமித்தமாக பலர் அமேரிக்கா, ஆஸ்திரேலியா, அபுதுபாய், அண்டார்ட்டிக்கா என்று சிதறிவிட்டோம்.

பின்னர் சில வருடங்கள் கழித்து தாய் நாடு திரும்பிய பொழுது சரவணா பவன் என்ற பெயரில் தி. நகர், பீட்டர்ஸ் ரோடு என்று மேலும் சில சரவணபவன்கள். கல்லா  பெட்டி அருகில் பெரிய கிருபானந்தவாரியார் படம் இருக்கும், அருகில் அண்ணாச்சி அமர்ந்து கொண்டிருப்பார். பிறகு சென்னையில் பல இடங்கள், டெல்லி, அமேரிக்கா, துபாய் என்று அண்ணாச்சி தனது வியாபார கரங்களை நீட்டி கிட்டத்தட்ட உலகமெங்கும் வியாபித்து விட்டார். இது சாதாரண விஷயமல்ல.

அதே சமயம் அண்ணாச்சி, முதலில் கிருத்திகா, பின்னர் ஜீவஜோதி விவகாரமும் பெரிதாகிக்கொண்டிருந்தது. அப்பொழுதே வாரியார் சுவாமிகள் அண்ணாச்சியிடம் அடுத்தவன் பெண்டாட்டி மேல் ஆசை படுவது தவறு என்று சொன்னதாக செய்திகள் வந்தது.

அண்ணாச்சியின் ஜோதிட நம்பிக்கை, பெண்ணாசை  அவரது  அறிவுரைக்கு செவிமடுக்கவில்லை போலும். பின்னர் நடந்த வாய்தா, வழக்கு சரித்திரம். அண்ணாச்சி காசைக்கொண்டு எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்று நம்பியிருந்ததாக தெரிகிறது.

இந்த வழக்கில் காவல்துறைக்கு கிடைத்த தடயங்களை வைத்து மிகவும் வலுவான குற்ற பத்திரிகை தயாரித்தார்கள். வழக்கும் அண்ணாச்சிக்கு எதிராக திரும்பி தண்டனை வழங்கியது. இடையில்  அண்ணாச்சி தடயங்களை அழிக்க, வழக்கை  வாபஸ் வாங்க ஜீவஜோதியை தாமாகவே சென்று மிரட்டியது ஆக!! எல்லாவற்றிற்கும் அவர் ஈட்டிய பொருள் காக்கவில்லை.

கடைசியில் அவரது ஆயுள் தண்டனையை சிறையில் கழிப்பதை தவிர்க்க  (உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தும்) தனது முயற்ச்சியை மேற்கொண்டார்.

இருந்தும் விதி வலியது.


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

KILLERGEE Devakottai said...

என்ன இப்ப அண்ணாச்சி மீது பாசம் ?

கும்மாச்சி said...

பாசம் இல்லை கில்லர்ஜி, பரிதாபம், அறிந்து செய்யும் தவறுகளின் முடிவு இதுதான் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

நாடாண்ட நாடார் வம்சம் said...

அடே முட்டாள் ,
இது ஜெயலலிதாவால் ஜோடித்த பொய் வழக்கு
அப்பாவி அண்ணாச்சி மாட்டிகிட்டார்

கும்மாச்சி said...

அப்படிங்களா அறிவுக்கொழுந்தே..........பொய் வழக்கு என்றால் அதை நிரூபித்திருக்கலாமே? சாந்தகுமார் அப்ப என்ன தானே தன்னை கொலை செய்துகொண்டாரா? அண்ணாச்சி ஜீவஜோதிய திருமணம் செய்ய முனைந்தது, பின்னர் நேரில் சென்று மிரட்டியது எல்லாம் உண்மை இல்லையா? இவருக்குதான் எல்லா உண்மையும் தெரியும் போல.

ஸ்ரீராம். said...

உண்மைதான். உழைப்பால் உயர்ந்த மனிதர், பலருக்கும் பல்வேறு விதமான உதவிகள் செய்தவர்..

ஆனால்...

ஒரு தவறால் பெயரிழந்தார், நிம்மதியிழந்தார், உயிரிழந்தார்.

வெங்கட் நாகராஜ் said...

ஆசையே துன்பத்திற்குக் காரணம்! வேறென்ன சொல்ல.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.